9. ரத்தச் சகதியின் காலடித் தடங்கள் 1

மற்றத் துறைகளை விட அரசியலில் அதிர்ஷடமென்பது கொஞ்சம் கூடுதலாகவே தேவைப்படும் சமாச்சாரம். அதுவும் இந்தியாவில் இந்த அதிர்ஷ்ட சமாச்சாரம் தான் முக்கிய இடத்தை வகிக்கின்றது. கால், அரை, முக்கால், முழு அதிர்ஷ்டம் என்று ஒவ்வொரு வகையாகப் பிரிந்து கிடந்தாலும் நாம் இப்ப பார்க்கப்போகும் மன்மோகன் சிங் முழுமையான அதிர்ஷ்ட சாலியே.

பிரணாப் முகர்ஜிக்கு கீழே வேலை ரிசர்வ் வங்கி கவர்னராக பணி புரிந்தவர். இப்பொழுது அவருக்கே கட்டளை போடும் பிரதமர் பதவி? சோனியாவுக்கு பிரதமராக வாய்ப்பு இருந்த போதிலும் கூட உள்ளேயிருந்த ஆசையைக் கடவாய்க்குள் அடக்கி வைத்தேயிருக்க வேண்டிய சூழ்நிலை.

மன்மோகன் சிங் இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளச் சம்மதம் தெரிவித்த விசயம் சோனியாவிற்கு மட்டுமல்ல மொத்த அமெரிக்கத் தொழிலதிபர்களுக்குமே சந்தோஷமாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

காரணம் திருவாளர் மன்மோகன் சிங் படித்தவர், பண்பாளர், திறமையானவர் என்பதெல்லாம் விடத் தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதலை அட்சரம் பிறழாமல் கடைபிடிக்க நினைப்பவர். சுருக்கமாகச் சொல்லப்போனால் கடைத் தேங்காயை எடுத்து வழியில் பார்க்கும் பிள்ளையாருக்கு உடைக்கும் பக்தி மான்.

அக்மார்க் அமெரிக்கா பக்திமான்.

உலகமே வேறொரு பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் ஏன் தனிமைப்பட்டு நிற்கவேண்டும் என்பதைத் தனது தீர்க்க தரிசன பார்வையில் கண்டு கொண்டு ஆட்சிக்கு வந்த சித்தர்.

இவர் ஆட்சிக்கு வந்த போது இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ள கடல்புலிகள் கன்னாபின்னாவென்று வளர்ந்து இருந்தார்கள். இலங்கையில் பெரும்பாலான கடல் பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு ஜீவதாரமாக இருந்தவர்கள்.

முக்கியமாக விடுதலைப்புலிகளுக்கு வந்து கொண்டிருக்கும் ஆயுதக்கப்பல்கள் அத்தனையும் நினைத்த நேரத்தில் விரும்பும் இடத்தில் நிறுத்தி தங்கள் பகுதிகளுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் அளவுக்கு வலுவானவர்களாகக் கடல்புலிகள் இருந்தார்கள்.

இந்திய உளவுத்துறை கொடுத்த தகவல்களின் அடிப்படையில் மன்மோகன் சிங் அரசாங்கம் இதைத்தான் முக்கியமானதாக எடுத்துக் கொண்டது.

2004 ல் இந்திய கப்பற்படை தலைவராகப் பதிவியேற்ற அட்மிரல் அருண் பிரகாஷ் தன் முதல் வேலையாக இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கடற்புலிகளை அடக்குவது குறித்த ஆலோசனைகளை இலங்கை கப்பற்படையுடன் பேச்சு வார்த்தை மூலம் பல புதிய திட்டங்களை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. இப்போது இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த நாடாவது இந்தியாவுடன் ஒரு தொழில் ரீதியான ஒப்பந்தம் போட்டு அது செய்தித் தாளில் வருகின்றதென்றால் அதற்குப் பின்னால் ஒரு பெரிய லாபச்செயல் இருக்கிறது என்று அர்த்தம். இரண்டு நாடுகளுக்குமே அந்த லாபம் இருக்கும்.

இது தான் ஒவ்வொரு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே.

இப்போது மன்மோகன் சிங் அரசாங்கம் 2004 அக்டோபர் 15ந் தேதியன்று இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் போட்டது. அதாவது இலங்கைக்கு 15 கோடி டாலர் கடனாக இந்தியா கொடுப்பதாக அந்த ஒப்பந்தம் கூறியது. இதன் மூலம் இலங்கை இந்தியாவிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்.

அதன் பிறகு இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் சிரில் ஹெராத் தும் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ரஞ்சித் இஸ்ஸாரும் அக்டோபர் 18 அன்று சந்தித்தனர். அக்டோபர் 19 பூனைக்குட்டி வெளியே வந்தது.

அது அறிக்கையாக வெளியே வந்த போது பின்வருமாறு இருந்தது.

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி

தமிழ் போராளி இயக்கங்களைப் பற்றி உளவு சார்ந்த விசயங்களை இரு நாடுகளும் பறிமாறிக் கொள்வது.

இருநாடுகளையும் பாதிக்கக்கூடிய சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளைக் கூட்டு நடவடிக்கைகள் மூலம் கண்காணிப்பது.

இதன் தொடர்ச்சியாக இருநாடுகளும் பல விதமாகக் கூட்டு நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வது.

இது தான் அதன் சராம்சம்.

இந்த அறிக்கை வெளியானதும் இந்தியாவின் ராணுவத் தளபதி என்.சி.விஜ்

2004 நவம்பர் 1 அன்று இலங்கை சென்று ஊடக மக்களிடம் சொன்ன வாசகங்கள் இது.

“இப்போது இலங்கை அமைதியான காலகட்டத்தில் இருந்த போதிலும் இரண்டு நாடுகளுக்கும் இராணுவ ரீதியான பறிமாற்றம் அவஸ்யம் தேவை. இலங்கை இராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதும், ஆயுதப்பறிமாற்றமும் முக்கியமாகும்” என்றார்

இலங்கையில் இருந்து அவமானகரமாக இந்திய அமைதிப்படை திரும்பியதற்குப் பிறகு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் இருந்து சென்றவர் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியா இராணுவத் தளபதி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த போது சந்திரிகா டெல்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை 2004 நவம்பர் 3 -7 அன்று சந்தித்தார்.

ஏற்கனவே வாங்கிய தொகையுடன் இப்போது மன்மோகன் சிங் தனது அடுத்த அன்புப்பரிசை அதாவது இலங்கையின் ஊரக வளர்ச்சிக்காக 10 கோடி டாலரை வழங்குவதாக அறிவித்தார்.

சந்திரிகா இப்போது வந்தது வெறுமனே கடன் வாங்க மட்டுமல்ல. கண்களை உறுத்திக் கொண்டேயிருக்கும் புலிகள் இயக்கத்தை ஒரு கை பார்த்து விட வேண்டும் என்பதன் ஆதாரப்புள்ளியையும் இங்கேயிருந்து தான் தொடங்கி வைத்தார். சந்திரிகா கரைத்த விதத்தில் மன்மோகன் சிங் மூலம் அடுத்த அறிக்கை வெளியானது.

“இலங்கைக்குத் தேவைப்படும் அனைத்து விதமான இராணுவ உதவிகளை இந்தியா வழங்கும். வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உள்ள விமானத் தளங்களை இந்தியா சீரமைத்து கொடுக்கும். விடுதலைப்புலிகளின் கடற் போக்குவரத்தையும், கடல்புலிகளின் செயல்பாடுகளையும் இந்தியா கவனித்து இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும். இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து இடப்படும்” என்று அந்த அறிக்கை சொன்னது.

ஏன் விடுதலைப்புலிகளின் கடல்புலிகளைக் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும்.

அது தான் பிரபாகரன்?

கடல்புலிகள் வலுவாக இருந்த பகுதிகளுக்குள் சிங்கள கப்பற்படை மறந்தும் கூட நுழைந்து விட மாட்டார்கள்? அவ்வளவு மரியாதை என்றால் நீங்களே யூகித்துக் கொள்ளுங்க. இதன் சார்ந்த மற்ற விசயங்களைப் பின்னால் பார்க்கலாம்.

இதே சமயத்தில் அதாவது 2004 மார்ச்சில் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா வெளியேறினார். ஒவ்வொரு தமிழர்களும் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அளவுக்குத் தன் திறமையைக் காட்டிய மகிந்தா ராஜபக்ஷேவும் இப்போது களத்திற்கு வந்து விட்டார்.

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *