4. பிரபாகரன் பொதுக்கூட்டம்

கூட்டத்திற்கான தலைப்பு

” நாம் இந்தியாவை நேசிக்கின்றோம்”

யாழ்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் முறையாக லட்ச மக்களுக்கு மேல் திரண்டுருந்த பொதுக்கூட்டத்தில் பினவருமாறு உரையாற்றினார்.

அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே,

” இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. நமது சக்திக்கு அப்பாற்பட்ட, உருவாக்கப்பட்ட இந்த நிகழ்வின் இறுதி என்பது சாதகமா இல்லை பாதகமா? என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த ஒப்பந்தம் எங்கள் இயக்கத்தையோ, போராளி குழுக்களையோ கலந்து ஆலோசிக்காமல் திடுமென நிர்ப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. டெல்லிக்கு என்னை வரவழைத்த போது கூட முழுமையான விபரங்கள் தெரியாது. மொத்த விபரங்களையும் சொன்ன போது இந்திய அரசின் தந்திரம் எங்களுக்குப் புரிந்தது. நம்முடைய நலத்தை விட இலங்கை இந்தியாவின் பிராந்திய நலத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்த நாங்கள் எதிர்ப்பதை தவிர வேறு ஒன்றும் எங்களுக்குத் தோன்றவில்லை.

ஆனால் எங்களின் எதிர்ப்பு மொத்தமும் அர்த்தமற்றதாய்ப் போய்விட்டது. அவர்களின் ஆதிக்கத்திற்கு நாங்கள் அணிபணிந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம். வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த ஒப்பந்தம் எங்கள் இயக்க வழிமுறைகளை, நோக்கங்களை, கடந்து வந்த மொத்த செயல்பாடுகளையும் பாதிக்கின்றது. 15 வருடங்களாகப் பாதுகாத்து பயணித்து வந்த பாதை இன்று கேள்விக்குறியில் வந்து நிற்கிறது. எங்களை நிராயுதபாணிகளாக மாற்றுவதில் இந்தியா வெற்றிக் கண்டுருக்கிறது.

இனவாத சிங்கள அரசின் மீது என்றும் எமக்கு நம்பிக்கை வரப்போவது இல்லை. ஆனால் பாரதப்பிரதமர் அதற்கென்று சில தனியான வாக்குறுதிகள் தந்துள்ளார். எமது மக்களின் நல்வாழ்வில் அக்கறை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சிங்கள படைகள் இனி தமிழர் அழிப்பு என்ற நோக்கத்தில் இறங்காது என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம். இதன் அடிப்படையில் எங்கள் ஆயுதங்களை இந்தியாவில் இருந்து வந்துள்ள அமைதிப் படையிடம் ஒப்படைக்க என்று முடிவு எடுத்தோம்.

எமது மக்களின் பாதுகாப்புக்காக நல்வாழ்வுக்காக நாம் எத்துணைப் போராட்டங்களை, இழப்புகளைச் சந்தித்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நமது மக்களின் பாதுகாப்புக்காக வைத்துள்ள ஆயுதங்களையும் இந்தியாவிடம் நாம் ஒப்படைக்கின்றோம் என்றால் மொத்த பாதுகாப்பும் இனி இந்தியாவின் பொறுப்பு என்று அர்த்தம். இந்த நிகழ்வு எங்களுக்கான பின்னடைவு என்றபோதிலும் நம் மக்களின் விடிவுகாலம் என்பதில் உறுதியாக இருப்பதால் நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கின்றோம்.

நாங்கள் இந்த ஆயுதங்களை ஒப்படைக்காமல் போனாலும் இந்திய ராணுவத்துடன் மோத வேண்டிய துர்பாக்ய நிலைமை ஏற்படும். இதை நாங்கள் விரும்பவில்லை. நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய வீரனுக்கு எதிராக எங்கள் ஆயுதம் போராடாது. இனி எங்கள் மக்களைப் பாதுகாக்கும் மொத்த பொறுப்பும் இந்திய வீரர்களுக்குச் சொந்தமாகின்றது. ஈழத் தமிழன் ஒவ்வொருவர் உயிருக்கும் உடைமைக்கும் இனி இந்தியாவே பொறுப்பு. இந்தச் சூழ்நிலையில் நாங்கள் இந்தியாவுடன் ஒத்துழைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

” தமிழீழ தனியரசே தமிழீழ மக்களுக்கு நிரந்தர இறுதி தீர்வாக இருக்கமுடியும் ” என்ற என்னுடைய அசையாத நம்பிக்கை என்றும் மாறப்போவது இல்லை. இந்த நோக்கத்திற்காகவே இறுதிவரை நான் போராடுவேன் என்பதை இங்கு அழுத்தமாகத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

போராட்ட களம் மாறலாம். ஆனால் எமது லட்சியங்கள் மாறப்போவது இல்லை. இந்த லட்சியம் நாம் அடைய வேண்டுமென்றால் உங்கள் அத்தனை பேர்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவையாய் இருக்கிறது.

தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்கு பெற, அல்லது தேர்தலில் போட்டிட வேண்டிய அவஸ்யம் எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவது இல்லை. இதை நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன் “

பிரபாகரன் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் அல்ல. உணர்வுகளும் அத்தனை சீக்கிரமாக அவரைப் பாதிப்பதும் இல்லை. ஆனால் அன்றைய பொதுக்கூட்டம் முடிக்கும் போது எந்த மனோநிலையில் இருந்து இருப்பார் என்பதை மொத்த நீண்ட உரையைப் படிக்கும் போது சின்னக்குழந்தைக்குக் கூடப் புரியும்?

மிகப்பெரிய ஆச்சரியம்

உலக ஊடகங்களும், இந்திய பத்திரிக்கைகளும் இந்தப் பேச்சை வெகுவாகப் பாரட்டின. முக்கியவத்துவம் கொடுத்து முதல் பக்கத்தில் வெளியிட்டன. ஏறக்குறைய பிரபாகரனுக்கு இரண்டு பக்கமும் சிக்கிக்கொண்டு உள்ளே அழுந்திக்கொண்டு உணர்வுகளை வெளியே காட்டிக்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை.

இந்தப் பொதுக்கூட்டம் என்பது கூட அப்போது அவருக்குள் இருந்த உணர்வுகளுக்கு வடிகால் போலத் தான் இருந்திருக்க வேண்டும்.

இது போன்ற சூழ்நிலையில் சராசரி மனிதன் மூர்ச்சையாகி விழுந்து விடும் சூழ்நிலை தான் அதிகமாக இருக்கும். அமைச்சர் பதவி பிடுங்கப்பட்ட அடுத்தநாளே இதயவலி வந்துவிடும் தியாகிகளுக்கும் 15 ஆண்டுகளாக உயிர் வெறுத்து போராடிய, களமாடியவருக்கும் உள்ள இந்த நிகழ்வை உங்களால் வித்யாசம் கொண்டு பார்க்க முடிகின்றதா?

ஆனால் பிரபாகரனுக்கு மட்டுமல்ல ஆயுத ஒப்படைப்பு என்ற சடங்கில் நடந்த நிகழ்வின் போது மற்றப் போராளிகளின் ஆத்திரமும், அவநம்பிக்கையும் வெளியே காட்டுவதாக இருந்தது. அந்த அளவிற்கு ஒவ்வொருவருக்கும் உள்ளே இருந்த உணர்வலைகள். ஏறக்குறைய சாவுச் சடங்கு போல் தான் அது நடந்தது.

வெளியே சிரிப்பு. உள்ளே அழுகை.

பிரபாகரனுடன் டெல்லிக்கு பயணித்தாரே யோகி, முதன் முதலாகத் தான் வைத்திருந்த துப்பாக்கியை ஒப்படைக்க வந்த காத்திருந்த (இலங்கை பாதுகாப்பு செயலாளர், இந்திய திபேந்தர் சிங், மற்றப் பல அதிகாரிகள்)வர்களிடம் கையில் கொடுக்காமல் மேஜை மீது வைத்து விட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

இதற்கென்று வரவழைக்கப்பட்ட மொத்த உலக ஊடக மக்களுக்கும் ஏமாற்றம். வேறென்ன செய்யமுடியும்? அதிகாரவர்க்கத்தினர் எப்போதும் போல ஜாலியோ ஜிம்கானா தான்.

பிரபாகரன் தாங்கள் வைத்திருந்த மொத்த ஆயுதங்களையும் ஒப்படைத்து இருப்பார் என்றா கருதுகிறீர்கள்? லொக்கடா, டக்கடா இந்திய வகை ஆயுதங்கள் அதற்கென்று பொறுக்கி எடுத்து வைத்திருப்பார்.

இவர் பக்கம் இந்த மாதிரி அழுகுணி ஆட்டம்.

இவர்கள் ஒப்படைத்த இந்த ஆயுதங்களுடன், ரா உளவுப்படை கொண்டு வந்து சேர்த்து இருந்த மற்ற ஆயுதங்களையும் சேர்த்து தான தர்மமாக உள்ளே வலுவிழந்து வாழ்ந்து கொண்டுருந்த EPRLF,PLOTE.TELO போன்ற மற்றப் போராளிக்குழுக்களுக்குக் கனஜோராக இந்திய அமைதிப்படை வழங்கிக்கொண்டுருந்தது.

இது அந்தப் பக்கம் கண்ணாமூச்சி ஆட்டத்தின் தொடக்கம்.

அப்படியென்றால் நம்முடைய அரசியல் ஞானி செய்து கொண்டுருக்கிறார்?

ராஜீவ் காந்தி சொன்னபடி ” இடைக்கால நிர்வாக அரசு” எப்போது உருவாக்கப் போகிறீர்கள்? என்ற விடுதலைப்புலிகள் கேட்ட போது கொட்டாவி விட்டு தூக்க கலக்கத்தில் எழுந்தவர் போல் இந்தியாவையும் விடுதலைப்புலிகளையும் பார்த்துத் திருத் திருவென்று முழித்தார்.

சிந்தனை அதிகம் பெற்றவர் மறப்பது இயல்பது தானே?

புது ரத்தம் பாய்ச்சப்பட்ட மற்ற போராளிக்குழுக்களுக்கும் வந்த மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே?

இரவு வேளைகளில் ரகசியமாய்க் கிழக்கு மகாண கரையோரப் பகுதிகளில் கொண்டு போய் இந்தியாவின் உதவியோடு இறக்கப்பட்டனர். மன்னார் மாவட்ட கடற்கரை கிராமத்துப் பக்கம் டெலோ இயக்கத்தினர் பறபறவென்று பல்லை கடித்துக்கொண்டு காத்துருந்தனர்.

தலைவலி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, பல்வலியோடு இரண்டு காலும் வீங்கியிருந்தால் ஒருவனுக்கு எப்படியிருக்கும்? அந்த நிலைமையில் தான் பிரபாகரன் இருந்தார்.

புதுரத்தம் பாய்ச்சப்பட்டவர்களிடம் இருந்து விடுதலைப் புலிகளைக் காக்க வேண்டும். ரா உளவுத்துறை திருவிளையாடலை மறு பக்கம் சமாளிக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் ரத்தம் குடிக்கக் காத்துருக்கும் இலங்கை இராணுவம். இப்போது இந்திய வீரர்கள் பேசும் (ஹிந்தி) மொழியும் புரியவில்லை. அவர்களின் ஆதரவும் கிடைக்குமா என்ற சந்தேகம்.

வெறியுடன் வாழ்ந்தவரை நீ ஒரு வெகுளி? என்பது போல் எச்சமாக நினைத்த வல்லரசு தான் வகையாக மாட்டிக்கொள்ளப்போகிறோம் என்பதை அறியாமலே வலை பின்னத் தொடங்கியது.

வகைவகையான வலைபின்னலை பார்த்து வளர்ந்த பிரபாகரன் அவசரப்படவில்லை. ஏன் வந்த ஆத்திரத்தைக்கூட உள்ளேயே அடக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை.

தன் முன்னால் மூத்திரம் போக அஞ்சியவர்கள் கூட இன்று ரவுண்டி கட்டி அடிக்கக் காத்துக்கொண்டுருப்பது கண் முன்னே தெரிகிறது. அவர்களால் சிலரைக்கூட இழந்தாகி விட்டது. நாம் கைவைத்தால் மொத்தமும் நம்மால் தான் நடந்தது என்று சுபம் போட்டு முடித்து விடுவார்கள்.

அவர்களின் தைரியம் என்பது பின்னால் உள்ள இந்தியா கொடுக்கும் தைரியம்.

நாம் என்ன தவறு செய்தோம்? இந்தியா விரும்பிய அத்தனை இழுப்புக்கும் தானே போய்க் கொண்டுருக்கிறோம்? இன்னமும் நம்மை விரும்பாமல் ஏன் அவர்களை வளர்க்க ஆசைப்படுகிறார்கள்?

மக்கள் முன்னால் பேசிய பேச்சு மாறிவிடுமோ என்ற அச்சம் அவரை அலைக்கழித்தது.

இப்போது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்து விடமுடியாது.

உலகம் முழுக்கக் கவனித்துக் கொண்டுருக்கிறது.

என்ன செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டுருந்த போது தீலிபன் தன்னுடைய உண்ணா நோன்பு போராட்டத்தைத் தொடங்கி விட்டார்.

காரணம் தீலிபனுக்கு டெல்லியில் நடந்த மொத்த ” Gentlemen Agreement ” முழுமையும் தெரியும். ஏமாற்றத்தின் தொடக்கம் புரிந்து விட்டது.

ஒரு வகையில் உண்ணாநோன்பு இறுதியில், இறந்த தீலீபன் மரணம் என்பது எந்தவித தாக்கத்தை உருவாக்கியது தெரியுமா?

வல்லரசு தலையில் எழரை பகவான் வந்து அமர்ந்த தருணமிது.

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *