6. ராஜீவ் என்றொரு சதை துணுக்குகள்

சிவராசன் குழுவினர் எதிர்பார்த்தபடியே ராஜீவ் காந்தி படுகொலையென்பது மனித வெடிகுண்டு மூலம் நிகழ்த்தியாகிவிட்டது. இருபது அடி உயரத்துக்கு எழும்பிய புகைமூட்டமும், உருவான கூச்சலும் குழப்பமும் அங்கு என்ன நடக்கிறது? என்பதே பலருக்கும் புரியவில்லை. காவலுக்கு இருந்த பல போலீஸ்காரர்கள் அலறி அடித்து ஓடிக்கொண்டிருந்தனர். தைரியமான காவல் துறையைச் சேர்ந்தவர்களும், கட்சிக்காரர்களும் மனோதிடத்துடன் அங்கேயே நின்று கொண்டுருந்தனர்.

தேடி வந்த வாழப்பாடியும், மூப்பனாரும் சிதறிக் கிடந்த சதை குவியலில் ராஜீவ் காந்தியின் உடலை தேடினர். அந்தச் சூழ்நிலையில் அத்தனை சுலபமாக இல்லை. ஐந்து நிமிடத்திற்கு முன் உயிருள்ள மனிதர்களாக நின்று கொண்டுருந்தவர்கள் அத்தனை பேர்களும் இப்போது சதை துணுக்குகளாக, தலை கை கால் வேறு வேறாகச் சிதறிக் கிடந்தார்கள்.

அடையாளம் காண்பதற்காக ” ஒவ்வொன்றையும் ” புரட்டிப் பார்க்க வேண்டியிருந்தது.

இறுதியாக மனத்துணிவுடன் பார்த்தவர்கள் கண்களில் சிக்கியது ராஜீவ் காந்தி அணிந்து வந்த லோட்டோ ஷீ. அதன் மூலம் மட்டுமே அவரது உடலை கண்டு பிடிக்க முடிந்தது.

அரற்றிக் கொண்டுருந்த மூப்பனார் மனத்துணிவுடன் குப்புறவாக்கில் கிடந்த உடலை திருப்பிய போது சதை துணுக்குகளாய் கோரமாய் இருக்க உருக்குலைந்து கிடந்த உடம்பில் துணியைப் போட்டு மூடினார். மேற்கொண்டு எதுவும் குண்டுகள் வெடிக்குமோ என்று உடன் இருந்தவர் மூப்பனாரை அங்கிருந்து நகர்த்த முற்பட அப்போது அவர் சொன்ன வாசகம். ” தலைவனே போயிட்டார் இனிமேல் என்னயிருக்கு” என்றார்.

அந்த நிமிடம் வரைக்கும் கம்பளம் எறிந்து கொண்டுருந்தது.

லதா கண்ணன், கோகிலா, ஹரிபாபு,ராஜீவ் காந்தியின் பிரத்யோக காவல் அதிகாரி,மாவட்ட காவல்துறை அதிகாரி இக்பால் உட்பட ஒன்பது காவல்துறையைச் சேர்ந்தவர்களும் தணுவுடன் இறந்திருந்தனர்.

அருகில் இருந்த பலருக்கும் பலத்த காயம். அரசாங்க அறிக்கை என்பது பின்னாளில் வந்து சம்பிராதயக் கணக்குகளைச் சொன்னதே தவிர உண்மையிலேயே அப்பாவிகள், பார்க்க வந்தவர்கள், உள்ளே இருந்தவர்கள் எத்தனை பேர்கள் இறந்தார்கள் என்பது போய்ச் சேர்ந்த ராஜீவ் காந்தி ஆன்மாவுக்குத் தான் தெரியும்?

தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டுருந்த சிவராசனுக்குத் திருப்தி மனதிற்குள் இருந்தாலும் அந்தச் சூழ்நிலையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் படபடப்பு தான் உருவாகியிருந்தது.

அந்தச் சூழ்நிலைதான் அப்போது அவர்களை விரைவாக இந்த இடத்திலிருந்த வெளியேற வேண்டும் என்று உந்தித் தள்ளியது.

சுபா, நளினியை அழைத்துக் கொண்டு முக்கிய சாலைப்பகுதியை நோக்கி விரைந்தனர்.

அருகில் இருந்த வீட்டில் படபடப்பை அடக்கத் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டு ஆட்டோ, பேரூந்து மூலம் சென்னை வந்தடைந்தனர். இத்தனை தெளிவாகச் சிறப்பாக ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செயல்படுத்தி ஜெயித்த சிவராசன் எதிர்பார்க்காதது ஹரிபாபு மரணம்.

ஆவணத்திற்காக அந்தப் புகைப்படம் வேண்டும்.

எந்த அளவிற்கு வெடிகுண்டின் தாக்கம் இருக்கும்?. எந்த இடத்தில் நின்று கொண்டு புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை மீறி ஹரிபாபு சென்றாரா? அல்லது அவரின் விதியும் அவரைக் கொண்டு போய்ச் சேர்த்ததா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் இல்லை.

ஆனால் மொத்தமாய் அன்று ஸ்ரீபெரும்புதூர் இருட்டில் நின்று கொண்டு சிரித்த விதி உருவாக்கிய மாய வலை வேறு ஒன்றையும் உருவாக்கியிருந்தது. ஹரிபாபு பயன்படுத்திய புகைப்படக்கருவி சதைக்குவியல் மேல் கிடந்தது முதல் ஆச்சரியம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படம் லட்டாகப் புலனாய்வு குழுவினர் கைக்குக் கிடைத்ததென்பது அடுத்த அதிசயம்.

அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கடமை தவறாத காவல்துறை அதிகாரி ராகவன் சம்மந்தப்பட்ட இடத்தை வளைத்துக் கவனமாகக் காவல் காத்ததும் அந்தப் புகைப்படக் கருவி வந்து சேர வேண்டிய இடத்திற்கு மிகக் கவனமாக வந்து சேர்ந்ததும் முக்கியக் காரணமாக இருந்தது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அப்போது அங்கே உருவான அக்னிபிழம்பு அந்தப் புகைப்படகருவிக்கு எந்தச் சேதாரத்தையும் உருவாக்காத காரணத்தால் அதன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் விடுதலைப்புலிகள் மேல் வைத்திருந்த மொத்த மதிப்பும் தமிழ்நாட்டு மக்களை வெறுப்பாக மாற்ற உதவியதன் தொடக்கப்புள்ளி அது.

காரணம் அப்போது வரைக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விரும்புவர்களும், வெறுப்பவர்களும் தமிழ்நாட்டில் இருந்த போதிலும் அத்தனையும் மீறி ஒரு மொத்தமான நல்ல பார்வை அவர்கள் மேல் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அறிவுஜீவிகளின் லாவணி அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியாக இருந்தாலும் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு அவர்களின் கச்சேரி என்பது சுருதி சுத்தமாய் ஒலிக்கத் தொடங்கியது.

அவசரமாய் வரவழைக்கப்பட்ட ஸ்டிரச்சரில் சிதைந்த ராஜீவ் உடலை ஏற்றி சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு துரிதகதியில் நடந்தது காவல்துறை வண்டியில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டது.

இந்த இடத்தில் ராஜீவ் காந்தியை படுகொலை செய்யப்பட வேண்டும் என்ற திட்டத்திலும் அது எவ்வாறு நிகழ்த்தப்பட வேண்டும் என்று உள் கட்டளைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே சாவு என்பதை விட இதை ஒரு பெண் மூலம் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு காரணமும் இருந்து இருக்க வேண்டும். அந்தச் சாவும் மிகக் கோரமான சாவாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவர்கள் அதன்படியே உருவாக்கி இருந்தார்கள்.

ராஜீவ் காந்தியின் முகத்துக்கு அருகே நிற்கும் தருணத்தில் வெடிகுண்டு வெடித்தால் மட்டுமே எதிர்பார்த்த வெற்றி. காரணம் உருவாகும் மரண விளைவு என்பது விபரீதத்தின் உச்சமாக இருக்க வேண்டும்.

அந்த அளவிற்குத் தான் இறுதியில் நடந்து முடிந்து இருந்தது.

மிஞ்சியிருந்த துண்டு துணுக்குகள், பாகங்களைப் பொட்டலாமாகக் கட்டி கொண்டு போய்ச் சேர்த்து இருந்தாலும் போஸ்மார்டம் செய்த மருத்தவரின் (டாக்டர் செசிலியா சிரில்) அறிக்கையும் படித்துப் பார்க்கத்தான் வேண்டும்.

” தலையில் கபாலப்பகுதி எலும்புகள் நொறுங்கி பெருத்த சேதமுற்று மூளை சிதறிவிட்டிருந்தது. முகத்தில் உதடுகளும், மூக்கும், கண்களும் நாசமாகி இருந்தன. முகவாட்டை எலும்புகள் நொறுங்கி இருந்தன. வயிற்றுப் பகுதியிலும் குடல்கள் கல்லீரல் வெளியே வந்திருந்தன. இடது நுரையீரல் மிகச் சிதைந்து காணப்பட்டது. கை பெருவிரலும், ஆள்காட்டி விரலும் சேதமாக இருந்தன. எக்ஸ்ரே செய்து பார்த்ததில் உடலில் இருந்த கிட்டத்தட்ட எல்லா எலும்புகளும் உடைந்து இருந்தன. உடல் முழுவதும் சிறு சிறு குண்டுகளால் துளைக்கப்பட்டு இருந்தது “

இதே போல் வெடித்துச் சிதறிய தணுவின் தலை, சிதைந்த கை கால்கள் போன்றவைகள் பார்ப்பதற்குக் கோரமாகக் கொடுமையாக இருந்தது. அவர் அணிந்து இருந்த பெட்டிகோட் போன்ற உள்ளாடை ஜாக்கெட் வடிவத்தில் இறுக்கமாகத் தைக்கப்பட்டு இருந்தது,

உள்ளே உருவாக்கப்பட்ட வெடிகுண்டுகளுடன் இணைக்கப்பட வேண்டிய ஓயர்கள் செல்ல வேண்டிய பாதைக்குக் குழாய் போன்ற வடிவத்தில் வெளியே தெரியாத அளவிற்குச் சிறப்பான முறையில் தைக்கப்பட்டு இருந்தது.

சிறப்பான தையற்கலை வல்லுனர் தோற்றுப்போகும் அளவிற்குத் தைக்கப்பட்டு இருந்தது. வீர்யம் மிக்க மருந்துக்களைச் சிறு குண்டுகளாக மாற்றப்பட்டு மொத்தமாகக் கோர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டு இருந்தது. மிகச் சிறய அளவிலான குண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக கோர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த ஜாக்கேட் இறுக்கமாகவே இருந்தது. இறுக்கம் தளராமல் இருக்கப் பெல்ட் வடிவ அமைப்பு கீழே உருவாக்கப்பட்டு இருந்தது. அணிபவரின் உடல் பருமன் என்பது நபருக்கு நபர் மாறக்கூடும். ஆனால் பெல்ட் இருப்பதால் எவர் அணிந்தாலும் ஒரு உருவத்திற்குள் கொண்டு வந்து விட முடியும்.

பெல்ட்டை இழுத்து மாட்டிக்கொண்டால் மொத்தமும் ஒரு ஒழுங்குக்கு வந்து சிறப்பாக உடலுடன் பொருத்திக்கொள்ள முடியும்.

ஜாக்கெட்டுக்குள் வரிசைகிரமமாக வைக்கப்பட்ட வெடி குண்டுகளைக் கொண்டு ஜாக்கிரதையாகத் தைக்கப்பட்ட மொத்த அமைப்பையும், வெடிக்க வைக்கப்பட வேண்டிய ஓயர்களுக்கான கட்டுப்பாட்டின் பொத்தான் என்பதும் இடுப்புக்கு கீழே வரும்படி உருவாக்கப்பட்டு இருந்தது.

இதன் நோக்கமென்பது குனியும் போது கைக்கு எட்டும் உயரம். உள்ளாடையின் உள்ளே மொத்த வெடிகுண்டுகளையும் கட்டுப்படுத்துவது இரண்டு பொத்தான்கள். முதல் என்பது இயக்கும் விசையென்பது ஏதும் தவறுதலாக அழுத்தப்படும் பட்சத்தில் மொத்த இயக்கத்தையும் நிறுத்துவதற்குப் பயன்படும். இரண்டாவது என்பது வெடிக்கச் செய்யும் வீர்யம். இத்தனையும் நவீன தொழில் நுட்பமோ, வெளிநாட்டு இறக்குமதியோ அல்ல.

இது சிங்களர்களுக்கென்று பிரபாகரன் மனதில் உருவாக்கப்பட்ட அமைப்பு பிரபாகரன் துப்பாக்கி சுட கற்றுக்கொண்டது முதல் இது போன்ற வெடிபொருட்கள், பின்னால் வந்த நவீன ரக ஆயுதங்கள் அத்தனையும் பயிற்சி எடுத்து கற்றுக் கொண்டது அல்ல.

புத்தகங்கள் படித்துக் கற்றுக்கொண்டது.

தணு மாட்டியிருந்த வெடிகுண்டு அமைப்பு அமெரிக்காவில் டெட்டராய்ட் நகரில் வெளியிடப்பட்ட புத்தகம் மூலம் உருவாக்கப்பட்டது.

ஆண் பெண் கரும்புலிகள் என்பது முழுக்க முழுக்கப் பிரபாகரன் சிந்தனையில் உருவானது. .

கரும்புலிகளுக்கென்று உருவாக்கப்பட்டவர்கள் இதில் தங்களை அர்பணித்தவர்களை இயக்கத்தில் உள்ள மற்றவர்களிடத்தில் இருந்து தனியாகத் தேர்ந்தெடுப்பது முதல் அவர்களுக்கென்று உருவாக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள், பாடங்கள் வரைக்கும் வித்யாசமான சூழ்நிலையில் இருக்கும்.

உள்ளேயுள்ள மற்ற அமைப்புகளுடன் சம்மந்தம் இருக்காது. எவரவர் இதில் இருப்பார்கள்? மற்றவர்களுக்குத் தெரியுமா என்பதும் சந்தேகமே.

கரும்புலிகளாக இருப்பவர்களுக்கும் அவர்களின் இலக்கு என்பதும், எந்த நாள் வரைக்கும் இந்த உயிர் உடலில் இருக்கும் என்பதும் அவர்களுகே தெரியாது.

நாளை, மறுநாள், அடுத்த வாரம், அடுத்த மாதம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மனோதிடத்தின் உச்சம். மற்றத் தீவிரவாத அமைப்புக்கும் விடுதலைப்புலிகளின் அமைப்புக்கும் உள்ள் மிகப்பெரிய வித்தியாசமே இது தான்.

இங்குத் தான் ஆரம்பமாகிறது..

மற்ற இயக்கங்கள் ஒரு குடும்பத்தில் உள்ள ஏழ்மையைப் பயன்படுத்தி அவர்களின் குடும்பத்திற்காகக் கொடுக்கப்படும் நிதி என்பதன் மூலம் ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தக் குடும்பத்தின் எதிர்கால வாழ்வுக்காக ஒருவர் இந்த மனித வெடிகுண்டாக மாறுகின்றார்.

ஆனால் இங்கே என்ன தான் மூளைச்சலவை என்று தொடங்கினாலும் ஒரு அளவிற்கு மேல் இயக்கத்தின் வெற்றிக்காக தங்களால் ஆன முன்னேற்பாடு என்ற அளவிற்கு கரும்புலிகளாக மாறுகின்றனர். அவர்களின் மனோ திடம் இந்தப் பாதையில் கொண்டு வந்து அவர்களை நிறுத்திவிடுகின்றது..

தீர்மானிக்கப்பட்ட நாளுக்கு முன் அல்லது அவர்களின் இலட்சியத்திற்கான பயணம் தொடங்கப்படுவதற்கு முன் பிரபாகரன் உடன் உணவு அருந்தும் வைபோகத்துடன் அவர்களுக்கும் விடுதலைப்புலி இயக்கத்திற்கும் உள்ள உறவு முறிந்து விடுகின்றது.

அப்போது தொடங்கும் அவர்களின் பயணமென்பது அவர்களின் இறுதி வாழ்க்கை பயணத்தின் தொடக்கப் பாதை.

கடைசியாக “அக்னிக்குழந்தைகள்” என்றும்,” மண் மீட்பிற்காக உயிர் நீத்த மாவீர்கள்” என்ற உருவாக்கப்படும் ஆவணப் பெயரில் வந்து விடுகிறார்கள். சிங்களர்களுக்கென்று உருவாக்கப்பட்ட கரும்புலிகள் இன்று ராஜீவ் காந்திக்கு என்று மாற்றப்பட்ட கொடுமை என்பது இந்தியாவிற்கு மே 22 அன்று புலர்ந்த காலை என்பது கதறும் நாளாக இருந்தது.

சமூக விரோதிகளுக்குச் சொத்துக்களைச் சூறையாடுதல் தொடங்கிப் பிடிக்காதவர்களைப் போட்டுத் தள்ளும் பைபவம் வரைக்கும் கொண்டு செலுத்தியது. அன்றைய தினம் அதிகமாகப் பாதிக்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழக அடிமட்ட தொண்டர்களும், இயக்கத்தில் இருந்தவர்களுமே ஆவார்கள். தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

குறிவைத்துச் சொத்துக்கள் சூறையாடப்பட்டது. செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டுருந்த மொத்த வாகனங்களும் நிறுத்தப்பட்டன. கலவரத்தீயின் நாக்கு மெதுவாக முன்னேறிக்கொண்டுருந்தது. வரிசையாக நின்று கொண்டுருந்த ஆயிரக்கணக்கான பேரூந்துகளும் நிறுத்தப்பட்டது.

முடக்கப்பட்டது என்ற வார்த்தை தான் சரியாக இருக்கும். எவருக்கும் எதுவும் தெரியவில்லை. அவரவருக்குத் தெரிந்த வார்த்தைகள் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

எவர் வாயில் இருந்து ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார் என்று வரவேயில்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியம். காரணம் நான் அப்போது சென்னையில் இருந்து ஊருக்கு பயணித்து வந்து கொண்டு இருந்தேன். நான் பயணித்த பேரூந்து ராஜீவ் காந்தி படுகொலை நடந்து முடிந்த இடத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் சாலையில் நின்று கொண்டிருந்தது.

என் பேரூந்துக்கு முன்னால் பின்னால் எத்தனை ஆயிரம் பேரூந்துகள் நின்று கொண்டுருந்த கணக்கு சொல்லிவிட முடியாது? அன்று செங்கல்பட்டில் நடு இரவு 2 மணிக்குச் சிறப்புச் சேவையாக விடப்பட்ட ரயில் மூலமாகப் புளி மூட்டையாக ஒருவர் மேல் ஒருவர் உட்கார்ந்து இடித்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தேன்.

சென்னைக்கு மீண்டும் வந்து சேர்ந்த போது ரயில் நிலையத்தில் வைத்து விற்பனை செய்து கொண்டுருந்த முதல் பாதிப் பக்க செய்திகள் கருப்பு எழுத்தில் ராஜீவ் காந்தி மரணத்தைச் சொன்னது.

அன்று அந்த அலற வைத்த செய்தியதை பார்த்த படித்த பலதரப்பட்ட செய்திகள் மூலம் உணர்ந்தவன் இது போன்ற ஒரு தொடர் எழுதவேண்டும் என்பது விதி தானே?

தமிழகக் கவர்னராக இருந்த பீஷ்ம நாராயணன் இந்த படுகொலையை மத்திய சிபிஐ அமைப்பினர் புலனாய்வு செய்ய வேண்டும் என்று அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் ராஜிவ் காந்தி படுகொலை என்பது ஆறாத ரணத்தை உருவாக்கியிருந்தது.. காரணம் இந்தியாவிற்குச் சுதந்திரம் பெற்றது முதல் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் என்பது புதிது. ஊடகங்கள் அவரவருக்குத் தெரிந்த தெரியாத பரபரப்புச் சம்பவங்களை அள்ளித் தெளித்துக் கோர்த்து சேவை புரிந்தார்கள்.

ஆனால் சிறப்பு விமானம் மூலம் வரவழைக்கப்பட்ட சோனியா, பிரியங்கா மிச்சம் மீதி இருந்த உடலையும், பிரேத பரிசோதனைக்குப்பிறகு கிடைத்தவற்றைப் பெட்டியில் போட்டுக் கொண்டு டெல்லிக்குக் கொண்டு சென்றார்கள். அன்றைய தினம் இந்தப் படுகொலைக்குப் பின்னால் உள்ள காரணங்கள் எவருக்கும் தெரியவில்லை. பல்வேறு யுகங்கள். இந்து மதத் தீவீரவாதம், சீக்கியர்களின் கோபம், காஷ்மீர் தீவிரவாதம்,சிஐஏ முதல் எந்தந்த வகையில் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட முடியுமோ அந்த அளவிற்குச் செய்திகள் தறிகெட்டுப் பறந்தது.

உருவாக்கப்பட்ட புலனாய்வு குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர்கள், அதில் பங்கெடுத்து இருந்தவர்கள் முதல் இந்திய இராணுவ உயர் மட்டம், இந்திய புலனாய்வு குழுக்கள் வரைக்கும் எவருமே இதை விடுதலைப்புலிகள் இயக்கம் தான் செய்து இருக்கும் என்பதை நம்பத்தயாராய் இல்லை என்பது இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் இதற்குக் காரணமாக அவர்கள் அத்தனை பேர்களும் சொன்ன வார்த்தைகள் அதைவிட நிதர்சனமான உண்மை.

” இந்தியாவை எப்போதும் சார்ந்து இருக்க வேண்டிய அவர்கள் இது போன்ற முட்டாள் தனமாகக் காரியத்தைச் செய்யத் துணிச்சல் வராது ” என்றார்கள்.

அதுவே பின்னாளில் முறைப்படியான விசாரணைக்குப் பிறகு தெரிய வந்த போது உருவான கருமை என்பது ஒவ்வொரு தமிழர்களின் மனமும் கலங்கிய மனமாக மாறியது.

பிரபாகரன் மனம் என்பது எப்படி இருந்து இருக்கும் என்பது அவர் விரும்பும் இயற்கைக்கு மட்டும் தான் தெரிந்து இருக்கும்?

அவர் விரும்பிப் படிக்கும் வரலாறு எதிர்காலத்தில் அவரைப்பற்றி என்ன சொல்லும் என்பதை உணர்ந்து இருப்பாரா?

அவரே சொல்லியிருப்பது போல் ” என்னுடன் உடன் இருப்பவர்கள். பழகியவர்கள், உயிராக நான் நினைத்தவர்கள் என்று அத்தனை பேர்களும் பல்வேறு போராட்டகளத்தின் வாயிலாக நான் இழந்த போது அடையும் மனத்தளர்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும். இதில் இருந்து நாம் மீண்டு வந்து தான் ஆகவேண்டும் என்று என்னைத் தேற்றிக்கொண்டு மீண்டு வருவதுண்டு”.

ஆனால் இந்தக் கோர நிகழ்வில் இருந்து எப்போது அவர் மனம் மீண்டு வந்தது என்பதை இறுதிவரைக்கும் சொல்லவில்லை என்பதை விட ராஜீவ் காந்தி மரணம் என்பது ” துன்பியல் சம்பவம்” என்று எளிதாக நகர்ந்து அடுத்த வேலைக்குச் சென்று விட்டார்.

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *