7. தொடங்கியவரும் இழந்தவர்களும் (IPKF)

போர் என்றால் பரஸ்பர அழிவு.

அது குறித்து எப்போதும் யாருக்கும் எந்த அக்கறையும் இருக்கப்போவதில்லை. பழைய மன்னர்கள் வீரத்தை பறை சாற்றத் தொடங்கினார்கள். படையெடுப்பாளர்களின் நோக்கம் வேறுவிதமானது.

மதத்தை நிலைப்படுத்த, வளத்தைச் சூறையாட மற்ற இலவச பரிசாகத் தான் விரும்பும் மனநோய்க்கு ஒப்பானது போன்ற பலதரப்பட்ட சித்ரவதைகளை மக்கள் மேல் திணித்தார்கள். ஆங்கிலேயர்கள் நோக்கம் மொத்தத்திலும் பொருளாதாரம் சார்ந்தது.

ஆனால் என்றும் ஊற்றுக்கண் வற்றாத ஜீவநதிக்கான ஆதாரத்தைத் தொடக்கத்திலேயே உருவாக்கி வைத்தார்கள். பக்கத்தில் இருப்பவர்கள் சேர்ந்து விடக்கூடாது. சேர்ந்தாலும் தீராத பிரச்சனைகளைக் கொண்டு தான் வாழ வேண்டும்.

நாம் மட்டுமே காலம் முழுக்க ஆள வேண்டும். வளர்ந்த நாடுகள் மற்றும் உலகில் பெரியண்ணன் அமெரிக்காவின் அரசியலும் இன்று வரைக்கும் இதுதான்.

இந்தியாவிற்குள் மட்டுமல்ல.

உலகத்தில் மற்ற நாடுகளை ஆண்டு வந்த ஸபானிஷ் மக்கள் முதல் இந்தியாவிற்குள் வந்த மொகலாயர்கள் வரைக்கும் ஊன்றி கவனித்துப் பார்த்தால் தனி மனித வக்கிரம் தான் அதிகமாக வெளியே தெரிகிறது.

ஆனால் இந்தத் தனி மனித வக்கிரம் தான் இந்த இலங்கை அமைதிப்படை வீரர்கள் அநியாயமாகச் சாவதற்கும் காரணம் என்றால் அது தான் உண்மையும் கூட.

விடுதலைப்புலிகளின் நெற்றிகண் திறக்க மொத்த காரணம் இந்தியா.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாய் உள்ளே நுழைந்தது சுயநலத்துக்கு மட்டுமே.

எங்கு வேண்டுமானாலும் சத்தமாகவே சொல்ல முடியும். கேட்ட, விரும்பிய அத்தனைக்கும் ஒத்துக்கொண்டவர்களை வம்புக்கு இழுப்பது போல் ஒவ்வொன்றும் நடந்து கொண்டே இருக்கக் கடைசியில் அது நடக்கவே ஆரம்பித்து விட்டது. யுத்தம் தொடங்கியே விட்டது.

ஆட்டத்திற்கு நாங்கள் ரெடி? நீங்கள் ரெடியா என்பது போல் தொடக்கம் பெற்றது.

அங்கங்கே தங்களுடைய மொத்த ஆதிக்கத்தையும் அமைதிப்படை நிலை நிறுத்தி இருந்தது. ஆனால் இது போன்ற இடங்களில் தான் பிரபாகரன் குறித்த உண்மையான புரிதல்கள் நமக்குத் தேவைப்படும். ஒருவர் மேல் சந்தேகம் என்று தொடங்கிவிட்டால் அது சாவாக முடியும் வரைக்கும் சந்தேகம் தான். பின்னால் வரப்போகும் பிரேமதாசா , ராஜீவ் காந்தி மரணம் வரைக்கும் அந்தத் திட்டமிடல் குறித்துக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

தவறு சரி என்பதைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்.

” யாழ்ப் போரில் இந்தியா வென்றது” ” யாழ்பாணத்தை இந்திய இராணுவம் கைப்பற்றியது / விடுதலைப்புலிகள் தப்பி ஓட்டம்” இப்படித்தான் தொடக்கத்தில் நடந்த 15 நாள் போராட்டத்தின் தொடக்கத்தில் பரப்புரைகள் உலா வரத்தொடங்கின.

ஆனால் அன்று 2000 விடுதலைப்புலிகளிடம் போரிட்ட இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 15,000 வீரர்கள். கடும் போருக்கும், பெரும் இழப்புக்கும் பின் தான் யாழ் நகரை கைப்பற்றினர்.

யாழ் பகுதிக்கு பொறுப்பேற்று இருந்த இந்தியத் தளபதி திபீந்தர்சிங் ” போர் ஓயப்போவது இல்லை” என்பதைச் சூசகமாகத் தெரியப்படுத்தினார். அவர் சொன்ன மற்றொரு வாசகம் ” போர் தொடங்கியதும் 1200 விடுதலைப்புலி கொரில்லா வீரர்கள் யாழ் நகரை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் பத்து வீரர்களின் உயிரைக் குடிக்கப் போராடுபவர்கள்”

போர் தொடங்கியதும் இந்தியா செய்த உடனடி செயல் விடுதலைப்புலிகளின் வானொலி நிலையங்களைத் தகர்த்ததோடு மட்டுமல்லாமல், யாழ் நகரில் இருந்து வெளிவந்து கொண்டுருந்த இரண்டு தமிழ் பத்திரிக்கை அலுவலகங்களையும் அழித்தனர்.

ஏற்கனவே ஜேவிபி என்ற சிங்கள இடதுசாரிக்கு இந்திய அமைதிப்படை உள்ளே வந்தது முதல் கடுப்போ கடுப்பு.

அவர்கள் தங்கள் பங்குக்கு வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்தனர்.

இப்போது அமைதிப்படை ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கினர். தங்களுக்கு எதிராக, உள்ளே நடக்கும் உண்மை நிலவரங்களைக் களத்தில் இருந்து சேகரிக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக மக்களைக் கவனமாகப் பார்த்து பொறுக்கி எடுத்து வெளியேற்றினார்கள். தாங்கள் கொடுக்கும் செய்திகளை இந்தியா மற்றும் வெளிநாட்டில் பரப்ப இந்திய அமைதிப்படையினருக்குப் பின்னால் பல ஜாம்பவான்கள் அற்புத பங்காற்றிக்கொண்டுருந்தனர்.

உள்ளே என்ன நடக்கிறது? என்றே பலருக்கும் அந்த நேரத்தில் புரியவே இல்லை.

இந்திய அமைதிப்படையினர் மொத்த இடத்தையும் கைப்பற்றி விட்டதாக, வெற்றிப் பெற்றதாகத் தம்பட்டம் அடிக்காத குறைதான்.

அப்படித்தான் இந்திய ஆங்கில ஊடகங்கள் பறைசாற்றின. ஒத்து ஊதுகுழல் போல் அங்கங்கே அறிவுஜீவிகளின் அற்புத உரையாடல் தனியாகப் பரப்புரையாகப் பரப்பப்பட்டது. ஆனால் என்ன தான் நடந்து கொண்டுருக்கிறது.

” நாங்கள் சாகத் தயார். ஆனால் நாங்கள் கௌரவமாகச் சாவோம். வியட்நாமில் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவும் போல இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் மொத்த பேர்களும் இறந்தாலும் இந்தியாவின் இழப்பு என்பது பெரிய எண்ணிக்கையில் இருக்கும்”

என்று சூளுரைத்தார் அப்போது பொறுப்பில் இருந்த மாத்தையா.

இதே மாத்தையா தொடர்ச்சியாக அந்தச் சமயத்தில் சொன்ன வார்த்தைகள் இது.

” இந்தியாவை ஒப்பிடும் போது நாங்கள் மிகச் சிறிய இயக்கமே. இது எங்கள் நாடு. எங்கள் பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் அறிவோம்.

எங்கள் சுதந்திரத்தை விரும்பியதால் சிங்களர்களோடு நாங்கள் போரிட்டோம். என்னதான் இருந்தாலும் சிங்களர்களும் இந்த மண்ணின் மைந்தர்களே. இங்கு வரவும், எங்களுக்குக் கட்டளையிடவும் இந்தியாவிற்கு யார் உரிமை கொடுத்தது” என்று கோபத்தின் உச்சத்தில் போர் வியூகங்களை உருவாக்கிக் கொண்டுருந்தார்கள்.

அக்டோபர் 6ந் தேதிக்குப்பிறகு தான் பொறி பறக்க ஆரம்பித்தது. அந்த ஆட்டத்தையும் தொடங்கி வைத்தது இந்தியா தான். ஏறக்குறைய இதே தினத்தில் தான் ராஜீவ் காந்தி விடுத்த அறிக்கையின் வாசகம்.

” அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய அமைதிப்படை கடும் நடவடிக்கை எடுக்கும். பயங்கரவாதிகளைக் கைது செய்து ஆயுதங்களைப் பறிக்கும்” என்றார்.

அக்டோபர் 8,9 ந்தேதிகளில் கிழக்கு மகாணத்தில் இருந்த 15க்கும் மேற்பட்ட போராளி முகாம்களைச் சூழ்ந்து கொண்டு மொத்த ஆயுதங்களையும் கைப்பற்றியதோடு, 500 போராளிகளையும் கைது செய்தது.

இது போன்ற நடவடிக்கைகளில் இலங்கை இராணுவமும் சேர்ந்து கொண்டனர். இதற்கு ” இடி முழக்க நடவடிக்கை ” என்று பெயர் வைத்தனர். இதற்கு மேலும் இந்திய தளபதி திபீந்தர்சிங் மாத்தையா, பாலசிங்கம் இருவரையும் வரவழைத்து ” ஒப்பந்தம் உங்களால் இடையூறு என்றால் மொத்த நபர்களையும் முடித்துக் கட்டி விடுவோம் ” என்று எச்சரித்தார்.

தெளிவான தாக்குதல் என்று இரண்டு தரப்பும் மோதிக்கொண்ட நாள் அக்டோபர் 10.

ஆனால் இதற்குக் காரணம் என்று அப்போது அமைதிப்படை கூறியது.

“பிரபாகரன் மொத்த இந்திய தளபதிகளையும் தாக்க உத்தரவிட்ட செய்திகள் கிடைக்கப்பெற்றோம். அதன் காரணமாகத்தான் இந்தத் தாக்குதல்கள்’ என்றார்கள்.

ஆனால் இருவர் ஆட்டத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுருந்த ஜெயவர்த்னே அக்டோபர் 4ந்தேதி முழு மூச்சாகத் திருகோணமலையில் இருந்து தாக்குதல்களைத் தொடங்க அமைதிப்படையின் உயர் அதிகாரிகளுக்கு மறைமுக உத்தரவிட்டு இருந்தார்.

முறைப்படியான ஒப்புதல் பெற தீட்சித் உடனடியாக டெல்லி பறந்தார். இந்த மறைமுகச் சமிக்ஞை கிடைக்கப்பெற்ற இலங்கை இராணுவத்தினர் சோம்பலில் இருந்து விடுபட்டு தங்களது வேட்டையைத் தொடங்கினார்கள்.

இதன் தொடர்ச்சியாக இழந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கையின் காரணமாக, பின்னால் இருந்து செயல்பட்டுக் கொண்டுருந்த அமைதிப்படையின் மொத்த செயல்பாடுகளையும் பார்த்துக் கொண்டுருந்த பிரபாகரன் அப்போது தான் மணி அடித்துத் தொடங்காத குறையாகத் தனது ஆட்டத்தைத் தொடங்கினார்.

200 இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். போதாதா?

இதைத் தானே எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்தனர். அமைதிப்படையும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். 4ந் தேதி ஜெயவர்த்னே உருவாக்கிய மாய வலை இது. தீட்சித் பறந்து போய் டெல்லியில் பெற்ற அனுமதி காரணமாக 8ந் தேதி தலைமைத் தளபதி சுந்தர்ஜீ இலங்கையின் உள்ளே வந்து மொத்தத்தையும் கேட்டு விட்டு, அப்போதைய இந்திய இராணுவ அமைச்சர் கே.சி. பந்த் உடன் கொழும்பு சென்று மொத்தமாக மினி மீட்டிங் போட்டனர்.

பேச்சு அமைதி நிலைநாட்டுவது குறித்து?.

ஆனால் நடந்த பேச்சோ இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத் தொடங்கப்போகும் முறைப்படியான சண்டைக்கான அச்சாரம்.

இத்தனையும் உள்ளே வைத்துக் கொண்டு அமைதிப்படையின் சார்பாக, ” அக்டோபர் 10ந் தேதி யாழ் நகரில் மாலை 2,45 மணிக்கு நெல்லிப்பாலையில் 4,30 மணிக்கும் விடுதலைப்புலிகள் நவீன ரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கத் தொடங்கினார்கள். இதன் பொருட்டுத் தான் எங்கள் தாக்குதல்களைத் தொடங்கினோம்” என்றார்கள்.

இதுபோக அமைதிபபடை உருவாக்கிய மற்றொன்றும் ஆச்சரியம் வரவழைக்கக்கூடியது.

யாழ்வளைகுடா பகுதியில் EPRLF. TELO.PLOTE போன்ற இயக்க நபர்களை ” மூன்று நட்சத்திர கூட்டணியாக ” வைத்துக்கொண்டு அவர்களை உள்ளே சுதந்திரமாகச் செயல்பட வைத்தனர்.

மொத்த விடுதலைப்புலிகளின் செயல்படுகளையும் தடைசெய்தனர். இந்தச் சமயத்தில் இந்த இயக்கங்களிலும் இருந்து பிரிந்து போன மொத்த சிறு சிறு குழுக்களையும் ஒன்றாக இணைத்து ENTLF என்று (இப்போது இருக்கும்) டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வைத்து உத்திரபிரதேச மாநிலத்தில் பயிற்சி அளித்து உள்ளே இறக்கினார்கள்.

ஆனால் இந்தச் சமயத்தில் இலங்கை எதிர்க்கட்சி தலைவி பண்டார நாயகா சொன்ன வாசகத்தை நீங்கள் தெரிந்து கொண்டே ஆகவேண்டும்.

” இங்குத் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் இருப்பது புதிரானது. ஆபத்தானதும் கூட. அவர்கள் கொண்டு வந்துள்ள ஆயுதங்கள், கனரக ஆயுதங்கள், மோட்டார் வகையிலான தானியங்கி ஆயுத தளவாடங்கள் அத்தனையும் இலங்கைக்கு புதிது. நம்முடைய இறையாண்மையை நாமே கெடுத்துக் கொள்ளப் போகிறோம் என்பதன் தொடக்கம் இது”

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *