2. ராஜீவ் படுகொலை புலனாய்வு பாதை

ராஜீவ்காந்தி படுகொலை என்பதைத் தனியாக ஒரு குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர் அதிகார வட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. படுகொலை என்பதை விடக் கோரமான முறையில் நடந்தேறியது ஒரு புறம். மகாத்மா காந்தி, இந்திரா காந்தி போல நேரிடையான சாட்சிகள், சம்பவங்கள் ஏதும் இல்லை.

இதுவே மொத்த அதிகாரவர்க்கத்தினருக்குள் ஏராளமான கிலியை ஏற்படுத்தியிருந்து. அப்போது சிபிஐ இயக்குநராக இருந்தவர் விஜய்கரண். இந்த வழக்குச் சிபிஐ மூலமே புலன் விசாரனை செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்தவுடன், பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதியாகத் தலைமை பொறுப்புக்கு அழைக்கப்பட்டவர் பெயர் டி.ஆர்.கார்த்திகேயன்.

இவரைப்பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அமைதிப்படை இலங்கையில் இருந்த இறுதிகாலக் கட்டத்தில் அதிகார வட்டத்தில் இருந்த டி.என்.சேஷன் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டவர். அந்த நிமிடம் வரைக்கும் டெல்லியைப் பொறுத்தவரையிலும், தமிழர் அல்லாதவர்கள் தான் இந்த இலங்கைப் பிரச்சனையைக் கையாண்டு கொண்டுருந்தனர்.

இந்திராகாந்தி காலத்தில் இருந்த பார்த்தசாரதிக்குப் பிறகு கார்த்திகேயன்.

இந்திய அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்குச் சென்றவர். இலங்கையின் உள்ளே நடக்கும் உண்மையான நிகழ்வுகள் குறித்து மத்திய அரசு இவரிடம் அறிக்கையாகக் கேட்டது. அப்போதைய இந்திய அரசாங்கத்தின் அனுமதி இல்லாத காரணத்தால் இவரால் அன்றைய சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுடன் மட்டும் பேசக்கூடிய வாய்ப்பு அமையவில்லை.

இது போன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உள்ளேயிருந்த முக்கிய அதிகார வர்க்கத்தினரிடம் மட்டும் பேசாமல் இலங்கையில் உள்ள மக்களிடம் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று ஆலோசித்தவர்.

குறிப்பிட்ட இடங்களில் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் போர் நடந்து கொண்டுருந்த போது கூடத் தன்னுடைய உயிர் போய் விடும் என்ற பயமின்றி சகல இடங்களிலும் நுழைந்து வெளிவந்தவர்.

அன்று அவர் கொடுத்த அறிக்கையின் சராம்சம்

” விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் உள்ளே நடந்து கொண்டுருக்கும் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வந்து விடமுடியாது”.

அன்றைய டெல்லி அதிகாரவர்க்கத்தினரருக்குள் விடுதலைப்புலிகள் குறித்து அபிப்ராயப் பேதம் இருந்த போதிலும், மாற்றுக்கருத்து இருந்தவர்கள் கூட இவரின் அறிக்கையை குறை கூறுபவர் எவரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் தெரிந்தே தான் இருந்தது.

ஆனால் யார் பூனைக்கு மணியைக் கட்டுவது? என்ற லாபியின் காரணமாகத் தான் இவரின் அறிக்கையும் அன்று காகிதத்தாளாக மாறியது.

கார்த்திகேயனைப் பொறுத்தவரையில் எப்போதும் போலத் தன்னுடைய கடமையைச் சரிவரச் செய்த திருப்தி. அத்துடன் அன்று அதில் இருந்து ஒதுங்கி விட்டார். தன்னிடம் இந்தப் புலனாய்வு பொறுப்பை ஒப்படைத்த போது அவர் மனதிற்குள் நினைத்து இருந்த யோசனை இன்னும் வியப்புக்குரியது.

“இந்தப் படுகொலையில் எந்த நிலையிலும் விடுதலைப்புலிகள் சம்மந்தப்பட்டுருக்கக் கூடாது”.

ஆனால் காலம் செய்த கோலம் அலங்கோலமாய்ப் போய்விட்டது.

ஒரு தமிழர் என்ற விதத்தில் விடுதலைப்புலிகளின் எந்தக் கொள்கைகளையும் தன்னுடைய தனிப்பார்வையால் விமர்சிக்காதவர். தான் பணிபுரிந்து கொண்டுருந்த கடமையைக் கண்ணும் கருத்துமாய் நேர்மையான முறையில் கொண்டு சென்றவர்.

கோயம்முத்தூரில் பிறந்தவர். விவசாயம் மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர். தன்னுடைய 35 வயதில் இந்திய காவல் துறை பணியில் சேர்ந்தவர். கர்நாடக மாநிலத்தில் பணியில் சேர்ந்து உச்சகட்டமாக முதல் அமைச்சராக இருந்த குண்டுராவ் நம்பிக்கையைப் பெற்று அவரின் கண் இமை போல் இருந்தவர்.

கடைசி வரையிலும் முறையற்ற வாழ்க்கை வாழாமல், மூட நம்பிக்கைகள் இல்லாத ஆன்மிகத்தையும் வளர்ந்து கொண்டுருக்கும் விஞ்ஞான அறிவையும் தன் இரு கண்களாகப் பாவித்தவர். இவரிடம் புலனாய்வு பொறுப்பை ஒப்படைக்கும் முன்பு இவருக்கு மேல் இருந்து அத்தனை அதிகாரிகளும் பயந்து ஓதுங்கிய காரணத்தினால் மட்டுமே இந்தப் பொறுப்பு இவரிடம் வந்து சேர்ந்தது. வந்து சேர்ந்த பொறுப்பையும் பலரும் அச்சப்டுத்திய வார்த்தைகளும் இவரின் மனஉறுதியை ஆட்டம் காண வைத்த போதிலும் உறுதியாய் நின்றவர்.

இறுதியில் ஜெயித்தவர்.

தலைமைப்பண்புக்கு உரிய அத்தனை குணங்களும் பெற்றவர். இந்திய ஜனநாயகத்தில் உள்ள அரசியல் புழுக்களை உணர்ந்த காரணத்தினால் எந்த அளவிற்குத் தன்னால் முடியுமோ? முடிந்தவரைக்கும் முயற்சித்துப் பார்த்தவர்.

இந்தப் புலனாய்வை முடிவுக்குக் கொண்டு வந்த போது இவர் மேலும் விமர்சனங்கள் எழுந்தது. தமிழ்நாட்டில் வைகோ, அவர் தம்பி ரவிச்சந்திரன், ராஜீவ் காந்தி இறந்த நாள் அன்று ஏற்பாடு செய்து இருந்த அன்றைய பொதுக்கூட்டத்தை ரத்து செய்த திமுக அதன் தொடர்பான தலைவர்கள் என்று நீண்ட பட்டியலில் உண்டு.

எழுந்த சந்தேகத்தின் போது விசாரிக்க வேண்டியவர்களை விசாரிக்காமல் விட்டதும், அதற்கு மேலும் அவர்களை விசாரிக்க அனுமதி அளிக்காமல் போனதும் என்று தூற்றுவார்கள் இன்று வரையிலும் உண்டு.

அது குறித்து இறுதியில் பார்க்கலாம்.

இவருடைய புலனாய்வு குழுவினருக்கு மாற்று ஏற்பாடாக ராஜீவ் காந்திக்கு நியமித்து இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் என்ன குளறுபடிகள் நடந்து இருந்தது? என்பதைக் கண்டதறிவதற்காக உருவாக்கப்பட்டது தான் வர்மா கமிஷன் மற்றும் ஜெயின் கமிஷன். இதன் கண்டனங்கள் என்று தனியான பாதை ஒன்று உண்டு.

குறை நாடி குற்றமும் நாடி என்று எடுத்துப் பார்த்தால் இந்தியாவில் உள்ள ஓட்டை சட்டங்களுக்கிடையே, பணம், பதவி, அதிகாரம் பெற்றவர்களையும் தாண்டி, அவர்களின் தொடர்ச்சியான மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை மீறி கார்த்திகேயன் வென்றார். இவர் மூலம் கிடைத்த விடைகள் என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல ஒரு குழுவினரின் சாதனை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கார்த்திகேயன் புலனாய்வு குழுவின் தலைமைப் பொறுப்பில் வந்து அமர்ந்த போது அப்போது பார்த்துக்கொண்டுருந்த பணி மத்திய ரிசர்வ் போலீஸ் ஐ.ஜி பொறுப்பில் இருந்தார். அரசு வழங்கிய புதிய பொறுப்பில் வந்து அமர்ந்த போதும் கூடத் தான் தான் வகித்த பழைய பதவியிலும் இருப்பேன் என்று அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று இரண்டு பதவியிலும் இருந்தார்.

இவர் சிபிஐயின் கிளை அலுவலகத்தைச் சென்னையில் உருவாக்கிய போது அதற்குத் தேவையான அதிகாரிகளை CPRF. NSG.TAMIL NADU POLICE போன்ற பல்வேறு துறைகளில் இருந்து தகுதி, நேர்மையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தார். அலுவலக கட்டிடம் பல்வேறு போராட்டத்திற்குப் பிறகே அரசிடமிருந்து கிடைத்தது. சென்னை கீரின்வேஸ் சாலையில் எவரும் பயன்படுத்தாமல் இருந்த ” மல்லிகை” இல்லத்தைச் சீரமைத்துத் தங்களுக்கு உரியதாக மாற்றினார்கள்.

அலுவலகம் உருவாக்கியது முதல் புலனாய்வு குழுவினருக்குத் தேவையான் அத்தனை உள் கட்டமைப்பு வசதிகளையும் மிகுந்த போராட்டத்தின் மூலமே சாதிக்க முடிந்தது.

அதிகாரத்தில் இருந்துவர்கள் அனைவரிடத்திலும் பயந்து ஓதுங்கிக்கொள்ளும் அளவிற்கு “விடுதலைப்புலிகள்” குறித்தான பயமே அன்று நிலவியது.

உச்சகட்டமாக இந்திய இராணுவத்தின அதிகார வர்க்கம் கூட “விடுதலைப்புலிகள் குறித்த எந்த விசயங்களையும் எங்களுடன் சம்மந்தப்படுத்தாதீர்கள் ” என்கிற அளவிற்குத் தான் ஒதுங்கினார்கள். அவர்கள் பெற்று இருந்த கடந்த காலப் பாடங்கள் அவ்வாறு அவர்களைப் பேச வைத்தது.

ஸ்ரீ பெரும்புதூரில் இன்னிசை நிகழ்ச்சி நடத்திய சங்கர் கணேஷ் குழுவினர் மூலம் எடுக்கப்பட்ட படங்களைப் போலவே கவனமாகக் கைப்பற்ற ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள் மட்டுமே அன்றைய சூழ்நிலையில் இவர்களுக்குக் கிடைத்த ஓரே ஆதாரம்.

அந்தப் புகைப்படங்களும் புலனாய்வு குழுவினர் கைக்கு வந்து சேர்வதற்குள் ஹிண்டு பத்திரிக்கைக்குச் தடயவியல் துறையினர் மூலம் சென்று அதுவும் மறுநாள் பத்திரிக்கையிலும் வந்து விட வழக்கின் தொடக்கமே குறுக்குப் பாதையில் போகத் தொடங்கியது. கொழும்பு சென்று தகவல்கள் திரட்டுதல், சம்பவம் நடந்த இடத்தில் நடந்த நிகழ்வுகளை விசாரித்தல், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தப்பிப்பிழைத்து இருந்தவர்களை அழைத்து வேறு ஏதாவது தடயம் கிடைக்குமா? என்ற அலசல் என்று எத்தனை முறை சுற்றி சுற்றி வந்தாலும் புகைப்படத்தில் பார்த்த சிவராசன் தணு நளினி குறித்து எதுவும் சேகரிக்க முடியவில்லை.

புகைப்படத்தில் சந்தன மாலையுடன் நின்று கொண்டுந்த தணு தான் வெடிகுண்டாக மாறியவர் என்பதைச் சிதைந்த வடிவில் திரட்டப்பட்ட உடைகளும், அதில் ஒட்டியிருந்த திசுக்களையும், இறந்து கிடந்த தணு உடம்பில் உள்ள திசுக்களையும் ஒப்பிட்டு (ஹைதராபாத் சென்டர் பார் செல்லுலர் அண்டு மாலிக்யூலர் பயாலாஜி) உறுதிப்படுத்திய போது தான் தணு என்பவர் தான் இதற்குப் பயன்பட்ட சூத்திரதாரி என்பதை முதலில் புரிந்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாகப் படங்களில் தணுவுடன் இருந்த சிவராசன் மற்றும் அவர் அருகில் இருந்த நளினி போன்றவர்கள் பார்வைக்கு வந்தனர். இதற்குப் பின்னால் உள்ள ” வட்டம் ” என்று அப்போது தான் புலனாய்வு பார்வை உருவானது. உருவாக்கம் பெற இவர்களின் கற்பனை மட்டுமே அப்போது முதலீடாக இருந்தது. ஆனால் உண்மைகள் என்பது வெகு தொலைவில் இருந்தது?

மே 22ந் தேதி உள்ளே வந்த கார்த்திகேயன், வழக்கை பதிவு செய்த 24ந்தேதி இரண்டு நாட்களுக்குள் உலகம் முதல் உள்ளுர் வரை உள்ள ஊடகங்கள் பட்டாசு வெடித்துப் பரபரப்பை ஆரம்பித்து இருந்தது. எது உண்மை? எது பொய்? என்பதை இனம் பிரித்து மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்குவதே பெரும்படாக இருந்தது.

ஆனால் அப்போது இவர்கள் எதிர்பார்க்காத ஹரிபாபு அப்பா கொடுத்த சம்மந்தம் இல்லாத அறிக்கையான

” என் மகனுக்கும் விடுதலைப் புலிகளும் தொடர்பு இல்லை.” என்ற செய்தி பத்திரிக்கைகளில் வர அப்போது தான் சந்தேகம் என்ற புள்ளியின் பயணம் தொடங்கியது.

இந்தக் கொலைக்குப் பின்னால் சார்ந்து இருந்த முக்கியப் புள்ளிகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. தங்கள் கையில் இருந்த புகைப்படங்களைப் பத்திரிக்கைளில் வெளியிட்டு, இவர்களைப் பற்றித் தெரிந்தவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி வெளியே வர, வந்த அழைப்புகளில் துப்புக்கு உதவக்கூடிய முக்கியமான அழைப்பு வில்லிவாக்கத்தில் இருந்து வந்தது.

” எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்தவர் இந்தப் புகைப்படத்தில் உள்ள நளினி. அவர்களைப் பார்க்க வருபவர் இந்த ஒற்றைக்கண் மனிதர். நளினியுடன் தங்கியிருந்தவர்கள் மற்ற இரு பெண்கள். படுகொலை நடந்து முடிந்த அடுத்த இரண்டு மூன்று தினங்களும் இங்கே இருந்தார்கள். நளினி அடையாறில் பணிபுரிந்தவர். இவர்களைப் பார்க்க தாஸ் என்பவர் வருவார். மே 26ந் தேதிக்கு மேல் எவரும் வருவதில்லை”

பாதை புலப்பட்டது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *