7. சிங்கம் புணர்ந்து வந்தவர்கள்

தென்கிழக்கு ஆசியா முதல் இந்தியா, தென்னிந்தியா வரைக்கும் சமஸ்கிருதம் ஆட்சி புரியத் தொடங்கிய போது மொத்த வரலாற்றின் போக்கும் வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்கியது.

ஒவ்வொரு ஆட்சியாளர்கள் தங்களுடைய வம்சத்தை உயர்ந்ததாகக் காட்டிக்கொள்ளப் பல் வேறு புனைக்கதைகளை உருவாக்கி பரப்பத் தொடங்கினர்.

இதன் தொடர்பாக உருவானது தான் சிங்களர்கள் “சிங்கம் புணர்ந்து வந்தவர்கள் ” என்றொரு அசிங்கக் கதையும் நிலைபெறத் தொடங்கியது.

சிங்களர்களின் புனித நூல் என்ற சொல்லப்படும் மகாவம்சத்தில் சொல்லப்படும் அந்தப் புனைவு கதையின்படி விஜயன் என்ற இளவரசன் தற்போதை இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலம் பகுதியிலிருந்து இலங்கைக்கு உள்ளே சென்றதில் இருந்து தொடங்குகிறது. அப்போது இந்தியாவில் இதில் குறிப்பிடப்படும் வங்க மாநில பகுதியில் ஆண்டுக் கொண்டுருந்த மன்னரின் மகள் பெயர் சுபதேவி.

இவளை வனராஜா சிங்கம் கடத்திக்கொண்டு சென்று குகையில் அடைத்து வைத்துருந்தது. சிங்கம் சுபதேவியுடன் குடும்பம் நடத்தி ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று இரண்டு குழந்தைகள் பிறந்தன.

பிறந்த ஆண் குழந்தை கால்களும் கைகளும் சிங்கத்தைப் போன்று தோற்றத்தை பெற்று சின்ஹபாஹ என்ற பெயராலும், பெண் குழந்தை சின்ஹவலி என்றும் அழைக்கப்பட்டனர்.

குகைக்குள் அடைக்கப்பட்ட தனது தாயையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு தப்பித்து வெளியேறிய சின்ஹபாஹ, தன்னுடைய சகோதரியான சின்ஹவலியையே திருமணம் செய்து கொண்டு சின்ஹபுரம் என்ற நகரை உருவாக்கிக்கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினான்.

சினஹவலிக்கு பிறந்த இரட்டையரான ஆண் குழந்தைகளில் மூத்த ஆண் குழந்தையின் பெயர் விஜயன். இரண்டாவது சுமித்தா. வளர்ந்து கொண்டுருந்த விஜயனின் தீய குணங்களை அடக்க முடியாமல் மன்னர் சின்ஹபாஹ, விஜயனையும் துணையாக இருந்தவர்களையும் நாடு கடத்தினார். இவர்கள் மரக்கலத்தின் வாயிலாக இலங்கையில் வந்து இறங்கினர்.

இவர்கள் வந்த போது இலங்கையின் அப்போதைய பெயர் தம்பப்பன்னி. இவர்கள் குறிப்பிடும் மொத்த இந்தக் கதையின் மூலக்கூறு இந்தியாவின் ஓரிஸ்ஸா மற்றும் மேற்குவங்காளத்தில் (கலிங்கம், வங்கதேசம்) இருந்து தொடங்குகிறது.

இவர்கள் உள்ளே வந்த போது புத்தர் மரணமடைந்தார் என்றும் புத்தரின் வாரிசாகத் தங்களை அறிவித்துக்கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினார் என்று இதன் அசிங்கம் நிறைந்த பல சம்பவங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு செல்கிறது.

இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னால் கூட இன்றைய இலங்கையில் பிரதேச எல்லைகள் என்று எதுவும் இல்லை.

அன்று உருவாகியிருந்த வணிகத் தொடர்புகள் தான் எல்லாவகையிலும் ஆட்சி புரியத் தொடங்கியது. அதுவே ஒரு அளவிற்கு மேல் கடந்து தமிழ்நாட்டில் ஆண்டுக் கொண்டுருந்த குறுநில மன்னர்கள் இலங்கையில் இருந்த சிறு இனக்குழுக்களின் மேல் ஆதிக்கம் செலுத்த முற்பட்டுப் பரவலாக்கமாக மாறத் தொடங்கியது.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழர்களின் மொத்த ஆதிக்க இனக்குழுக்கள் வளரத் தொடங்கியது. சிங்களர்களின் தீபவம்ச நூலில் தொடக்கத் தமிழ் மன்னர்கள் என்று குறிப்பிடப்படும் ஸேன,குத்தக என்ற அநுராதபுர ஆட்சியாளர்களையும், தமிழர்கள் அதிகமாக வாழ்ந்த வவுனியா ( பெரிய புளிங்குளம்), மட்டக்களப்பு (ஸேருவில), அம்பாறை (குடுவில்) மாவட்ட விபரங்கள் மூலம் வாழ்ந்து கொண்டுருந்த இனக்குழுக்களையும், அங்கு வாழ்ந்து கொண்டுருந்த மற்ற இனக்குழுக்களின் மேல் இவர்கள் செலுத்திய ஆதிக்கங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. .

மூன்றாம் நூற்றாண்டின் மத்திம பகுதியில் வட இந்தியாவில் பாடலிபுரத்தை ஆட்சி புரிந்து கொண்டுருந்த கலிங்க பேரரசுவின் மன்னரான (இன்றைய பாட்னா) அசோக பெருமன்னன் தன்னுடைய சார்பாளராக மஹிந்த மகாதேரர் என்ற புத்தபிக்குவை அனுப்பி வைத்தார்.

காரணம் அப்போது நடந்துருந்த கலிங்கப்போர் மன்னனை முழுமையாக மாற்றியிருந்தது. போருக்குப் பின்னால் பௌத்த மதத் தாக்கத்தினால் அமைதி வழியே செல்ல விரும்பிய அசோக மன்னரின் சார்பாகச் சென்றவர், ஆண்டுக் கொண்டுருந்த திஸ என்ற (திசையன்) மன்னன் வந்த தூதுக்குழுவினரை வரவேற்று அசோக மன்னரின் ஆளுமையை ஏற்றுக்கொண்டதும் நடந்தேறியது.

அசோக மன்னரின் சார்பாகச் செயல்பட்டு ஆட்சி புரிந்தவர்களுக்குப் பின்னால் வந்த தமிழ் மன்னர்களின் பெயர் என்று தீபவம்சம் கூறுவது எளார என்றழைக்கப்படும் தமிழ் மன்னனாகிய எல்லாளன். ஏறக்குறைய 44 ஆண்டுகள் நீதி வழுவாது ஆட்சி புரிந்து இந்த மன்னரின் தயாள, ஈகை குணங்களைப்பற்றி உச்சமாகப் புகழ்ந்து எழுதி உள்ளனர்,

உச்சகட்டமாக எல்லாளன் என்ற தமிழ்மன்னரைப் பற்றி, அவரது ஆட்சியில் பெய்த மழைகூட இரவில் மட்டும் பெய்தது என்கிற அளவில் எழுதி வைத்துள்ளனர்.

பயம் என்பதைப் பயம் கொள்ள வைத்தவர்களின் மரபில் வந்தவர்களை இன்றைய இலங்கை அரசு கடைசி வரைக்கும் நேருக்கு நேர் நின்று போரிடமுடியவில்லை..

இறுதியில் எல்லாளன், துட்டகாமிணி என்றழைக்கப்படும் காமணீ அபய என்ற தெற்கு இலங்கை சிங்கள மன்னரால் தோற்கடிக்கப்பட்ட போது எல்லாளன் என்ற தமிழ் மன்னரின் வயது 73,

போரிட்ட சிங்கள மன்னனோ இளைஞன். ஆனால் அன்றைய சூழ்நிலையில் எல்லாளன் ஆட்சியினால் பலனடைந்த சிங்கள தமிழ் தரப்பினர்கள் வைத்திருந்த மதிப்பை மாற்ற விரும்பாத சிங்கள மன்னன் எல்லாளன் சார்பாக நினைவு ஸ்தூபி ஒன்றை உருவாக்கி வழிபடுவதன் மூலம் அனைவரையும் திருப்திபடுத்தினான்.

இதுவே இலங்கை சுதந்திரத்திற்குப் பிறகு பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்னே இந்த ஸ்தூபியை சிங்கள இனவாத அடையாளமாகக் காட்டப்பட்டு, அமைச்சராக இருந்த அதுலத் முதலி தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மிரட்டல் விடும் அளவிற்கு அவரின் தமிழர் எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது.

ஆனால் மொத்தமாகச் சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் தரப்படும் மொத்த சான்றுகளும் அநுராதபுரத்தை வைத்தே கொடுக்கப்படுவதால் அந்த நகரின் சிறப்புத் தொடக்கம் முதல் மேம்பட்டு இருப்பதை உணரலாம்.

இதைத் தொடர்ந்து வரும் ஆட்சியாளர்களில் பலர் வந்து போய்க்கொண்டுருந்தாலும் சிங்கள அனுலா என்ற அரசியின் ஆட்சியும், அவரது ஒழுங்கங்கெட்ட நடவடிக்கைகளும், கணவர், காதலன் என்ற பெயரில் தன்னுடன வாழ்ந்தவர்களை நஞ்சு கொடுத்து கொன்ற காட்சிகளும் உள்ளது.

இதுவே காலப் போக்கில் ஒவ்வொரு இனக்குழுவும் ஆதிக்கம் செலுத்தி இலங்கையின் வடக்கில் தமிழ்மொழியின் செல்வாக்கும் சைவ சமயமும், தெற்கில் சிங்கள மொழியும் பௌத்தமும் என்று மாற்றம் பெற்றது. மொத்தமாக நாகர்கள் வாழ்ந்த நாகத்தீவு என்றே பாலி மொழி வரலாறு தெரிவிக்கின்றது.

பின்னால் உருவான சிங்கள மொழி என்பது ஒரு இயல்பான மொழியல்ல. கலிங்கப் பேரரசை அசோக மன்னன் ஆண்ட போது, அவரின் சார்பாளர்கள் இலங்கைக்குச் சென்ற போது வழக்கில் இருந்த சமஸ்கிருதத்தில் தொடங்கி, பாலி, கலிங்கம், தமிழ் என்பது வரைக்கும் பல மொழிகள் கலந்து உருவாக்கிய கூட்டுக் கலவை அது.

அசோக மன்னரது இலட்சினையான சிங்கமும் எலு என்பதன் எச்சமாகக் கருதப்படுவதும் சேர்ந்து சிங்களம் என்று மாற்றம் அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவான சமய மாற்றங்களும், வீழ்ச்சியடைந்து கொண்டுருந்த பௌத்தமும் கரையேறி பயணிக்கத் தொடங்கியது, அப்போதைய தமிழர்களும், தமிழ் மன்னர்களும் சைவ, வைணவ என்ற பிரிவின் பக்கம் சாயத் தொடங்கியதால் மகாநாம தேரர் என்பவரால் பௌத்த வீழ்ச்சியைத் தடுக்கும் பொருட்டு எழுதப்பட்ட நூலே இன்றைய சிங்களர்களின் புனித நூலாக மதிக்கப்படும் மகாவம்சம்.

காலமும் சூழ்நிலையும் திரிபுகளையும் இத்துடன் கொண்டு வந்து சேர்க்க கிபி 972 ஆம் ஆண்டு நான்காம் மகிந்தன் என்ற சிங்கள மன்னரால் இதைத் தமிழர் எதிர்ப்புணர்ச்சி என்ற நோக்கத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *