3. இலங்கைக்கு நடந்தே போயிடலாம்

இலங்கை சுதந்திரம் பெற்றதும் முதல் பிரதமராகப் பதவியில் அமர்ந்த சேனநாயகா உருவாக்கிய அரசாங்கத்தை நடத்திக் கொண்டுருந்தவர்கள் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த தோட்ட முதலாளிகளும், வெள்ளை துரைமார்களுமே ஆகும்.

ஆனால் அப்போது கட்சி ரீதியாக உள்ளே இருந்த கம்பூனிஸ்ட்டுகளும், தமிழ் தலைவர்களும் பதவியில் இருந்தார்களே தவிர வெள்ளையர்களும் அவர்களின் சார்பாளர்களும் தான் ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்தனர்.

இவர்களுக்குப் பதவி ஒரு பொருட்டல்ல.

மேற்கித்திய நாடுகளுக்கு அன்றும் இன்றும் என்றும் செயல்படுத்திக்கொள்ள வேண்டிய ஆட்கள் மட்டுமே போதுமானது. அதுவே தான் இன்று ராஜபக்ஷே அரசாங்கம் வரைக்கும் தொட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

சிங்கள இனவாதம், தமிழர் சிறுபான்மை போன்ற வார்த்தைகளெல்லாம் வியாபாரிகளுக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை, இவர்கள் உருவாக்கும் சர்வதேச அரசியலும் அதன் கொள்கைகளும் சாதாரணப் பொதுமக்களுக்குத் தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் தான் என்ன?

சுதந்திரம் பெற்ற போது இருந்த 33 சதவிகித தமிழர்கள் சிறு புள்ளியாக மாற்றப்பட்டனர். இனக்கலவரத்திற்குப் புதிய அத்தியாயம் வகுத்துக்கொடுத்தவர் பின்னால் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்னே ஆவார். அவர் ஆட்சியை பிடித்த போது முதல் தடவை பிரதமராகவும் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த போது அதிபராகவும் இருந்து உருவாக்கிய ஆட்டம் மொத்தமாக இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைகளும், ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் ’தனித் தமிழீம்’என்பதும் ஏன் இன்று சூன்யமாய்ப் போய் முடிவு தெரியாமல் நிற்கிறது.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் உருவான இனவாத சிங்கள அரசியலின் இன்றைய வயது 200 ஆண்டுகள்.

அனாரிகா தர்மபாலா

1810 அன்று உருவாக்கிய சிறு புள்ளியது.

அதுவே இன்று படிப்படியாக வளர்ந்து வந்தது. ஒவ்வொருவரும் ஆட்சிக்கு வரும் போது தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளச் செய்யப்பட்ட ஒவ்வொரு காரியங்களுக்குப் பின்னாலும் பாதிக்கப்பட்டது தமிழினமே.

“இலங்கை என்பது தமிழர் சிங்களர் இருவரும் சேர்ந்து வாழ வேண்டிய நாடு. நாம் அனைவரும் சேர்ந்து ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும்” என்பதற்காக முதல் தலைமுறை தமிழ் தலைவர்கள் போராடினார்கள்.

அரசியல் அரிச்சுவடியை தமிழர்களிடத்தில் பெற்றுக் கற்றுக்கொண்ட சிங்களர்களே இறுதியில் தங்களை ஈழத்தின் மண்ணின் மைந்தர்களாகவும், தாங்கள் மட்டுமே ஈழத்தை ஆட்சி செய்ய வேண்டியவர்களாகவும் மாற்றிக் கொண்டனர். அன்று முதல் இன்று வரைக்கும் தமிழர்களால் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவே இந்த அரசியல் இருக்கின்றது.

ஆனால் இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பொழுது சிங்கள தலைவர்கள் தங்கள் தந்திரங்களால் பலரையும் விலைக்கு வாங்கினர். விலைக்கு வாங்கப்பட்ட தமிழ் தலைவர்களை வைத்தே முதல் அரசாங்கத்தை உருவாக்கினார் சேனநாயகா.

சேனநாயகா காட்டிய வழி இது.

தொடக்கத்தில் சிங்கள தலைவர்கள் வாய் வார்த்தைகளாக இனவாதத்தை வளர்த்துக் கொண்டுருந்தார்கள், அப்போது ஆதரவு கொடுத்த தமிழ் தலைவர்களை வைத்தே கடைசியில் அதிகாரபூர்வமாகச் சட்டமாக உருவாக்கினார்கள். சட்டம் உருவாக உதவி புரிந்த தமிழ்த் தலைவர்கள் முரண்பட்டு பிரிந்து நின்றார்கள்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி கணக்கு.

ஜீஜீ பொன்னம்பலம், தந்தை செல்வா வரைக்கும் அரசியல் சக்தியாக வளர்ந்தார்கள்.

தமிழ் மக்கள் கொடுத்த வாக்குகளையும், பெற்ற பாராளுமன்ற பதவிகளையும், ஆதரவுகளையும் சிங்களர்களுக்கே தாரை வார்த்தார்கள். சிங்கள தலைவர்கள் வசதியாக அமர்ந்து கொண்டார்கள். குனிய வைத்து குத்தவும் செய்தார்கள். குனிந்து இருந்த போதும் கூட வெட்கப்படாமல் கையேந்தி பார்த்தார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் இறுதியில் ஜெயித்தது சிங்களர்களின் தந்திர அரசியலே.

இலங்கையின் தேச அரசியல் போய் இன்று சர்வதேச அரசியலாக மாறி விட்டது. இன்று சர்வதேச அரசியலே பிரதான பங்காகி இலங்கையை நாகரிக பிச்சைக்கார நாடாக மாற்றி உள்ளது.

அதனால் என்ன?

விரும்பியபடி 3000 ஆண்டுகள் பாரம்பரியமுள்ள ஒரு இனத்தையே அழித்து முடித்தாகி விட்டது.

பௌத்த நாட்டைச் சிங்களர்கள் ஆண்டால் என்ன? சீனா ஆண்டால் என்ன?

மொத்தத்தில் இலங்கை என்பது தமிழர்களுக்கான நாடல்ல.

இலங்கைக்குள் இருந்த சிங்கள தமிழர் அரசியல் என்பது மாறி சீனா அரசியல், இந்தியா அரசியல் என்று தொடங்கி உலக அரங்கில் பாவமாய் நிற்கும் பாகிஸ்தான் அரசியல் வரைக்கும் உள்ளே நுழைந்து இந்தக் குட்டித் தீவை கெட்டியாகப் பிடித்து வைத்து இருக்கிறது.

இயல்பாகவே உணர்ச்சி பெருக்கில் உலகமெங்கும் வாழும் தமிழனத்திற்குச் சர்வதேச அரசியலின் வலை பின்னல்களை குறித்து இந்த சமயத்திலாவது உணர்ந்தே ஆகவேண்டும். சராசரி பார்வை கொண்டவர்கள் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை வெறுப்பதைப் போல “சொர்க்க தேசம்” என்று பண்டைய தமிழ் இலக்கியங்கள் வர்ணித்த இந்த ஈழத்திற்குள் ஏன் இத்தனை தீராத பிரச்சனைகள்.?

காபிக்கொட்டையும், பச்சை தேயிலைச் செடிகளுமாய்ப் பசுமையாய்ப் போர்த்தியிருந்த இந்த இலங்கைத் தீவை இன்று கண்ணிவெடி சூழ்ந்து இரண்டு இனங்களையும் கதற வைத்துள்ளது. நாம் இவற்றை முழுமையாக அறிய ஈழ வரலாற்றுப் பக்கங்களை பின்னோக்கி பாரபட்சம் இல்லாமல் பார்க்க வேண்டும். அதன் மூலம் இனவாத அரசியல் உருவாக்கிய பாதைகளும், கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்ட மொத்த தமிழ் தலைவர்களையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஒற்றுமையில்லாமல் வாழும் எந்த இனத்திற்கும் இறுதியில் கிடைக்கும் அடிமை வாழ்க்கையை அப்போது தான் நாம் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். ஆனாலும் அருகில் உள்ள இந்தக் கண்ணீர்த் தீவுக்கு ஒரு காலத்தில் நடந்தே போயிடலாம்ன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா?

தொடர்வோம்……………….

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *