9. அமைதிப்படை(IPKF) உருவாக்கிய பாதை

திலீபன் இறந்த சமயத்தில் நான் அங்குப் பயணப்பட்டேன். அந்தச் செய்தி அப்போது தான் பொது மக்கள் மத்தியில் தாக்கத்தையும் இந்தியாவின் மீது சொல்லமுடியாத எரிச்சலையும் அதிகப்படுத்தியிருந்தது. விடுதலைப்புலிகள் கையில் ஒப்படைக்கப்பட்ட பண்டத்தரிப்பு என்ற இடத்தில் மக்கள் ஏராளமாகக் கூடியிருந்தனர். அவர்கள் இறப்பு நிகழ்ச்சிக்குக் கூடினார்கள் என்பதை விட அடுத்து என்ன நடக்கப்போகின்றதோ? என்ற அச்சம் தான் முக்கியமாக இருந்தது.

ஆனால் அடுத்த நாள் புலிகள் தரப்பில் மக்களைக் கூட்டி ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் அமைதிப்படை அதிகாரிகளிடம் மகஜர் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுருந்தது. ஆனால் அதிகாரிகள் அதை வாங்க மறுத்தனர். பலாலிக்குச் செல்லும் அத்தனை பாதைகளிலும் இராணுவ முகாமும், வீரர்களின் தலைகளைத் தாண்டித்தான் அலுவலகத்தைச் சென்று அடைந்தனர். அதிகாரிகள் எவரும் மக்களின் தார்மீக கோபத்தையோ, அவர்கள் கொண்டு வந்த மகஜர் குறித்து அக்கறை ஏதுமின்றி ” உங்களைக் காப்பதற்குத் தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம். மகஜர் தேவையில்லை ” என்று மறுக்க ஆசேமடைந்த பொதுமக்கள் கல்வீச்சில் இறங்கினர். அங்கே தேவையில்லாத பதட்ட சூழ்நிலை உருவானது.

புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் சண்டை தொடக்கம் பெற்ற போது இருதரப்பில் கடுமையான சேதம் உருவான செய்திகள் வரத்தொடங்கிய போது கயட்ஸ் தீவுக்கு வந்து விட்டேன். மூளாய்க்கும், காரைநகர் கடற்படைத்தளத்திற்கும் இடையே இருந்த கடல்பாலத்தைப் புலிகள் தாக்கி அழித்து இருந்தனர். அப்போது சிங்கள இராணுவத்தினர் அந்தப் பாலத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுக்கொண்டுருந்தனர். காரணம் அப்போது அங்குக் கடுமையான உணவுப் பஞ்சம். விலைகள் மூன்று மடங்காகத் தாறுமாறாக ஏறத் தொடங்கியது.

ஒரு மழை ஓய்ந்துருந்த போது திடீர் என்று வந்து இறங்கிய இந்திய இராணுவத்தினர் ஹெலிகாப்டலில் இருந்தபடியே காரைநகர் தளத்தில் இருந்து குண்டு வீசத் தொடங்கினர். அரைமணி நேரத்திற்குப் பிறகு தான் அந்தப் புகைமூட்டத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் ஓடத் தொடங்கினார்கள். தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அருகில் இருந்த கோவிலுக்குள் சென்ற மொத்த மக்களையும் சுற்றி வளைத்து, பரிசோதனை செய்யப்பட்டு இறுதியில் 35 பேர்களைப் பிரித்துச் சுட்டுக்கொன்றனர்.

பிடியில் இருந்த பெண் கற்பழிக்கப்பட்டதும், அவர் அன்றே தூக்கில் தொங்கியதும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த இடத்தில் இருந்த புலிகள் யுத்தம் தொடங்கிய போதே வெளியேறி விட்டார்கள்.

வெளியேறியவர்களை, உள்ளே தான் இருக்கிறார்கள் என்றபடி வந்தவர்கள் அடைந்த ஏமாற்றமும் அதுவே இறுதியில் வானொலியில் தீவு கைப்பற்றப்பட்டது என்றும் ஒலிபரப்பப்பட்டது.

மொத்தமாக ஒவ்வொரு இடத்திற்கும் கமாண்டர்கள் வருவதும், மொத்த மக்களையும் கூட்டத்தை ஒரு இடத்தில் நிறுத்தி ” உங்களில் புலிகள் எவராவது இருந்தால் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்ற கேட்டு இறுதியில் ஏமாற்றத்துடன் சிலரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போய் அடித்து உதைத்து பாதி வழியில் விட்டுவிட்டு சென்று விடுவதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டுருந்தது.

நடு இரவில் வழி தெரியாமல் வந்த ஒரு இராணுவ சிப்பாய், பேசிய ஹிந்தி மொழி புரியாமல் மொத்த மக்களும் சூழ்ந்து கொண்டு காப்பாற்றிக் கொண்டு வந்து சேர்த்தனர். அவர் பேசியதே பரிதாபமாக இருந்தது. மூன்று நாட்களாகச் சாப்பிட வழி இல்லாமல், மறுபடியும் முகாம்க்கு போக வழியும் தெரியாமல் இருந்தவரை மக்கள் பார்க்கச் சென்ற போது அவர் பயந்து போய் வானத்தைப் பார்த்து சுட ஆரம்பித்தார். இவர் இருப்பதைக் கேள்விப்பட்டுப் புலிகள் வந்து சேர அவர்களைச் சமாதானப்படுத்திப் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.

அவர் பேசிய ஆங்கிலத்தில், இலங்கை இந்திய ராணுவத்தின் மொத்த பயமும், இந்தியாவிற்குத் திரும்பிச் செல்ல எப்போதும் செல்ல தயாராய் இருக்கும் துயர வாழ்க்கையும் புரிந்தது.

கயிட்ஸ் தீவில் உணவுப்பஞ்சம் கடுமையாக இருக்க யாழ்பாணம் சென்று விடலாம் என்று நினைத்தோம். நெடுந்தீவு மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டுருந்தார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் தங்களின் உணவுகளைச் சிறிதளவு கொடுத்து உதவினார்கள். அப்போதைய சூழ்நிலையில் யாழ்பாணம் முழுக்க இந்திய இராணுவம் வைத்ததே சட்டம். அவர்களைப் பார்த்தவுடன் சைக்கிளில் சென்றாலும் இறங்கி நடந்து செல்ல வேண்டும். குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கைகளைத் தூக்கியபடியே செல்ல வேண்டும்.

ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் அவர்களே உடம்பு முழுக்கச் சோதனை என்ற பெயரில் அவர்கள் செய்யும் வக்கிரங்களை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது.

புலிகளைப் பிடிக்கிறோம் என்று கைகளில் படங்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக வீரர்கள் உள்ளே வரும் போது மக்கள் மொத்தமாகப் பயந்து கொண்டு வீட்டின் பின்புறம் வழியாகத் தப்பி ஓடி மறைவும் அன்றாட நிகழ்ச்சியாய் இருந்தது. யாழ்பாணம் முழுக்கக் கடுமையான பஞ்சம் நிலவியது. எவரும் அன்றாடப் பணிகளைக்கூடச் செய்ய முடியாமல் துன்பப்பட்டனர். மண்டை தீவுக்கு அருகே இந்தியா ஒரு பெரிய போர்க்கப்பலை நிறுத்தியுள்ளனர். மீனவர்களை மீன்பிடிக்கு அனுமதிப்பது இல்லை.

யாழ்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தேன். வழியெங்கும் இராணுவ முகாம்களும், அவர்களின் சோதனைகளும் தாண்டி வர வேண்டியதாய் இருந்தது. யாழ்பாணத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் போக வேண்டுமென்றால் கச்சேரி என்ற இடத்தில் போடப்பட்டு இருந்த இராணுவ முகாமில் போய் அனுமதிசீட்டு வாங்க வேண்டும். தங்க வசதிகள் இல்லாத காரணத்தால் சர்ச்சிலில் அடைக்கலம் கிடைத்தது. காலையில் வவுனியா செல்ல திட்டமிட்டேன்.

கிளிநொச்சியில் ENTLF ( THREE STARS CAMP) தனியாக முகாம் அமைத்துள்ளார்கள்.

புலிகளுக்கு எதிரான மற்ற இயக்கங்களை ஒன்றாக இணைத்து இந்திய இராணுவத்தின் பாதுகாப்புடன் மொத்த சோதனைகளும் அவர்கள் மூலம் நடந்து கொண்டுருந்தது. அவர்கள் தாண்டி எவரும் சென்றுவிடமுடியாது. வவுனியாவுக்கு வரும் வழியில் மாங்குளத்துக்கு அருகே சுமார் 1500 சீக்கியர்கள் கொண்ட முகாம் இருந்தது. இது போக மொத்தவழியிலும் இராணுவ தலைகளாகவே தென்பட்டது. உடன் இருக்கும் இலங்கை காவல்துறைக்கும் இந்திய இராணுவத்தினர்களுக்கும் முட்டல் மோதல் தொடர்ந்து கொண்டே இருந்ததைப் பார்க்கமுடிந்தது.

பேரூந்து வரும் வழியில் ஓமந்தை கிராமத்தில் இருந்த மொத்த வீடுகளையும் இந்திய இராணுவத்தினர் ஆக்ரமித்துக் குடியேறியிருந்தனர். அவர்கள் கேம்பில் பரிசோதனைகள் என்ற பெயரில் ஆண் பெண் பேதம் இன்றி ஆடைகளுக்குள் கையை விட்டு வக்ரத்தை நிறைவேற்றிக்கொண்டுருந்தனர். வவுனியா நகரை வந்தடைந்த போது ஏழு முறை பரிசோதனைகளும், இடையில் நிறுத்தி அடையாள கேள்விகளும் முடிந்து சேர்ந்த போது மூச்சு திணறியது. வழக்கமாக இரண்டு மணிக்கு சற்று குறைவாக வந்தடைய வேண்டிய தூரத்தை பரிசோதனைகள் காரணமாக 6 மணிக்கு மேலாகக் கடந்து வந்து அடைந்த போது ஆயாசமாக இருந்தது.

வவுனியா நகரில், இந்திய இராணுவத்தினர், இலங்கை இராணுவத்தினர், இந்திய மத்திய ரிசர்வ் போலிஸ், இலங்கை போலிஸ், இது போக விடுதலைப்புலிகளுக்கு எதிரான த்ரி ஸ்டார் போராளிக்குழுக்களின் கேம்ப் என்று எங்குப் பார்த்தாலும் இவர்களின் தலைகள் தான் அதிகமாகத் தெரிந்தது. மாலை 4 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரையிலும் மொத்தமாக இங்கு ஊரடங்குச் சட்டம் வேறு அமலில் இருந்தது.

வரும் வழியில் த்ரி ஸ்டார் போராளிக்குழுக்கள் பரிசோதனை முடிந்தது ஒவ்வொருவரிடமிருந்து கட்டணம் என்று வாங்கி அப்பட்டமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். இலங்கை காவல்துறை போல் இந்த த்ரி ஸ்டார் செயல்பட்டுக்கொண்டுருக்கிறது.

சிங்கள கிராமத்தில் இருந்த சிங்களர்களுக்கும் இந்திய இராணுவத்தினர் மீது பயமாக இருந்தனர். ” உங்களைக் காக்க வந்தவர்களே இன்று உங்களைக் கொன்று குவிக்கிறார்களே? இவர்கள் எங்களையும் கொன்று விடுவார்களோ? ” என்று கிழக்கு மகாண சிங்கள மக்கள் சொன்ன பயம் பொதுவாக அங்குள்ள எல்லோரிடத்திலும் இருந்தது.

புலிகள் மீது மதிப்பும், இந்திய இராணுவத்தினர் அப்பாவி மக்களைத் தாக்குவதால் தான் புலிகளை அவர்களைத் திருப்பித் தாக்குகிறார்கள் என்ற ஆதங்கம் பொதுமக்கள் மத்தியில் இருந்தது.

அதுவே புலிகளுக்கு மறைமுக ஆதரவாக மாறிக்கொண்டுருந்தது.

யாழ்பாணப் பொதுமருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகளை இந்திய இராணுவத்தினர் வெறியாய்ச் சுட்டுக்கொன்றது மக்கள் மனதில் ஆழமான வடுவாய்ப் போய்விட்டது.

கொக்குவில், உரும்பிராய் பகுதிகளில் பெரும்பாலான வீடுகள் தரைமட்டமாய் இருந்தது. அழுகிய சடலங்களை எடுக்க ஆள் இல்லாமல் நாறிக்கொண்டுருந்தது.

இலங்கை இராணுவத்தினர் கூடப் புலிகளைப் பார்த்து, அவர்களைத் தேடி போர் செய்தனர். ஆனால் இவர்களுக்குத் தமிழ் மக்கள் எல்லோருமே புலிகளாகத் தெரிந்தனர்.

யாழ்பாணப் பல்கலைக்கழக வளாகம் இப்போது மொத்தமாக இந்திய இராணுவத்தினர் கட்டுப்பாட்டில். இவர்கள் உருவாக்கிய பிரச்சனையால் மொத்தமாக இந்தப் பகுதியின் பொருளாதாரமே இன்னும் 25 வருடங்கள் பின்தங்கிடப்போகின்றது என்ற அச்சம் அனைவரிடத்திலும் இருந்தது. குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் மின்சாரம். எந்த அடிப்படை வசதிகளும் இராணுவத்தினர் கட்டளையின்படி நடந்தது.

இதற்கிடையே அகில இந்திய வானொலியின் தொடர்ச்சியான பொய்த்தகவல்கள்.

ஈழமுரசு தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே சிறிய அளவுகளில் பிரசுரமாக வெளியிடத் தொடங்கினார்கள். காரணம் அகில இந்திய வானொலி ஆகாச புளுகுணியாக ஒலிபரப்பிக்கொண்டுருந்தது.

மொத்தத்தில் மக்கள் அத்தனை பேர்களும், இந்திய இராணுவம் அமைதி என்ற பெயரில் உள்ளே வந்து விட்டது. இனி இவர்கள் இதைவிட்டு நகர இன்னும் 25 வருடங்கள் ஆகும் என்று அவரவர் தீர்மானமாக நம்பி எதிர்க்கத் தொடங்கினார்கள்.

(போர் தொடங்கிய காலத்தில் அங்குப் பயணப்பட்ட பெர்ணாண்டஸ் என்ற பத்திரிக்கையாளரின் மொத்த அனுபவத்தின் சுருக்கப் பகிர்வு.)

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *