2. ராஜிவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் தொடக்க ரகஸ்யங்கள்

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு, இலங்கையில் போராடிக்கொண்டுருந்த மற்றப் போராளி குழுக்களுக்கு இருந்த ஆதரவு மொத்தமும் பறிபோனதற்கு முக்கியக் காரணம் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடி குண்டு மூலம் படுகொலை செய்யப்பட்ட அமரர் ராஜீவ் காந்தி என்று தான் பலரும் நினைத்துக்கொண்டுருக்கிறோம். ஆனால் ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு நடந்த போரில் இந்தியா இலங்கைக்குப் பின்னால் நின்றதற்கு வேறு பல காரணங்களும் உண்டு.

சொல்லப்போனால் ராஜீவ் மரணம் என்பது அதுவும் ஒரு காரணம்.

அதுவே முக்கியக் காரணம் அல்ல. பத்துக் காரணங்களில் அதுவும் ஒன்று. பின்னால் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். கூடவே ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னால் உள்ள மர்மங்கள் குறித்து டி.ஆர். கார்த்திகேயனின் புலனாய்வுப் பக்கங்களை ஆற அமர பார்க்க வேண்டும்.

காரணம் விடுதலைப்புலிகளின் மொத்த ஆளுமையும், நம்முடைய அதிகார வர்க்கத்தின் அலட்சிய மனப்பான்மையும் அந்தக் கிளைத்தொடரின் மூலம் நமக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.

ஒவ்வொரு இந்தியனாகப் பிறந்தவனும் ராஜீவ் மரணம் என்பதை எந்த விதத்திலும் மேம்போக்காகவோ, நியாயப்படுத்தவோ முடியாது. அது பிரபாகரன் தமிழர் என்பதாலோ, பட்ட வேதனைகளுக்கு உண்டான பழிவாங்கல் என்று எல்லாவிதங்களிலும் எடுத்துக்கொண்டாலும் இலங்கையில் கடைசித் தமிழன் வாழும் வரைக்கும் இந்த அவப்பெயரும் இருந்து கொண்டேதான் இருக்கும். மன்னிக்கவே முடியாத குற்றம் தான். சந்தேகம் என்பதே இல்லை.

ஆனால் ஏன் ராஜிவ் காந்தி இத்தனை அவசரப்பட்டார்? என்ன தான் நடந்தது? ஜெயவர்த்னே பங்களிப்பு என்ன? யாருக்குப் பிரயோஜனம்? என்று ஒன்றன்பின் ஒன்றாக அலைஅலையாய் ஆயிரம் கேள்விகள்.

அவரைக் கொல்லும் அளவிற்கு உண்டான நிகழ்வுகள் என்ன என்று பார்க்கப்போனால் தொடக்கம் முதல் அதில் உள்ளே நுழைய வேண்டும்.

முதலில் ராஜீவ் ஜெயவர்த்னே ஒப்பந்தம் என்ன சொல்கிறது? என்பதைப் பார்ப்பதற்கு முன் அதன் நதி மூலம் ரிஷிமூலத்தைப் பார்த்துவிடலாம்.

இதற்கான குரு ஒருவர் மட்டுமே.

ஒருவகையில் பார்க்கப்போனால் இவர் தான் ராஜீவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்படக் காரணமாக இருந்த அந்த ஒப்பந்தத்தை உருவாக்கியவர். அமல்படுத்தியே ஆகவேண்டும் என்று மற்றவர்களையும் விடத் துடிப்போடு செயல்பட்டவர். தனிப்பட்ட அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட மொத்த ராஜதந்திர வேலைகளையும் முன் நின்று நடத்தியவர்.

கடைசி வரைக்கும் ராஜீவ் காந்தி மனம் மாறிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தவர். ஒரு வகையில் பார்க்கப்போனால் மனோவசிய பொம்மை போலத் தான் இந்த ஒப்பந்தத்தில் ராஜீவ் காந்தியின் பங்களிப்பு.

ஜே.என்.தீட்சித்.

இவர் உருவாக்கியது “இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு” என்ற நாடகம். வெகு கவனமாகக் காய்கள் ஒன்றன் பின் ஒன்றாக நகர்த்தப்பட்டது.

ஈழத்தின் வடமராட்சிப் பகுதியிலும், முல்லைத் தீவிலும் இலங்கை இராணுவம் கொலை வெறியாட்டம் நடத்திக் கொண்டுருந்த போது ஜெயவர்த்னே அழைப்பின் பேரில் என்று சொல்லிக்கொண்டு சம்மந்தம் இல்லாமல் (ஜுலை 16) தீட்சித் ஜெயவர்த்னே கூட்டப்பட்ட (12 இலங்கை அமைச்சர்கள்) கூட்டத்தில் திட்டத்தை முன் வைத்தார்.

அப்போது மற்றவர்களுக்கு அந்தத் திட்டமானது ஜெவர்த்னேவால் உருவாக்கப்பட்டது என்பதும் பரப்பப்பட்டது. ஆனால் உருவாக்கியதும், வழி நடத்தியதும், முன் மொழிந்ததும் இவரே.

ஒரு வகையில் அன்று ஜெயவர்த்னேவுக்குக் கொடுக்கப்பட்ட மறைமுக நிர்ப்பந்தம்.

இலங்கையின் வடக்குக் கிழக்கு மகாணங்களை இணைத்து தமிழர் பிரதேசமாக அங்கீகரிக்கும் புதிய திட்டம் உருவாகி இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டது. ஈழ மக்களின் மொத்த வாழ்வுரிமையைச் சம்மந்தப்பட்டவர்களின் ஆலோசனை இல்லாமல் கொழும்பு மற்றும் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு வடிவமைக்கப்பட்டது.

வலுக்கட்டாயமாகப் பிரபாகரனை இந்திய ராணுவ ஹெலிகப்டர் மூலமாக யாழ்பாணத்தில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். டெல்லியில் அசோகா ஹோட்டலில் ஏறக்குறைய சிறை வைக்கப்பட்டது போல் இக்கடான சூழ்நிலையை உருவாக்கி அதன்பிறகே அவருக்கு உத்தரவு போல கொடுக்கப்பட்டது.

“முடிவு செய்தாகி விட்டது. மற்ற அத்தனை பேர்களும் ஒத்துக்கொண்டார்கள். நீங்களும் இதில் கையெழுத்துப் போட்டுத்தான் ஆக வேண்டும்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

அப்போதைய சூழ்நிலையில் எதிர்ப்பை காட்டினாலும் பிரபாகரனுக்கு வேறு வழியில்லை. பிரபாகரன் வாழ்வில் சென்னையில் உமா மகேஸ்வரனுடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, அங்கே தி நகரில் நடந்த சம்பவங்கள் மூலம் காவல்துறை சட்ட ஏற்பாட்டுக்குப் பிறகு மொத்தமாக மற்றவர்களிடம் பணிந்தது இங்கு தான். அவரின் மொத்த வாழ்விலும் இந்த இரண்டு சம்பவங்கள் மட்டுமே?

தமிழ்நாட்டு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் கூட அன்று ஒரு வேடிக்கையாளராகத் தான் இருக்க முடிந்தது என்பது மற்றொரு ஆச்சரியம். அந்த அளவிற்கு அதிகார மட்டத்தில் தெளிவாகக் காய் நகர்த்தப்பட்டது. ஜுலை 26 அதாவது சரியாகப் பத்து நாட்களில் ஒப்பந்த நகலை உறுதிபடுத்தும் வேலை. ஆமாம் திணிக்கப்பட்டது என்பது தான் சரியான வார்த்தை.

இது ஜெயவர்த்னே உருவாக்கிய திட்டமல்ல. அவரையும் மிரட்டி நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட ஒப்பந்தம். கையொப்பமிட்டு அடுத்த எட்டு நாட்களில் மொத்த ஆயுதப்போராளிகளின் ஆயுதங்களை ஒப்படைக்க வைத்து அவர்களை நிராயுதபாணியாக ஆக்குவது.

ஒப்பந்த இறுதி நகலில் ராஜீவ் காந்தி ஜெயவர்த்னே மட்டும் தான் கையெழுத்திடுவார்கள்.

ஈழப் போராளிகளில் எவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களோ உடனடியாகச் சிறையில் அடைப்பது.

அமைதிப்படை என்ற பெயரில் தமிழர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்திய இராணுவ வீரர்கள் இலங்கையில் ஒப்பந்தம் அமலாகும் வரைக்கும் மொத்த சட்ட ஒழுங்கை பாதுகாப்பது.

ஒப்பந்த ஷரத்துக்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சிறிய நாடான இலங்கையின் மீது இந்தியா படையெடுக்கும் என்று ஜெயவர்த்னேவுக்கு அன்புடன் கூடிய மிரட்டல்.

இந்த முதல் கட்டம் டெல்லியில் இவ்வாறு தொடங்க, இதன் அடுத்தக் கட்டம் சென்னையில் நடந்தது. EPRLF மற்றும் TELO. PLOT என்பவர்களை ஒரு கூட்டணியாகவும், ENTLF என்ற மற்றொரு கூட்டணிகளையும் தனித்தனியாகப் பிரித்து வைத்து இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகக் கையெழுத்து வாங்கப்பட்டது.

இந்த இரண்டு கூட்டணிகளையும் ஏற்கனவே ரா உளவு அமைப்பால் பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஏற்கனவே மாற்றி வைத்து இருந்தனர்.

சென்னை சாந்தோமில் உள்ள ரா அலுவகத்தில் தலைமையதிகாரி நாராயணன் மூலம் நேரிடையான கண்காணிப்பில் ஒவ்வொன்றும் மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டுத் தலையாட்டி பொம்மையாக மாற்றி வைத்து இருந்தனர். அப்போது இந்தக் கூட்டத்தில் நாராயணன் கூட உடன் இருந்தவர் அப்போதைய இலங்கைக்கான இந்திய தூதர் கேப்டன் குப்தா. ஒப்பந்த பிரதிகளை எந்தப் போராளிக்குழுக்களுக்கும் வழங்கப்படவில்லை.

கையெழுத்து வாங்கியதும், வாய்வழியே சொன்னதும் மட்டும் தான். இது போக அமிர்தலிங்கம் தனியாக ஒப்பந்த நகலில் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு அமைதியாகிப் போனார்.

அப்போது கால்கள் ரணமாகி எழுந்து நடமாட முடியாத நிலைமையில் இருந்த EROS பாலகுமாரன் குண்டுக்கட்டாகத் தூக்கிப் போகப்பட்டு, நிர்ப்பந்தம் செய்யப்படத் தொடக்கத்தில் பிரபாகரன் போலவே முரண்டு பிடித்தவர் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அவரும் கையெழுத்து போடவேண்டியதாகி விட்டது.

அடையாள அட்டையும், தினசரி பேட்டாவும் வழங்கப்பட்டு ஒவ்வொருவரும் கண்காணிப்பில் இருந்தனர்.

ஆதிக்கம் செலுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த பிரபாகரனுக்கு மட்டும் இந்திய அரசாங்கத்தால் மாதம் 50 லட்சம் வழங்கப்படும் என்றொரு மறைமுக ஒப்பந்தம் ஒன்றையும் வாய் வார்த்தையாக சொல்லியிருந்தனர். காரணம் அப்போது நிர்வாக வசதிக்காக வரி வசூல் மூலம் விடுதலைப்புலிகள் ஆட்சி செலுத்திக்கொண்டுருந்தனர். ஒப்பந்தம் அமலானதும் இந்தத் தொகையும் ஒரு மாதம் மட்டுமே கைக்குப் போய்ச் சேர்ந்தது. அப்புறம் பணால்.

தொடக்கத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து ஏதும் தெரியாமல் பிரபாகரன் சொன்ன வாசகம் இது. ” 30 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த இலங்கை பிரச்சனைகள் இன்னும் ஒரு வாரத்தில் தீர்வு காணப்பட்டு விடும்”

அதே பிரபாகரன் மொத்தமும் புரிந்த போது சொன்னது,

“தமிழர்களின் உரிமையைப் புறக்கணிக்கும் எந்த ஒப்பந்தமும் வெறும் காகிதமாகத்தான் இருக்கும். இது தமிழர்களின் மேல் திணிக்கப்பட்ட ஒப்பந்தம். அளவற்ற துன்பங்களை அனுபவித்துக்கொண்டுருக்கும் மக்களை விட்டு விட்டு இந்திய அரசாங்கம் மொத்தமாக இலங்கையுடன் இணைந்து செயல்படுவது போல் தான் இருக்கிறது.

சில தவறான புரிதல்களைக் களைந்து செல்வதற்காகப் பிரதமருடன் பேச வரும்படி தந்திரமாக அழைத்து வரப்பட்டேன். அதன் பிறகு திருப்தியற்ற இந்த ஒப்பந்தத்தை இருவரும் சேர்ந்த நாடகம் போல் நடத்தி ஏமாற்றப்பட்டதை நினைத்து வருந்துகிறேன். விவாதம் என்பது இல்லாமல் தலையாட்ட வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொண்டு அவர்கள் நினைத்ததைச் சாதித்துக்கொண்டார்கள்”

அசோகா ஹோட்டலில் நடந்த உரையாடலில் பிரபாகரன் மிரட்டப்பட்டதும், உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்த பிரபாகரன் நிலைமை கண்டு, வைகோ, நெடுமாறன் தலையிட்டதும் இதன் தொடர்ச்சியே. வெளியே வந்து எத்தனை தான் புலம்பினாலும் “எவர் எதிர்த்தாலும் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றியே தீருவோம்” என்று சூளுரைத்து இறுதியில் செயல்படுத்தியும் காட்டினர்.

தொடக்கத்தில் சிங்கள இராணுவ சிப்பாயிடம் பின் மண்டையில் ராஜீவ் காந்தி வாங்கிய அடி, இறுதியில் ஸ்ரீபெரும்புதூரில் மொத்த உடம்பும் உருக்குலைந்து வழித்து அள்ளும் அளவிற்கு அவருக்குக் கிடைத்த பரிசு தான் மொத்த உலகத்தையும் கதற வைத்துவிட்டது.

அடுத்த நூற்றாண்டுக்கு சென்றாலும் அழியாத கறையாகிப் போனது. அன்று அதிகாரவர்க்கத்தினர் உருவாக்கிய அலங்கோலத்தில் சிதறிய புள்ளியாகி நம் மனதில் மட்டும் இன்றும் வாழ்ந்து கொண்டுருக்கிறார்.

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *