5. இனக்குழுக்கள்

3000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நாகரிகம் உருவாகாமல் குழுவாக வாழ்ந்தது முதல் கல்லணையைக் கட்டி புதிய தொழில் நுட்பத்தை உலகத்திற்கு உணர்த்திக்காட்டிய கரிகாற்பெருவளத்தான் தொடங்கி, சேர சோழ பாண்டிய மன்னர்கள் இலங்கையில் ஆட்சி புரிந்தது வரைக்கும் நாம் பார்க்க வேண்டும்.

15 ஆம் நூற்றாண்டில் பேர்த்துகீசீயர்கள் வந்த போது ஆண்டுக் கொண்டுருந்த சங்கிலி மன்னன், பண்டார வன்னியன் போன்ற தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வாழ்ந்த அந்த இலங்கையின் சரித்திர சுவடுகளும் இன்று எங்கேயோ மறைந்து போய்விட்டது. தொடக்கம் முதல் இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்த வரலாற்றுப் பக்கங்கள் கவனமாகப் பதிவு செய்து உள்ளது. ஆனால் இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் இன்னமும் அங்கு வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழர்கள் சிங்களர்களிடத்தில் உயிர்ப்பிச்சையும் அதிகாரப் பிச்சைக்காகவும் வாழ வேண்டிய சூழ்நிலை.

தொடக்கத்தில் இன்று போல் பல கண்டங்களாகப் பிரியாத நிலையில் இருந்த போதும், கண்டத்தின் தட்டுக்கள் நகர்ந்த நகர்வில், அன்றைய காலகட்டத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இருந்தது கடந்து செல்லும் தூரம்தான்.

இப்போது அழைக்கும் பாக், நீரிணையோ, மன்னார் வளைகுடாவோ அல்ல.

பத்துலட்சம் ஆண்டுகளில் எட்டு லட்சம் ஆண்டுகள் ஒன்றிணைந்த பகுதியாகத் தான் இலங்கை இந்தியாவுடன் சேர்ந்து இருந்ததைச் சரித்திர சான்றுகள் மூலம் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். கடந்து செல்லும் அளவிற்கு இருந்த இந்தத் தீவில் குடியேறியவர்கள், தொடக்கத்தில் வேடர்களாக நாகர்களாக இறுதியாக இனக்குழுக்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இலங்கை தீவின் உள்ளே சென்றவர்கள் அத்தனை பேர்களுமே இந்தியாவில் இருந்து குறிப்பாகத் தென்னிந்தியாவின் வழியாகத்தான் சென்றார்கள் என்பது தொல்லியல் தரும் ஆதரப்பூர்வமான சான்றுகள் ஆகும்.

காலப்போக்கில் படிப்படியாக உருவான இடப்பெயர்ச்சிகளும் குடியேற்றங்களும் இலங்கையில் உருவாக ஆரம்பித்தது.. கண்டத்திட்டு நகர்வில் அப்போது பிரிந்த மாலத்தீவு தூரமாய்ப் போனதால் அங்குக் குடியேற்றம் குறைவு.

இலங்கையின் தொடக்கக் காலப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித நாகரிகம் இருந்ததாக அறியப்பட்டுள்ளது. அங்குப் பல்வேறு இடங்களில் இருந்து பெயர்ச்சியாகி உள்ளே வந்து வாழ்ந்து கொண்டுருந்த கண்டு கொள்ள முடியாத வகையில் பல்வேறு இனங்களாகப் பரவித் திரிந்த கூட்டத்தினர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போதும், பின்னாளில் கால மாற்றத்தினால் தொழில், தொடர்பு, வாணிகம் என்று பின்னால் வளர்ந்து புதிய பண்பாட்டு கலப்பின கலாச்சாரங்கள் தோன்றியது.

3000 ஆண்டுகளுக்கு முன் தான் முழுமையான மாற்றங்களும் இனம் கண்டு கொள்ளக்கூடிய குழுக்களும் தோன்றின..

இன்றைய இலங்கை 7000 ஆண்டுகளுக்கு முன்னால் கூட அதுவொரு தனி நாடு அல்ல. அதுவும் ஏறக்குறைய தமிழ்நாட்டை ஒட்டிய ஒரு நிலப்பகுதி. இலங்கைக்கும் இன்றைய தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள குட்டித்தீவுகளையும் ஆழம் இல்லாத கடற்பகுதிகளையும் நடந்து சென்று அடைந்து விடலாம் என்றால் உங்களுக்கு எப்படியிருக்கும்?.

யாழ்பாணத் தீபகற்பம் பாக் நீரிணையைக் கடந்து வருபவர்களுக்குத் தலைவாசல் போல இருந்தது. சங்கத்தமிழ் செய்யுள்களில் மாவிலங்கை தொல்மாவிலங்கை என்று காணக்கிடைக்கும் சொற்களைப் போலத் தொடக்கத்தில் தென்னிலங்கை என்று தான் தமிழ்நாட்டுடன் சேர்த்து அழைக்கிறார்கள்.

தொடக்கக் கால இலங்கையின் கடல் சார்ந்த ஒவ்வொரு வணிகம் சார்ந்த தொடர்புகளும், இன்றைய மேற்கு வங்காளம் தொடங்கி கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என்று கடற்கரை ஓட்டிய பகுதிகள், இங்கு வாழ்ந்து கொண்டுருந்த மக்களும், தாங்கள் உருவாக்கிய வணிகத் தொடர்பும், உருவாக்கிய வியாபார பரிவர்த்தனைகளும் இலங்கையோடு ஒரு நல்ல தொடர்பை உருவாக்க காரணமாக இருந்தது.

இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வந்த வணிகத் தொடர்புகள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. அதுவே தான் தொடக்கக் கால நாகரிக மாற்றங்களாக இருந்தன.

மன்னார் வளைகுடா முத்துக்களும், சங்கு,மணி,மீன் மற்றும் கடல் சார்ந்த அத்தனை பொருட்களுமாய் இலங்கையைத் தொடக்கத்தில் “இரத்தினத்தீவு” என்றழைக்கும் அளவிற்கு வணிகச் சிறப்புடன் முன்னேறத் தொடங்கியது. மத்திய, மேற்கு, வடக்கு இலங்கை என்று பிரிக்கப்படாமல் உள்ளே ஒவ்வொரு பகுதியிலும் இருந்த சிறு நகர்ப்பகுதிகளுக்குள் இந்தியாவின் கடற்பகுதியை ஒட்டியவர்கள் வணிகத்தின் வாயிலாக உள்ளே வர காலமாற்றமும் கலப்பின மாற்றமும் நடக்கத் தொடங்கியது. அதுவே உள்ளே இருந்தவர்கள் குழுக்களாக மாறி, ஒவ்வொரு குழுக்களும் அந்தந்த பகுதிகளை ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்தது.

விஞ்ஞான அடிப்படை என்பதோடு நம்முடைய பண்டைய இலக்கியச் சான்றுகள் மூலம் இந்தத் தென்னிலங்கை எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை நாம் உணர முடியும். ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் திருஞானச் சம்பந்தர் பாடிய தேவாரத்தில் இலங்கையின் வடமேற்கில் உள்ள மாதோட்ட நகரின் திருக்கேதீச்சரத்தை துதித்துப் பாடியுள்ளார் (தென்னிலங்கையர் குலபதி மலைநலிந்தெடுத்தவன்….)

ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய இலங்கையில் தமிழர் சிங்களர் என்ற எந்தப் பிரிவும் இல்லை.

பல்வேறு இனக்குழுக்கள். பேசிய மொழி என்ன? வாழ்ந்த வாழ்க்கை என்ன? என்பதெல்லாம் பாலி மொழியில் சொல்லப்படும் ஒரு சில சான்றுகளை வைத்துத்தான் ஓரளவிற்கு நம்மால் ஊகித்துக்கொள்ள முடியும். சிங்கள மொழியொன்று அப்போது இல்லை. மொத்தமாகப் பாலி மொழியில் எழுதப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களை வைத்து தான் மூன்றாம் நூற்றாண்டின் இறுதி வரைக்கும் ஒரு வரையறைக்குள் கொண்டுவர முடிகின்றது.

பாலி மொழி வரலாற்றில் மிகப் பழைமை வாய்ந்த காப்பியம் தீபவங்ஸ நூல். அதனையொற்றி எழுதப்பட்டது மகாவங்ஸ நூல். இந்த நூல்களே இன்று வரைக்கும் சிங்களர்களால் போற்றிப் பாதுகாக்கப்படும் புனித நூலான தீபவம்சம், மகாவம்சமாகும்

இதன் மூலம் அநுராதபுரம் அரசு பற்றிய தகவல்களும், பௌத்த சங்கம் குறித்த விபரங்களும் பெறமுடிகின்றது. இனக்குழுவில் இருந்ததாகச் சொல்லப்படும் தமிழர்கள் குறித்த தகவல்கள் இதில் மிகக் குறைவு. பின்னாளில் வந்த உயர் குழுவினர் பயன்படுத்திய பிராகிருத மொழியின் மூலம் கல்வெட்டுக்களும், மலைக்குகையில் எழுதப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு தமிழ் பௌத்தர்கள், அவர்களின் தானங்கள் குறித்து ஓரளவுக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலாச்சார,பண்பாடுகள் தோற்றம் பெறக் காரணமாக இருந்த வணிகத் தொடர்பின் மூலம் ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இலங்கையின் தோற்ற வாயிலான நாகத்தீவு, களணி, தம்பப்பண்ணி ஆகிய இடங்களில் குறுநில அரசுகளும் தோற்றம் பெற்றது.

காலப்போக்கில் அநுராதப்புரத்தில் பௌத்த சமண சிவ மதங்களின் எழுச்சியும், அசோக மன்னரது வருகைக்குப்பிறகு பிராகிருத மொழியின் எழுச்சியுமாய் மாற்றம் பெற்றது.

அதுவே அநுராதபுரத்தை ஆண்டுக் கொண்டுருந்த மன்னர் பௌத்த மதத்தைத் தழுவியிருந்த ஒரே காரணத்தினால் மட்டுமே அப்போது பிராகிருத மொழி ஆளுமையில் இருந்தது.

ஆனால் வணிகத் தொடர்பும் வந்து இறங்கிக்கொண்டுருந்த தமிழர்களின் தமிழ் மொழியும் ஆதிக்கம் செலுத்த இரு வேறு குழுக்களாகப் பிரிந்து குறிப்பிட்ட இடங்களில் ஆளுமை செய்யத் தொடங்கினர். இந்த இரு வேறு குழுக்களில் அவ்வப்போது தோன்றிய எழுச்சி என்பது இலங்கைக்கு வெளியேயிருந்து உள்ளே வந்து கொண்டுருந்த வணிகத் தொடர்பின் காரணமாக முன்னேறுவதும் பின்னேறுவதுமாக நடந்தேறியது.

License

5. இனக்குழுக்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *