6. எடுத்தவர்களும் கொடுத்தவர்களும்

இலங்கையில் போர்த்துகீசியர்கள் ஆண்டபோது, 17 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க மதக் குருவான பெர்ணாஓ த கெய்ரோஸ் (FERNAO DE QUEYROZ) போர்த்துகீசிய மொழியில் முதன்மையான இலங்கை குறித்த வரலாறு எழுதப்பட்டது.

பின்னாளில் வந்த ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொத்த வரலாறுகளும் ஏற்கனவே பாலி மொழியில் எழுதப்பட்ட திரிபு அடிப்படைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. நம்ப முடியாத விசயங்களை வைத்துப் படைக்கப்பட்ட மகாவம்சம், தீபவம்சம் நூல்கள் உருவானது. .

இனக்குழுவாக இருந்தவர்களில் சிங்களர்களே முறையான பூர்வகுடி மக்கள் என்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் என்ற பெயரில் திரிபு வரலாற்றைத் தொடங்கி வைத்தனர்.

இந்த வரலாற்றுப் பிழைகளுக்குச் சரித்திர சான்றுகளாக அன்றே பல விதங்களிலும் உருவாக்கப்பட்டது. இந்தச் சதிகள் பல நூற்றாண்டுகள் கடந்தும் மாற்ற முடியாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இறுதியில் மறக்க முடியாத சம்பவங்களாக இன்று வாழ்ந்து கொண்டுருக்கும் எஞ்சிய தமிழர்களுக்குக் கொடுத்து விட்டது.

உலகச் சரித்திர பக்கங்களில் நீக்கவே முடியாத அளவிற்கு இடம் பெற்ற ஹிட்லரின் நாசிக் கொள்கைகளுக்குச் சார்பாக மொத்த வரலாற்றைத் திரிபு என்று சொல்லும் அளவிற்கு உருவாக்கிய ஜெர்மானிய வரலாற்றாசிரியர்கள் போலவே இலங்கையின் மொத்த வரலாற்றுப் பக்கங்களிலும் இந்தத் திரிபு தான் அதிகமாக உள்ளது.

இதைப்போலவே மற்றொரு ஆச்சரியம்,

அன்று முதல் இன்று வரையிலும் இலங்கையில் வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழர்கள் தங்களைத் தாங்களே பிரித்து வைத்துக்கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பூர்வகுடி தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர் கடைசியாக இலங்கை முஸ்லீம்கள். இதிலும் பிழைப்புத் தேடிப்போன கொழும்புச் செட்டிகள் என்ற சிறு குழுவினர் என ஒவ்வொருவரும் தனித்தனியாக இருக்கின்றனர்.

இலங்கைத் தமிழர்கள் என்ற இந்த ஒரு வார்த்தைக்குப் பின்னால் பல பிரிவுகளாக ஜாதி, இனம், மதம் என்றும் நான் பெரியவர் நீ சிறியவன் என்றும் வாழ்ந்தனர். தங்களுக்கு நிகர் தாங்களே என்று வேறு எவருடனும் சேராமல், கடைசி வரையிலும் மற்றவர்களைத் தங்களுடன் சேர்க்காமல் தனித்துவமாய் வாழ்ந்தது முதல் கொடுமை என்றால், ஒரு இனமே அழிந்து போன இன்றைய சூழ்நிலையில் கூட தங்களை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்று கூடார வாசிகளாக, இருப்பிடமற்ற அலையும் பழைய கால நாடோடிகளாக மாறிய போதும் இன்னும் உணராமல் இருப்பது அடுத்த மகத்தான சோகம்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இனம் என்று பெருமை பெற்றதாகச் சொல்லப்படும் தமிழன் என்பவனுக்குத் தனியாகக் குணம் உண்டு என்பதைப் போல இலங்கையில் வாழ்ந்த தமிழனத்தை அழித்து முடிக்கவென்று உருவான அரசியல் சதிகள் உருவானது இன்று நேற்றல்ல.

இதன் தொடக்கம் ஆங்கிலேயர்கள் உருவாக்கியது.

அவர்கள் அன்று உருவாக்கியதை தொடக்கம் முதலே கெட்டியாகப் பிடித்து வெற்றி பெற்றவர்கள் சிங்களர்கள். தன்னையும் உணர்ந்து கொள்ளாமல், தமிழினம் என்பதை விடத் தங்கள் இனம் ஜாதி என்ற குறுகிய எண்ணம் கொண்டவர்களால் தொடங்கியது இந்தத் தமிழினத்தின் வீழ்ச்சி.

இதன் முடிவு இன்றைய தினத்தில் இலங்கையில் சர்வதேச அரசியலின் எழுச்சியாய் வந்து முடிந்துள்ளது. தவறான அரசியல் கொள்கைகள் எந்த அளவிற்கு மொத்த சமூகத்தையும் சீர்குலைக்கும் என்பதைப் போல தவறானவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு எந்த அளவிற்கு மோசமான பாதைக்குச் செல்லும் என்பதற்கு இலங்கையில் ஆட்சி புரிந்தவர்களே மிகச் சிறந்த உதாரணம்.

இலங்கையின் மொத்த வரலாற்றுப் பாதைகளைப் பார்த்தோமென்றால் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்கள சரித்திரத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கென்ற பல தலைவர்கள் உழைத்துள்ளனர்.

உழைத்தவர்களைப் போலத் தமிழர்களின் தடங்களையும் கவனமாக அழித்துள்ளனர். அதுவே மறக்கப்படும் அளவிற்கு அவர்கள் உழைத்த உழைப்பு ஆச்சரியமாக உள்ளது.

நமக்குத் தமிழர்களின் வரலாறு கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப் பாதையை விட மற்றொரு ஆச்சரியத்தைக் கவனித்தால் நமக்குப் புரியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் உருவானது மாற்றங்களின் மூலம் உருவான அரசியல் கணக்குகளை உணர்ந்து கொள்ளாதவர்கள் எப்படித் தலைவனாக மாற்றம் பெறமுடியும்? என்பதைக் காலக்கண்ணாடி போல் தமிழர்களின் கடந்து வந்த பாதைகள் நமக்கு உணர்த்துகிறது.

காரணம் அன்று முதல் இன்று வரை அரசியல் என்பது ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. கணக்குகளை அடிப்படையாகக் கொண்டது.

எல்லாமே சாத்தியம். அது எப்போதும் அரசியலில் மாத்திரமே என்பதை நம்மால் ஈழ வரலாற்றின் மூலம் புரிந்து கொள்ள முடியும்..

இலங்கையில் வாழ்ந்த திருவாளர் அப்பாவி தமிழ் பொதுஜனம் முதல் எங்களுக்கான உரிமை வேண்டும் என்று அரசியல் மூலமாக அஹிம்சை வழியில் போராடியவர்கள் வரை கேட்டது ஒன்றே ஒன்று தான்.

எங்களை வாழ விடு என்பது தான்.

மறுக்கப்பட்ட போது தான் “எங்களின் உரிமைகளைப் பெற ஆயுதமேந்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்று ஆயுதப் பாதையைத் தேர்ந்தெடுத்தனர். தங்களின் குரலை வேறுவிதமாக உயர்த்தினார்கள். இவர்கள் அத்தனை பேர்களும் ஆட்சிபுரிந்து கொண்டுருந்தவர்களிடம் கேட்டது

“எங்கள் தனித்தன்மையான கலாச்சராத்துடன் நாங்கள் வாழ எங்களுக்கான இடத்தைக் கொடு” என்று போராடிப் பார்த்தார்கள். இறுதியில் மண்ணோடு மண்ணாய் கலந்து மாவீரர்களாகப் போனார்கள்.

“எங்கள் நிலத்தை எடுத்துக்கொண்டாய். எங்களின் பிணத்தை எங்குக் கொண்டு புதைக்கப் போகிறாய்?” என்று கேட்டவர்களின் தனித் தமிழீம் எதிர்காலத்தில் வெல்லக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளதா?

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *