5. முற்றுகைக்குள் இந்தியா –1

நாம் இப்போ ஒரு பத்து வருஷம் பின்னால போக வேண்டும்.

அப்போது தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் கதைக்கு ஒரு முடுச்சு போட முடியும். இது வரைக்கும் நாம் பயப்பட வேண்டிய ஒரு ஆளைப் பற்றிப் பார்த்துக் கொண்டு வந்தோம். இனிமே கொஞ்சம் லகுவா பேசிக்கிட்டே போகலாம்.

இந்த இலங்கை என்ற நாட்டுக்கு யார் யாரோ உண்மையாக உழைத்துவிட்டு செல்ல இன்று ஆனந்த கிருஷ்ணன் அவருக்குப் பினனால் சீனா, சீனாவை விரட்ட இந்தியா, இவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்குக் கூட்டாகப் பிரிட்டன் என்று ஒரு பக்கமும் மற்றொரு புறம் “நாளைக்குப் புதுசா ஒரு துப்பாக்கி வருது? ரெண்டு தமிழர்களைச் சுட்டுப் பார்க்கிறாயா?” என்று இஸ்ரேலும், ரஷ்யாவும் இலங்கைக்கு இன்று கூவிக்கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

விட்டகுறை தொட்ட குறையாக நம்ம பங்களாளி பாகிஸ்தான்.

ஏன்? என்ற கேள்விக்கு ஒரே காரணம் இந்தியா.

இந்தியாவின் ஜனநாயகம்.

உலக நாடுகளுக்குத் தேவைப்படும் மனிதவளம், கனிமவளம் இதற்குமேலாக ஒவ்வொரு நாடுகளும் விரும்பும் சந்தைப்பொருளாதர வாய்ப்புகள் இந்தியாவில் மலிவாகக் கிடைப்பதே முக்கியக் காரணமாகும்.

ஆனால் சீனாவால் நேரிடையாக இந்தியாவை எதிர்த்துக் கொள்ள முடியாது. காரணம் அமெரிக்கா. அமெரிக்காவால் இந்தியாவிற்கு ஓரளவுக்கு மேல் தொந்தரவு கொடுக்கவும் முடியாது. காரணம் தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் சந்தையும், இந்தியாவின் மேல் வலிய திணித்துப் பெற்றுக்கொள்ள வேண்டிய ஆதாயங்களுமே முக்கியக் காரணமாக இருக்கிறது.. ஆனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவின் சந்தை முக்கியமானதாகத் தெரிகின்றதோ அந்த அளவுக்கு இந்தியாவின் நிலைத்தன்மை என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருந்து விட வேண்டும் என்பதில் குறியாகவே இருக்கிறார்கள். உலகில் ஆச்சரியப்படக்கூடிய இந்தியாவின் ஜனநாயக அமைப்பும், அடித்தாலும் பிடித்தாலும் அண்ணன் தம்பி நீயும் நானும்டா என்கிற கனவை மெதுமெதுவாகச் செல்லறிக்க வைக்க வேண்டும்.

அதைத்தான் இபபோது இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் இந்தியாவைச் சுற்றியுள்ள வளைகுடா நாடுகளாகட்டும், தெற்காசியாவின் பிற நாடுகளாகட்டும் எங்கும் இந்தியாவைப் போல நிலைத்தன்மை இல்லாத ஒரு தடுமாற்ற சூழ்நிலையில் தான் உள்ளது. அதிலும் பாதிக்கு மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவின் நாட்டாமையில் பெயருக்கென்று இருந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் வேறானது. அமெரிக்கா இந்தியா மேல் செலுத்தும் ஆதிக்கம் தெரிந்ததே.

ஆனால் முழுமையான அடிமையாக இருக்க மாட்டோம் என்று விடாமல் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்திய நாட்டை ஓட்டு என்ற உரிமையின் மூலம் ஜனநாயகம் என்ற சக்கரத்தை 120 கோடி இந்தியர்களும் தெரிந்தோ தெரியாமலோ சுற்ற வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

அளவு கடந்த சகிப்புத்தன்மை, வாழ்க்கை குறித்த புரிந்துணர்வு என்று காலம் காலமாகக் கற்பிக்கப்பட்டு வந்த கலாச்சாரம் என்ற மாயை இந்தியர்களை ஒருங்கிணைத்து வைத்துள்ளது.

என்னதான் சுயநலம், லஞ்சம், ஊழல், அதிகாரதுஷ்பிரயோகம் என்று அடுக்கடுக்கான குற்றாச்சாட்டுகள் இந்தியாவின் ஆணிவேரை அசைத்துப் பார்த்தாலும் நாம் ஓழுங்கான முறையில் இங்கு வாழ்ந்தால் இந்த இந்திய பூமி என்றும் சொர்க்கபூமியே என்பதை உணர்ந்து தான் ஒவ்வொரு இந்தியனும் அமைதி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இலங்கையின் கதையோ கண்ணீருக்கு பஞ்சமில்லாத நாடு. காரணம் இலங்கை என்ற நாடு இன்றைய சூழ்நிலையில் சிங்கப்பூர் போலவே ஒரு நல்ல பொருளாதார வளமிக்க நாடாக வந்து இருக்க வேண்டிய நாடு. சொல்லப்போனால் வாங்கி விற்க மட்டுமே உதவும் சிங்கப்பூரே இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்றால் இலங்கையின் உள்ள இயற்கை வளம், துறைமுகம், சுற்றுலா, மனிதவளம் என்று எல்லாவகையிலும் எவ்வளவு தூரம் சிறப்பாக முன்னேறியிருக்க வேண்டும்.?

ஆனால் இலங்கை பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னாலே அதற்கான வாய்ப்புகள் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இலங்கையின் முதல் பிரதமர் சேனநாயகா மற்றும் அவர் பதவிக்கு வர உதவிய அவர் சகோதர்கள் வளர்த்துவிட்ட சிங்களர் தமிழர் என்ற இனவாதம் தான் இன்று வரைக்கும் பாடாய் படுத்தி இன்று இலங்கையைப் பிச்சைக்கார நாடாக மாற்றியுள்ளது. உலகத்தின் பார்வையில் இன்று பாகிஸ்தான் எவ்வளவு பாவமான நாடாகத் தெரிகின்றதோ அதைவிட மொத்த உலக மானுட சமூகப் பார்வையில் ஒரு அருவருப்பை உருவாக்கக்கூடிய நாடாக இன்று இலங்கை உள்ளது.

நமக்கு அருவருப்பா முக்கியம். அறுவடை தான் முக்கியம் என்று ராஜபக்ஷேவின் மொத்த குடும்பமும் சுருட்டியது போக வந்தவர்கள் போனவர்கள் என்று முடிந்தவர்கள் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகத்திலே மிகப் பாவமான மக்கள் இரண்டு பேர்கள்.

ஒன்று ஈழத்தில் உள்ள சிங்கள மக்கள். மற்றொன்று தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள்.

காரணம் இலங்கையில் உள்ள சிங்களர்களுக்குத் தேவையான போது வெறியேத்த சிங்கள இனவாதம் அங்குள்ள அரசியல்வாதிகள் கையில் இருக்கிறது.

இதை வைத்துக் கொண்டே இன்னும் 50 வருடங்களை ஓட்டிவிடுவார்கள்.

இங்குள்ள தமிழர்களுக்குத் திரைப்படமும், அரசியல் பிரிவினைகளும் இதற்கென்று ஜிங்ஜாங் அடிக்க ஒரு பெரிய கூட்டமும் இருக்கக் கடைசி வரைக்கும் இந்தத் தமிழர்கள் மயக்கத்திலே இருந்து செத்து விட வேண்டியது.

இப்பொழுது நாம் பின்னோக்கி பயணிக்க வேண்டிய ஆண்டு ரணில் விக்ரமசிங்கே பதவிக்கு வந்த ஆண்டு.

2002

பிரதமராக வந்தமர்ந்த ரணில் விக்ரமசிங்கே வேண்டுகோளின்படி நார்வே நாடு சமாதான முயற்சிகளை முன்னெடுக்கச் சொல்ல புதிய பாதை உருவானது. இதைத்தான் ரணில் பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.

” 2001ல் போருக்காக ரூபாய் 8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை செலவழிக்கப்பட்டுருக்கிறது. கடந்த 19 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி போருக்காகச் செலவிடப்பட்டு நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டங்கள் கட்டுப்பாடற்று வளர்ந்து நாட்டைச் சீரழிவு நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது ” என்றார். ரணில் விக்ரமசிங்கேவுக்கும் விடுதலைப்புலி இயக்கத்திற்கும் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஆறு சுற்றாகத் தாய்லாந்தில் செப்டம்பர் 16 2002 ல் தொடங்கி ஜப்பான் நாட்டில் ஹக்கோனெ நகரில் 2003 மார்ச் மாதம் முடிவ்டைந்த போது வேறொன்றும் உள்ளே நடந்து முடிந்திருந்தது. .

வெவ்வேறு திசையில் முட்டி மோதிக் கொண்டுருந்த சந்திரிகாவும் ரணில் விக்ரமசிங்கேயும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய சர்வதேச ஒப்பந்தங்கள்

அமெரிக்காவுடன் சுதந்திர வான்வெளி ஓப்பந்தம்,. இதன் மூலம் அமெரிக்காவின் சகல விமானங்களும் எந்தத் தேவைகளுக்காகவும் இலங்கையின் வான்வெளி எல்லைக்குள் பறந்து செல்லலாம். எந்த விமான நிலையத்தையும் பயன்படுத்திக் கொள்ளவும் எரிபொருள் நிரப்பவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை நிலத்தடியில் உள்ள 100 எண்ணெய் குதங்களில் 15 ஐ இந்தியப் பெட்ரோலியக்கட்டுப் பாட்டு ஸ்தாபனத்திற்கு கொடுக்கவும் இலங்கையில் 100 பெட்ரோல் நிரப்பு விற்பனை நிலையங்களை நடத்தவும் புதுடெல்லியில் கையெழுத்து இடப்பட்டது.

இலங்கையில் பயங்கரவாத ஒழிப்புக்க இராணுவ ஒத்துழைப்பு தரக்கூடிய கடல் பிராந்திய ஒப்பந்தம் அத்துடன் இலங்கையின் கடற்பரப்பில் ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கும் சீனாவுடன் ஒப்பந்தம், .

ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தம் பெல்ஜீயத்தின் தலைநகரான பிரஸெல்ஸ்சில் கைச்சாந்திடப்பட்டது. .

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம். இதன் மூலம் இராணுவ ஆயுத வழங்கல் மற்றும் பயிற்சி ஆலோசனைகள் அமெரிக்காவிடம் இருந்து திட்டவட்டமாகப் பெறப்படும்.

இந்தியாவில் இலங்கையின் அதிரடிப்படைப் போலீசாருக்கு விசேட பயிற்சி, . இதன் மூலம் வட கிழக்குப் பகுதிகளில் இருந்து வரும் அதிரடிப்படைப் போலீசார் நவீன பயிற்சியும் படைக்கலன்களும் பெறுவார்கள்.

ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுருந்த இந்திய இலங்கை வர்த்தக ஒப்பந்தங்கள் மீள் ஆய்வு செய்யப்படும்

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே பெரிய பாலம் அமைக்கப்பட்டுத் திரிகோணமலைக்கான தரைவழி நெடுஞ்சாலை அமைக்கப்படும். திரிகோணமலை புதிய நிர்மாணம் செய்யப்படும். இது இந்தியாவால் மேற்கொள்ளப்படும்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இந்தியாவிடம் கொடுக்கப்பட்டு அதன் மூலம் காங்கேசன் துறைமுகமும் இந்தியாவின் பொறுப்பில் விடப்படும்.

அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் ஜப்பான் ஆகியவற்றுடன் மேலும் விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தங்கள் கைசாந்திடப்பட ஏற்பாடு நடந்தது.

எந்த அளவிற்கு இந்த ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்க உதவப் போகின்றது என்பதை உணராத விடுதலைப்புலிகள் உள்ளே அமைதிக் காற்றைச் சுவாசித்துக் கொண்டுருந்தனர். அதிபர் சந்திரிகாவும் பிரதமர் ரணிலும் அமெரிக்கப் பயணம் அடுத்தடுத்து பறந்து அமெரிக்க அதிபர் புஷ்ஷை சந்தித்தித்து மில்லினியம் சேலஞ்ச் திட்டத்தின் கீழ் பலகோடி டாலர் உதவி பெற வழிவகுத்தனர்.

ஆனால் இந்தச் சர்வதேச ஓப்பந்தங்களும், சர்வதேசங்களை இலங்கைக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்று துடியாய் துடித்தவர் ஜே.ஆர். ஜெயவர்த்னே.

இவர் அன்று உருவாக்கிய பாதையின் முடிவு தான் இப்போது ரணில் விக்ரமசிங்கேவுக்கு உதவியது. ஜெயவர்த்னே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பின்னால் மொத்த மக்களும் ஒன்று சேர வேண்டும் என்று மறைமுகமாகச் செய்து காட்டியவர்.

1983 ஜுலை கலவரம் என்பது இவரை “இனவாதத்தின் தந்தை” என்றே உலகத்திற்குக் காட்டியது. இவர் சர்வதேசங்களையும் இலங்கைக்குள் கொண்டு வந்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்திற்குக் காரணம் இந்தியா. மொத்த இந்தியாவை வெறுப்பாகப் பார்த்ததைப் போலவே தமிழர்கள் என்றாலே அளவு கடந்த விஷத்தை கக்கிய இவரும் அடிப்படையில் தமிழரே.

இவரைப்பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்களைப் பார்த்து விட்டு சர்வ தேச ஒப்பந்தங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மக் கடலுக்குள் ஓடத்தை நகர்த்துவோம்.

ஓடத்தை நகர்த்துவோம்………..

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *