3. இந்திய அமைதிப்படை(IPKF) வேரும் விழுதுகளும்

கோணல் புத்தியும், குறுக்கு வழியும் எங்கேயாவது ஜெயித்து இருக்கிறதா? ஜெயித்தாலும் அது நீடித்துப் பார்த்து இருக்கிறீர்களா?

நீடித்து இருந்தாலும் நிதர்சமான வெற்றிகளை அடைந்து இருக்கிறார்களா? வெற்றி கிடைக்குமோ இல்லையோ வெறி அதிகமாகும். உருவாக்கும் வெறி வெற்றியையும் தராது. இறுதி வரைக்கும் வெறியும் அடங்காது.

இது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பொருந்தும்.

ஆடம்பர மணவிழா முடிந்து விட்டது. உலக ஊடகம் முன் எப்போது சிரிக்காத மூஞ்சி ஜெயவர்த்னேவும், எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் மலர்ச்சியான முகத்தைப் பெற்ற ராஜீவ் காந்தியும் மனம் கொண்ட மகிழ்ச்சியைப் புகைப்பட ஆவணமாக்கி இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் (29 ஜுலை 1987) போட்டாகி விட்டது.

வந்த விருந்தினரை சும்மா அனுப்பி விட்டால் இலங்கை மரியாதை என்னவாகும். அணிவகுப்பு மரியாதையின் வாயிலாகப் பெற்ற அத்தனை மரியாதையும் ராஜீவ் காந்தி கூட (அடித்த கடற்படை வீரனின் பெயர் விஷயமுனி விஷிதா ரோகண டி சில்வா) தலைகுனிந்து தப்பி விட்டார்.

ஒருவன் தான் பின்பக்கமாக அடிக்க உயர்த்தினான். அடித்த கட்டைக்கு முன் இருந்த கத்தி படாமல் இருந்தது நேரு செய்த புண்ணியமா? அம்மா இந்திரா காந்தி செய்த தவமா? இல்லை தான் கற்று வைத்திருந்த பயிற்சி கொடுத்த முன் எச்சிரிக்கையா?

அந்தக் கூட்டணியில் இருந்த மற்ற வீரர்கள் அமைதியாய் இருந்த காரணம் நாம் செய்த புண்ணியம். இல்லாவிட்டால் அன்றே சிங்கள வெறி எந்த அளவிற்கு இருக்கும் என்பதை இந்தியா மட்டுமல்ல உலகமே பார்த்து இருக்கும்?

மொத்தத்தில் முடிந்து விட்டது.

எப்போதும் போலச் சிரித்துக்கொண்டே அதையும் மறந்து விட்டார் நம்ம ராஜீவ் காந்தி. விடுதலைப்புலிகள் அமெரிக்க அதிபரை இது போல் வெடிகுண்டு தாக்குதல்களை விடுதலைப்புலிகள் கொன்று இருந்தால் என்னவாயிருக்கும்? துடைத்து இருப்பார்கள். அதையே சற்று மாற்றி யோசித்துப் பாருங்கள்? அமெரிக்க அதிபருக்கு இது போல் அணிவகுப்பு மரியாதையில் நடந்து இருந்தால்?

வேண்டாம்? எல்லாவற்றையும் யோசித்துக் குழப்பிக்கொள்ள வேண்டாம். காரணம் ராஜீவ் மட்டும் விரும்பிய ஒப்பந்தம் இது. மொத்தத்தில் ஆசியாவின் கனவு ஒப்பந்தம். உலகம் முழுக்க இன்று தான் விரும்பிய அளவிற்கு ஒரு தாக்கத்தை உருவாக்கியாகி விட்டது. இது ஒன்றே போதும். காந்தி தேசம் அல்லவா? வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு மறப்போம் மன்னிப்போம்.

ஆனாலும் சில கேள்விகளை இப்போது நாம் உரைத்துப் பார்க்க வேண்டும். இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றது குறித்து உங்கள் கருத்து என்ன?

நீங்கள் சரிதான் என்பவரா? இல்லை மொத்தமும் தவறு என்பவரா? பிரபாகரன் என்ற சக்தியை இப்போது மறந்து விடுங்கள். அவர் பாவம். மனக்குமுறலோடு முதன் முறையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகளைத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல் தாளில் எழுதிக்கொண்டு இருக்கிறார்.

காரணம் சுதுமலை பிரகடனம் என்ற முதல் பொதுக்கூட்டத்தை நடத்தப் போகிறார். செயல் மட்டும் தான் முக்கியம் என்று பேசிப்பழக்கமில்லா அவருக்கு உரையாற்ற வேண்டிய உரையை அடித்தல் திருத்தமின்றிப் படித்துப் பார்த்துப் பயிற்சி எடுத்துக்கொண்டுருக்கிறார்.

எனவே இப்போது நீங்கள் இதையும் கடந்து வாருங்கள்.

ஆண்டுக் கொண்டுருந்த ஜெயவர்த்னேவுக்கு வேறு வழியில்லை.

கிழக்குத் திசையில் இந்திய ரா உளவுப்படை.

சூரியன் உதிக்கிறதோ இல்லையே இவர்களின் தொல்லைபேசியும், சவடால்களும் அதிகம். மேற்குப் பக்கம் தமிழீழம் மட்டும் தான் வேண்டும் என்கிற போராளிகள்.

சூரியன் மறைகிறதோ இல்லையோ தினந்தோறும் எத்தனை இலங்கை இராணுவ வீரர்கள் விடுதலைப்புலிகளால் மண்ணுக்குப் போவர்கள் என்பதை உச்சிதமாகச் சொல்ல முடியவில்லை.

தெற்கில் பிரேமதாசா மற்றும் ஜேவிபி மற்றும் அரசாங்க எதிர்பாளர்கள்.

மீதி ஒரு பக்கம் தான் இருக்கிறது.

புத்த பிக்குகள். ” பண்டாராநாயகா எப்படிப் போய்ச் சேர்ந்தார் என்பதை மறந்து விட்டாயா?” என்பது போல் தினந்தோறும் ஆசிர்வாதம் தேடி வந்து கொடுத்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

“பிடிக்கவில்லை ஆனால் பிடிக்கும் அளவுக்கு நடந்து கொள்ளத்தான் வேண்டும் ” என்று ஜெயவர்த்னே வேறு வழியில்லாமல் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டாலும் அவர் உருவாக்கிய பாதை தான் இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் உள்ள எதிர்கால மொத்த புரிதல்களையும் தவிடுபொடியாக்கியது.

ஆனால் இதற்கு மேலும் ஏன் இந்த ஒப்பந்தத்தை ஜெயவர்த்னே ஏற்றுக்கொண்டார்?

எளிதில் மசியக்கூடியவரா? அதற்குள்ளும் ஒரு காரணம் இருக்கிறது.

அன்றைய தின இலங்கையின் படைபல பலவீனமும், விடுதலைப்புலிகளின் வளர்ச்சியும், ஆட்சி எந்த நேரத்திலும் கவிழ்க்கப்படலாமென்ற அச்சமும் ஒரு காரணம். அவருக்கு எந்த அளவிற்கு எதிர்ப்பு இருந்தது என்றால் உள்ளே இருந்த மொத்த அமைச்சர்களும் ஒரே எதிர்ப்பு அணியில் திரண்டதும் ஒரு காரணமாக இருந்தது. கூடவே அடுத்து பதவிக்கு காத்துக் கொண்டிருந்த பிரேமதாசா ” அண்ணன் எப்ப இடம் விடுவான் ” என்று காத்துக் கொண்டிருந்தார்.

வேறு வழி. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி.

1. இலங்கையின் உள்ளே சென்ற அமைதிப்படை எதை நோக்கி இந்தப் பயணம்? என்பதைத் தெரிந்து கொள்ளாமல் நுழைந்த ஆண்டு 30 ஜுலை 1987. போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட என்று திரும்பி வந்த ஆண்டு மார்ச் 24 1990. மொத்த காலத்தையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

2. அமைதிப்படை இலங்கைக்குச் சென்ற போது டெல்லியில் ஆண்டு கொண்டுருந்தவர் ராஜீவ் காந்தி. திரும்பி வந்த போது வி.பி.சிங் (VISWANATH PRATHAP SINGH).

3. சென்ற இந்திய அமைதிப்படைக்குத் தலைமை தாங்கி பூரிப்போடு சென்றவர் ஜெனரல் திபேந்திர சிங். திரும்பி வந்த போது வாடிப்போன முகத்தோடு மனதிற்குள் குமுறலோடு தலைமையேற்று வந்தவர் ஜெனரல் அமர்ஜித் சிங்.

4. “இவனுங்க பொடியன்கள். இவர்களைக் குறித்தா பயப்படுறீங்க. சும்மா ஊதித் தள்ளிவிடலாம் ” என்ற மொத்த எண்ணங்களும் தவிடுபொடியாக்கி உயிர் இழந்த அப்பாவி இந்திய இராணுவ வீரர்கள் அதிகமில்லை ஜென்டில்மேன், பாகிஸ்தானுடன் மோதி பங்களாதேஷ் என்ற புதிய நாட்டை உருவாக்க பாடுபட்ட போது நடந்த போரில் உயிர் இழந்த இராணுவ வீரர்களை விட அதிகம்.

5. இலங்கையின் உள்ளே நுழைந்த போது எரிச்சலுடன் வரவேற்றது ஜெயவர்த்னே. கழுத்தை பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே அனுப்பியது பிரேமதாசா.

6. தமிழ்நாட்டில் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர். அதுவே துறைமுகத்தில் அவமானத்தோடு வந்து இறங்கிய போது ” இது அமைதிபபடை அல்ல. அழிவுப்படை” என்று தன்னுடைய முழுமையான தந்திரமில்லா எதிர்ப்பைக்காட்டிய ஆட்சியில் இருந்த முதல் அமைச்சர். கலைஞர் மு.கருணாநிதி.

ஒரு வகையில் பார்க்கப்போனால் மொத்த அமைதிப்படையும் திருப்பி அழைக்கப்படக் காரணமாக இருந்தவர் கலைஞர். இவர் கொடுத்த அழுத்தமும், மத்திய அரசாங்கத்திற்கு இவர் கொடுத்துக்கொண்டுருந்த ஆதரவும் முக்கியக் காரணம். தேர்தலில் அப்போது விபி சிங் தேர்தலின் போது தமிழ்நாட்டு வாக்காளர்களுக்குக் கொடுத்த முக்கிய வாக்குறுதியும் கூட. அந்த அளவிற்கு இந்த அமைதிப்படை தமிழ்நாட்டில் முக்கிய விவாத பொருளாக இருந்தது என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

7. இந்த இடத்தில் மற்றொரு நகைச்சுவை.

விவேகம் அதிகம் பெற்ற, உண்மையிலேயே இலங்கைத்தமிழர்களுக்குப் பாடுபட எல்லாவகையிலும் முயற்சித்த இந்திரா காந்தி காலத்தில் செயல்பட்ட தூதர் தமிழர் ஜீ. பார்த்தசாரதியைக் கண்டாலே ஜெயவர்த்னேவுக்கு எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்கும்.

அதன் பிறகு பின்னால் பிரதமாக இருந்த நரசிம்மராவ் இந்தப் பிரச்சனையில் நுழைந்த போது இந்திய தூதராக ஜீ. பார்த்தசாரதி இலங்கைக்குச் சென்ற போது கொழும்பு விமான நிலையத்தில் இருந்து அவருக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டிய வாகன வசதிகள் கூட அளிக்கப்படாமல் அவமானபடுத்தியதும், அவர் அமைதியாக அதைப் பொறுத்துக்கொண்டு எப்போதும் போலச் சிரிக்காமல் போய் அவர்கள் முன் அமர்ந்ததும் நடந்தது. காந்தியவாதிகள் எப்போது கண்ணியமாகத்தான் நடந்து கொள்வார்கள்.

ஆனால் இப்போது ஜீ. பார்த்தசாரதிக்குப் பிறகு முக்கியக் கதாநாயகன் ஜே.என். தீட்சித்.

ஒரு வகையில் இவரை நாம் பாராட்டலாம். அட்டகாசமாகக் கால் மேல் கால் போட்டுக்கொண்டு பி.எஸ். வீரப்பா போல் ஜெயவர்த்னே முன் அமர்ந்து கொண்டு சுருட்டுப் புகையை விட்டுக்கொண்டு மொத்த இலங்கை அதிகாரவர்க்கத்தையும் டர்ர்ர்ர் ஆக்கிக்கொண்டுருந்தார். அன்று ஜெயவர்த்னே முகம் எப்படி இருந்துருக்கும்?

8. பொடியன்களைச் சமாளிக்க முடியாத வல்லரசு கொண்டு போய்ச் சேர்த்த ஆயுத தளவாடங்களின் பட்டியல் சரவணபவன் பட்டியலை விட நீளமானது. பயந்து விடாதீர்கள். இது அத்தனையும் இலங்கையில் அமைதியை நிலைநாட்ட மட்டுமே?

நவீன AVF கவச வண்டிகள், ரஷ்யாவிடமிருந்து வாங்கிய 45 டன் எடையுள்ள T 72 ரக அதிவேக நவீன போர்முனை (வடக்கு மகாண காட்டுக்குள் செல்வதற்கு ஏற்ற) டாங்கிகள், உள்ளே இருந்த கொரில்லா போராளிகளை அழிக்க என்று பிரத்யோக பயிற்சி பெற்ற 31 வது ஆயுத டிவிசனைச் சேர்ந்த 65வது ரெஜிமெண்ட் படை வீரர்கள். இது போக 20 டன் எடையுள்ள ரஷ்ய தயாரிப்பான BMP 2 ஆயுத கவச வண்டிகள். இந்த வண்டிகளுடன் பராமரிக்க, பாதுகாக்க, ஈடுபட, மற்ற ஏற்பாடுகளுக்கென ஒரு படை பட்டாளங்கள்.

இந்தப் பட்டியல் இயல்பாய் முன்னமே போய்ச் சேர்ந்தவர்களுடன் சேர்த்து விடாதீர்கள்.

இவர்கள் தனி. அவர்கள் தனி. ஏனிந்த சிறப்பு மக்கள்?

புலிகள் உருவாக்கி வைத்திருந்த கண்ணி வெடிகள் என்பது நமது வீரர்களைத் தேங்காய் போடாத சட்னி போல் ரத்தச் சகதியை அறிமுகப்படுத்திக்கொண்டுருந்தத காரணத்தால் தினந்தோறும் செத்து சுண்ணாம்பாகிக் கொண்டுருந்தார்கள்.

பட்டியல் முடியவில்லை.

போரில் உக்கிரம் தொடங்க விட்ட குறை தொட்ட குறையாகத் தரைப்படை, வான்படை, கடற்படையுடன் அதி நவீன ஆயுதங்களுடன் பிரெஞ்சு ஜாகுவார் மற்றும் ரஷ்ய தயாரிப்பான மிக் 25 ரகப் போர்விமானங்கள்,அப்போது தான் புதிதாக வாங்கப்பட்ட ரஷ்ய MI 25 ரக ஹெலிகாப்டர், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஆட்கள் பயணிக்க MI 8 வகை ஹெலிகாப்டர்.

இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியம்.

இது போன்ற ஹெலிகப்டர் அத்தனை வகையிலும் எப்போது வேண்டுமானாலும் செயல்படக்கூடிய எறிகணை தாக்குதலுக்கு உதவி புரியக்கூடிய எந்திர அமைப்புகள் என்று எல்லாவிதத்திலும் புதிய தொழில் நுட்பத்தோடு உருவாக்கப்பட்டு இருந்தது. இந்திய இராணுவ தொழில் நுட்ப மக்கள் இரவு பகலாக உழைத்துக் கொண்டுருந்தனர்.

இன்னும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் உலகின் நான்காவது பெரிய ராணுவ பலம் உள்ள இந்தியாவின் மொத்த படைபலத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை இலங்கையில் கொண்டு போய்க் குவித்து இருந்தது. போர் உக்கிரம் அடைய ஒரு நாளைக்குச் செலவிழித்த தொகை உத்தேசமாக இந்திய ரூபாய் 300 கோடி ரூபாய். மொத்த காலத்திலும் செலவழித்த தொகை அரசாங்க கணக்குப்படி ஆயிரம் கோடி. ஆனால் ஊடகத்தில் வந்த கணக்குப்படி 2000 கோடிக்கும் மேல்.

காரணம் அமைதியை நிலைநாட்ட?

நாட்டினார்களா?

நா தழுதழுக்க, முகம் வெளிறி மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க வைத்தது தான் மிச்சம்.

பணமா நமக்கு முக்கியம்.

காந்தி சொல்லிவிட்டுப் போன அமைதிப் பாதைக்கு இன்னும் கூடச் செலவளிக்கலாம் அல்லவா?

ஏனிந்த அவமானம்? யார் மேல் தவறு?

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *