8. பேனா போர் கொஞ்சம் அவலம்

இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடன் தொடங்கிய போரில் முதல் 15 நாட்கள் பற்றிப் பார்க்கலாம்.

சாதகமான பத்திரிக்கையாளர்களைத் தவிர இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற்றினாலும் பத்திரிக்கை மக்கள் சாதாரணமானவர்களா?

ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொரு போர் காலத்திலும் உள் பகுதி வரைக்கும் ஊடுருவி செய்தி சேகரித்த நிகழ்வுகள் எல்லாம் நாம் கனவிலும் நம்ப முடியாத ஆச்சரியங்கள். இன்றைய இலங்கையின் மொத்த நிகழ்வுகளையும் இன்று வரைக்கும் உலகம் ஊன்றி கவனித்துக்கொண்டுருக்க இந்த ஊடகமே காரணம்.

ஆனால் அன்று மொத்தமாய் அவஸ்த்தைப்பட்டவர்கள் இவர்கள் தான் என்றால் அது ஆச்சரியமல்ல.

இவர்களுக்கோ செய்தி வேண்டும். அமைதிப்படைக்கோ தாங்கள் பெற்றுக்கொண்டுருக்கும் அவமானங்கள் காற்றில் பறந்து விடக்கூடாது என்ற நோக்கம். ஆனால் அத்தனையும் மீறி காற்றில் பறக்கத்தான் தொடங்கியது.

அப்போது ஊடகத்தில் வந்த ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொரு வகையானது.

பாலசந்தர் (நியூஸ் டைம்)

இந்திய ராணுவம் இன்று என்றில்லை. இன்னும் எத்தனை நாட்கள் இங்கு இருந்தாலும் புலிகளை அடக்கிவிடமுடியாது. கோபமாய் இருக்கும் யாழ் மக்களுக்குச் சோறும், மருந்தும் கொடுத்துச் சாந்தப்படுத்தி விடலாம் என்ற தப்புக்கணக்கு போட்டுச் செயல்பட்டுக்கொண்டுருப்பது இறுதியில் தோல்வியில் தான் முடியும். இங்குள்ள ஒவ்வொரு தனி மனிதர்களும் மிகத் தெளிவாகப் புத்திசாலித்தனமாக இருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களுடைய வாழ்க்கையில் இனி அமைதி திரும்பிவிட்டது என்று எண்ணம் கொண்டு அமைதிப்படையை வரவேற்றவர்கள் இன்று அப்படியே திரும்பி அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

கே.வி. நாராயணன் (UNI)

வியட்நாமில் கூட எங்களின் சொந்த ரிஸ்கில் சென்று வந்துள்ளோம். ஆனால் இங்கு யாழ் கோட்டை வாயிலோடு எங்களைத் தடுத்து நிறுத்தியது மொத்தத்திலும் கொடுமை.

அவர்களின் வார்த்தைகளைப் போலப் போராடிக் கொண்டுருந்த இராணுவ வீர்ர்களின் வார்த்தைகள் மொத்தத்திலும் கொடுமையிலும் கொடுமை.

” போர் தொடங்கி இரண்டு வாரங்கள் தான் முடிந்துள்ளது. எந்த யுத்தத்திலும் இந்த அளவிற்கு நாம் வீரர்களை இழந்தது இல்லை. இது வரைக்கும் 153 பேர்கள் இழந்துள்ளோம். 538 பேர்கள் படுகாயமுற்று சாவுக்குப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

47 வீரர்கள் காணாமல் போயுள்ளனர். இது நாங்கள் யோசித்ததை விடக் கடுமையாகப் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து நாட்களாக ஒரு விநாடி கூடத் தூங்காமல் போராடிக்கொண்டுருக்கிறோம். எங்களை நோக்கி வரும் சிறுவர் சிறுமியர் கூடக் கையிலிருக்கும் கண்ணிவெடியை எங்கள் வாகனத்தின் உள்ளே வீசிவிட்டு மறைந்து விடுகின்றனர்.

வரும் பெண்கள் அத்தனை பேர்களும் புடவையின் உள்ளே இருந்து திடீர் என்று வெடிகுண்டுகளை எடுத்து எங்களை நோக்கி வீசி விட்டு செல்கின்றனர். இந்த வித்யாசமான சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கப்போகின்றோம் என்பதே புரியவில்லை “

இந்த இடத்தில் மற்றொரு விசயத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்திய அமைதிப்படையின் அடிப்படை ஒப்பந்தத்தின்படி மொத்த இலங்கை இராணுவமும் அவரவர் முகாமில் இருப்பார்கள். மொத்த ஆளுமையும் அமைதிப்படையின் கையில் தான் இருக்கும் என்றது. ஆனால் யுத்தம் தொடங்க காரணமாக இருந்த அமைதிப்படைக்கு மேலே உள்ளவர்களின் தனிப்பட்ட ஈனப்புத்தியின் காரணமாகப் போரில் ஈடுபட்ட நேரிடையான இந்திய இளநிலை ராணுவ அதிகாரிகள் தொடக்கம் முதலே அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். மேலும் அப்போதே ஒப்பந்தமும் ஒவ்வொன்றாக மீறப்பட்டது. ஒவ்வொரு நிகழ்விலும் இலங்கை இராணுவத்தினரையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டனர்.

ஒப்பந்தத்தின்படி கிழக்கு மகாண பகுதியில் இருந்த சிங்கள கிராமங்களில் அமைதிப்படை செல்லாது. அது போலவே அமைதிப்படை இருக்கும் இடங்களிலும் இலங்கை இராணுவத்தினர் செல்லமாட்டார்கள் என்பதெல்லாம் அப்பட்டமாக மீறப்பட்டது. சிங்கள கிராம குடியிருப்புகள் பத்திரமாகப் பாதுகாக்க நம்முடைய வீரர்களும் உடந்தையாக இருந்தனர்.

கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதில்லை, ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல்கள் இருக்காது போன்றவைகளும் மீறி மேலிருந்து குடியுருப்புகள் முதல் மொத்த இடங்களிலும் சரமாரியாகக் குண்டுமழை பொழியப்பட்டது.

நோக்கம் புலிகள்.

பாதிக்கப்பட்டது அப்பாவி வாழ்வாதாரங்கள்.

அமைதிப்படை போட்ட குண்டுவீச்சின் கரும்புகையைப் படம்பிடித்து விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட சீரழிவுக்காட்சிகள் என்று தொலைக்காட்சியில் காட்டப்பட்டதை அப்போதைய தி வீக் நிருபர் வின்சென்ட் டிசௌஸா போட்டு உடைத்தார்.

யாழ்பாணத்தில் இருந்து பயந்து சென்னைக்கு அகதிகளாக வந்தவர்கள் ” சிங்களர்களின் தாக்குதல்களை விட அமைதிப்படையின் தாக்குதல்கள் கோரமாக இருக்கிறது” என்றனர்.

தொடக்கத்தில் விமானத் தாக்குதல்களை மறுத்த அமைதிப்படை பிறகு, புலிகளின் கோட்டையான யாழ் பகுதியை கைப்பற்றி விட்டோம். இனி எங்கள் நோக்கம் சாவகச்சேரி மட்டுமே. இழப்புகளைத் தடுக்க, விரைவுபடுத்தும் பொருட்டு வான் தாக்குதல்களைத் தொடங்கினோம் என்று உளற ஆரம்பித்தனர். சண்டையினால் சின்னாபின்னமான யாழ் நகரின் விதிகளில் முதன் முறையாக ஊடக மக்களை அழைத்துக்கொண்டு சென்ற போது திகைத்துப் போய்விட்டனர்.

ஏறக்குறைய மயான அமைதி. சீர்குலைந்து மக்கள் நடமாட்டம் இல்லாத இடமாகக் காட்சியளித்தது. மத்திய தந்தி அலுவலகம், துறைமுக நிர்வாக அலுவலகம், என்று அங்கு இருந்த அத்தனை முக்கிய நிர்வாக ஸ்தலங்களும் அழிக்கப்பட்டுச் சீர்குலைந்து போய் இருந்தன. அத்தனையும் கண்களை மூடிக்கொண்டு நடத்தப்பட்ட வான்தாக்குதல் காரணமாக உருவான காட்சிகள் இது.

முள்ளிவாய்க்கால் கடைசிகட்ட கோர காட்சியில் உலகமெங்கம் ஊடக ஒப்பாரி வைத்த ஒரு வசனம் நம்முடைய அனைவரின் கண்களுக்கும் வந்து சேர்ந்து இருக்கும்.

அதாவது ” புலிகள் பொதுமக்களை ஆயுத கேடயமாக வைத்துக்கொண்டு அவர்களை வெளியே விடாமல் இம்சிக்கின்றார்கள் ” என்றது.

இதே வசனத்தை அன்றைய அமைதிப்படையும் ஊடகத்தில் பரப்பியது.

“தெருவில் மொத்தமாகக் கூட்டமாக வருகின்றார்கள். முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் என்று அவர்கள் பின்னால் இருந்து கொண்டு எங்களைத் தாக்குகிறார்கள். எங்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை”

ஆனால் பொதுமக்கள் அத்தனைபேரும் புலிகள் பின்னால் நின்றதற்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா?

ஒரு குறிப்பிட்ட இடத்தில் போர் தொடங்கப் போகிறது என்றால் முதல் நாளே வந்து அந்த இடத்தில் உள்ளவர்களை ஒன்றிணைத்து அவர்கள் அனுமதியுடன் போரிடத் தொடங்கினர். போரிடத் தொடங்கும் போது பொதுமக்களே தங்களால் ஆன உதவிகளையும் செய்யத் தொடங்கினார். இதுவே மொத்த அமைதிப்படைக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சவாலாக இருக்கத் தொடங்கியது.

காரணம் எந்தப் போராளிக்குழுக்களும் ஒரு தடவை இரண்டு தடவை வேண்டுமானால் வலுக்கட்டாயப்படுத்திப் பொதுமக்களைப் பலிகடா ஆக்க முடியும். ஆனால் ஒவ்வொரு நாளும் இதே போல் நடக்கின்றது என்றால் பொதுமக்கள் அனுமதி இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை. ஆனால் இதையும் மீறி அமைதிப்படை தனது வேகத்தைக் குறைத்தபாடில்லை. இந்திய வீரர்களின் மனோதிடம் குறையக் குறைய அது தவறான பாதையையும், வக்கிர பாதையையும் உருவாக்கத் தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாகத் தான் பாராசூட்டில் இருந்து இறங்கிய இந்திய வீரர்களைப் பிரபாகரன் தாக்குதல் நடத்தி வந்து இறங்கிய அத்தனை இந்திய வீரர்களையும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதுவே மிகப் பெரிய திருப்பு முனையாக உருவாக்கப்பட்டு “இலங்கைக்குச் சென்றது அமைதிப்படை அல்ல. மொத்த படையும் அழிவுப்படை” என்று தமிழ்நாட்டில் கூக்குரல் தொடங்கப் பெற்றது.

ஏன் இந்த அளவிற்குப் பிரபாகரன் உள்மத்தம் பிடித்து அலைந்தார் என்பதற்கு மற்றொமொரு சம்பவம். அப்போதைய பிடிஐ நிருபர் சொன்ன வாசகம் இங்கே குறிப்பிடத்தக்கது.

“பெயரை குறிப்பிட விரும்பாத இரண்டு போராளிக்குழுக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை பிரபாகரனை கொல்வதற்கு என்று சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்ட உளவுத்துறை அவர்களை முடுக்கிவிட்டுக் கொண்டுருந்தது. அவர்கள் தினசரி வேலையே பிரபாகரன் குழுவினரை கவனிப்பது மட்டுமே” இத்தனை பெரிய இந்திய இராணுவத்தின் வீரம் என்பது ஏன் கேலியாகப் போனது?

ஒரே காரணம் சுயநலம்.

பெரிய நாட்டுக்கு தன்னுடைய இறையாண்மைக்காகச் சுயநலமாக இருப்பது கூடப் பராவாயில்லை. ஆனால் ஈடுபட்ட அத்தனை மேல்மட்ட அதிகாரிகளுக்கும் ஒரே நோக்கம் பிரபாகரனை அழித்து விட வேண்டும். காரணம் அவ்வாறு அந்த மொத்த அதிகாரிகளையும் மனம் மாற்றி வைத்து இருந்தார்கள். டெல்லி அரசியல் லாபியும் ரா வின் தவறான வழிகாட்டுதல்களும். பிரபாகரனை அழிந்து விட்டால் மொத்தமும் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று நம்பியது, அந்த நம்பிக்கையே அவர்களை வழி நடத்தியது,

அதன் படியே நம்பவைத்தது மட்டுமல்லாமல் பல்லாண்டு காலம் பயிற்சி பெற்ற அதிகாரிகளையும் . வீரர்களையும் இழக்க வைத்தது தான் சோகத்தின் உச்சம்.

அமைதிப்படைக்கு இலங்கை இராணுவம் என்பது ஒத்துழைப்பு என்பது உப்புசப்பில்லாதது. சொல்லப்போனால் அன்றைய சூழ்நிலையில் அவர்கள் ஆளை விட்டால் போதுமடா சாமிங்ற அளவிற்கு இருந்தவர்கள் தான்.

ஆனால் நமது அமைதிப்படைக்கு மேலே இருந்தவர்கள் கட்டளையிட்டவர்கள் அத்தனை பேர்களும் நடைமுறை தெரியாமல் தப்பு மேல் தப்புச் செய்து கொண்டுருந்தார்கள். இதில் உச்சகட்டம் என்ன தெரியுமா?

முறைப்படியான போர் தொடக்கம் பெறுவதற்கு முன்பே அக்டோபர் 8ந் தேதியே இந்தியாவில் இருந்து ஆறு ஐ ஏ எஸ் அதிகாரிகளையும் இரண்டு ஐ பி எஸ் அதிகாரிகளைக் கொண்டு போய் உருவாக்கப்போகும் (?) நிர்வாகப் பரிபாலணத்திற்காகத் தயார் படுத்தி வைத்தனர்.

அதாவது முதல் இரவு நடக்கப் போவதற்கு முன்பே பிறக்கப்போகும் பிள்ளைக்குப் பெயர் தேர்ந்தெடுத்த புத்திசாலி மக்கள். .

இது போகப் பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் கேள்வி குறியாக்கப்பட்ட அந்த ஒரு காரணமே மொத்த மக்களும் பிரபாகரன் பக்கம் சேரத் தொடங்கினர். அதுவே பிரபாகரன் தொடக்க வெற்றிக்குக் காரணமாக இருக்கத் தொடங்கியது.

இது தவிர இலங்கையின் உள்ளே உள்ள அடிப்படை புவியியல் அறிவு பெற்றவர்களுக்கும் அந்த அறிவு மற்றவர்கள் மூலம் கற்றவர்களுக்கும் நடந்த போர் எங்குக் கொண்டு வந்து நிறுத்தும். வியட்நாமில் அமெரிக்கா பெற்ற பாடம் , ஆப்கானிஸ்தானில் ரஷ்யா பெற்றது போல இங்கு இந்தியா பெற்றது மிக வருத்தமான விசயம்.

ஆனால் வெறி அடங்குவதாக இல்லை. வெறியுடன் மட்டும் வாழ்ந்து கொண்டுருந்தவர்களை அவர்கள் விரும்பும் ஒரு வேலிக்குள் கொண்டு வரவும் முடியவில்லை.

போகப்போகச் சிக்கல் வலைபின்னலாகி, அவிழ்க்க முடியாத சின்னாபின்னமாக்கியது.

மழை விட்டாலும் தூவானம் நிற்கவில்லை.

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *