14. கண்ணீர்த்தீவு

இப்போது ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. உள்ளே இருந்த மொத்த மக்களின் பழக்கவழக்கங்கள் சற்று மேம்பட்டதாகி விட்டது. ஆங்கிலம் என்பது வாழ்க்கை மொழியாக மாற்றம் பெறத் தொடங்கிய காலமிது. எங்கெங்கு காணினும் கிறிஸ்துவம் கூட ஒரு சமயமாக ஏற்றுக்கொண்டதாகி விட்டது.

இனக்குழுவாக இருந்தவர்கள் இப்போது தங்களுடைய இனம் சார்ந்த சிந்தனை என்கிற அளவிற்குச் சற்று மேம்பட்டு உள்ளே உழன்று கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அப்போது உலகமெங்கும் பௌத்தம் வளர்ந்து இருந்தது. வளர்ந்து இருந்த நாடுகளில் இருந்தவர்கள் சிங்களர்கள் அல்ல.

ஆங்கிலேயர்கள் இலங்கையின் உள்ளே வந்த போதும் இந்தத் தமிழ் மொழியும், பௌத்தமும் இருந்தது.

கிபி 112. முதல் 134 வரைக்கும் ஆண்ட சிங்கள மன்னராக இருந்த ஜெயபாகு முதல் கிபி 1815 வரைக்கும் ஆண்ட ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்ககே மன்னர் வரைக்கும் அவர்களின் மதம் பௌத்தமாக இருந்தாலும் மொழி என்பது தமிழ் மொழி தான்.

இன்றைய சிங்கள மொழியின் தொடக்கமான எலு என்பதில் எச்சமும் மிச்சமும் விடாமல் சிறிது சிறிதாகப் பல மொழி கலப்புகளுடன் மாறிக்கொண்டே வந்தது.

தொடக்கக் காலகட்டத்தில் இலங்கையில் பௌத்த மதத்தைத் தழுவியர்கள் அத்தனை பேர்களும் தமிழர்களே. அப்போது அவர்களைப் பௌத்த தமிழர்கள் என்றழைக்கப்பட்டனர். பின்னாளில் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய அத்தனை புனைவுகளின் மூலமாகப் பௌத்த சமயத்தைத் தழுவியர்கள் முழுமையான சிங்கள வம்சத்தைச் சேர்ந்தவர்களே என்று முடித்து எளிதாக ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.

இலங்கை சுதந்திரம் வாங்கும் வரைக்கும், பின்னாளில் உருவாகப் போகும் பல சிங்கள சார்பாளர்கள், தலைவர்கள் வரைக்கும் தமிழ் மொழியைப் பேசியதும், எழுதியதும், முக்கிய ஆவணங்களில் தமிழிலேயே கையெழுத்துப் போட்டதும் இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கண்டி முடியாட்சியை முடித்து வைக்க உதவிய சிங்கள கூட்டணியில் மூன்று பேர்களைத் தவிரச் சந்திரிகா குமார துங்கே கணவர் வழி பாட்டனார் ரத்வட்டே வரைக்கும் அன்று ஆங்கிலேயர்களிடம் உருவாக்கிய ஒப்பந்தத்தில் தமிழில் தான் கையெழுத்து போட்டு இருக்கின்றனர்.

ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும் பாதுகாப்பாக இலங்கையை விட்டு வெளியே சென்று இங்கிலாந்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் வைத்து காவல் காத்துக் கொண்டுருக்கிறார்கள்.

ஆனால் தொடக்கம் முதலே இலங்கை மட்டுமல்லாது உலகம் முழுக்கத் தமிழர்களின் உண்மையான வரலாற்றை, சான்றுகளை ஆவணமாக்குவதில் எவருக்கும் அக்கறையும் இருக்கவில்லை.

அதற்கான அவஸ்யங்களையும் மற்றவர்களைப் பார்த்து யோசிக்கவும் இல்லை என்பது இன்று வரையிலும் மகத்தான ஆச்சரியம். இதுவரைக்கும் மொத்த இலங்கையையும் ஆங்கிலேயர்கள் மூன்று பகுதிகளாக வைத்துக்கொண்டு தான் ஆட்சி புரிந்து வந்தனர்.

நிர்வாகச் சிரமத்தின் பொருட்டுக் கோல்புரூக் என்ற ஆங்கிலேயர் (1833) தலைமையின் கீழ் குழு அமைத்து ஆலோசனை கேட்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து இப்போது 35 வருடங்கள் ஆகிவிட்டது.

காரணம் நிர்வாகத்திற்குத் தேவையான உண்மையான பணப்பயிர் தோட்டங்கள் மெதுவாக உருவாகிக் கொண்டுருந்து. உபகரணங்கள் எதுவுமே இல்லாமல் மனிதர்களைக் கொண்டே புதிதாக உருவாக்கப்பட்ட நிலச் சட்டத்தை வைத்துக்கொண்டு உள்ளே வாழ்ந்து கொண்டுருப்பவர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்களைக் கொண்டு ஆங்கியேலயர்களின் வசதிக்காக அத்தனை அஸ்திவாரங்களும் உருவாக்கப்பட்டது.

பிடுங்கப்பட்ட நிலங்கள் மொத்தமும் வந்து இறங்கும் துரைமார்கள் கையில் கொடுக்கப்பட்டது. இதில் குறிப்பிட்டுக் காட்டவேண்டிய முக்கிய அம்சம் ஒன்று உண்டு.

இவர்கள் உள்ளே நுழைந்த ஐந்து வருடத்திற்குள் (1803) தமிழர்களின் எல்லைகள், சிங்களர்களின் எல்லைகள் என்று அப்போதே வரைபடம் உருவாக்கி வெளியிட்டார்கள். உள்ளே வெவ்வேறு கலாச்சாரம், மொழி கொண்டு வாழ்ந்து கொண்டு இருப்பதை உணர்ந்து ஒவ்வொன்றையும் ஆங்கிலேயர்கள் ஆவணமாக்கினார்கள்.

ஆனால் ஏன் மொத்தமாகச் சேர்த்து இனி ஆள வேண்டும் என்று யோசித்தார்கள்?.

கிரேக்க புவியாளர் தாலமி முதல் இலங்கையை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறியது வரைக்கும் மொத்த ஆவணங்களிலும் தமிழர் சிங்களர்கள் வாழ்ந்த புவி அமைப்பின் மொத்தத்தையும் ஆவணப்படுத்தி இருக்கின்றார். கோல்புரூக் பரிந்துரைக்குப் பிறகு தொடக்கத்தில் 5 மகாணங்களாக மாற்றப்பட்டது.

இதுவே பின்னாளில் 9 மகாணங்களாகவும் பிறகு 20 மாவட்டங்களாகவும் ஆனது. இதன் மூலம் தமிழர்களின் பகுதியில் படிப்படியாகச் சிங்களர்களைக் குடியேற்றுவதும் நடக்கத் தொடங்கியது. அப்போது தமிழர்களின் தாயகமாக இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 26500 சதுர கிலோ மீட்டர் இருந்தது.

ஆங்கியேலர்கள் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக ராஜதந்திர விளையாட்டுக்களை தொடங்கி வைத்தனர். விளைவு கடைசியில் (1948) கிழக்கு மகாணத்தில் 7000 சதுர கிலோ மீட்டரும், வடக்கு மகாணத்தில் 500 கிலோ மீட்டரையும் தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு அரசு அங்கீகாரம் கொடுத்து சிங்கள குடியேற்றத்தை நிறைவேற்றியதில் முடிந்தது.

கோல்புரூக் பரிந்துரைக்குப் பிறகு தான் இலங்கை என்ற சரித்திர பக்கங்களின் உண்மையான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தொடக்கமானது.

நாகர்கள், வேடர்கள், நாடோடிகள், இனக்குழுக்கள், மன்னர்கள், குறுநிலமனனர்கள், தமிழ், சிங்களம் என்பதெல்லாம் அழிந்து ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் அதுவரையிலும் வளராமல் இருந்த வக்கிரமும் விரைவாக வளரத் தொடங்கியது.

உருவாக்கியதற்கு முக்கியக் காரணம் ஆங்கிலேயர்கள் தான் என்றாலும் இறுதிவரையிலும் அதை உணர்ந்தவர்கள் யாருமில்லை. ஆனால் ஆங்கிலேயர்களை எதிர்த்து உருவான தொடக்க கால தமிழ்த்தலைவர்கள் தமிழ் சிங்கள ஒற்றுமை என்ற நோக்கில் தான் பாடுபட்டார்களே தவிர சிங்களர்களின் தந்திரங்களை புரிந்து கொள்ளத் தெரியாமல் அதற்கே பலியானது தான் தமிழர்களின் வீழ்ச்சியின் தொடக்கம்.

அதுவே இன்றைய இனவாத பௌத்த ஆட்சியாளர்களின் கொள்கை ரீதியான அடிப்படையாக மாறியுள்ளது.

இதற்குப் பிறகு உருவானவைகள் தான் சொர்க்கத் தீவின் கதை என்பது கண்ணீர்த் தீவின் கதையாக மாறியது

(முற்றும்)

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *