13. சீனாவின் கண்பார்வையில் இந்தியா

” இலங்கை அரசுக்குச் சொந்தமான சொத்திணை நட்பு நாட்டவருக்குப் பகிர்ந்து கொடுப்போம். இதன் மூலம் அவர்களின் நன்மதிப்பையும் நட்பையும் பெறுவோம். இவ்வாறு பெற்ற துணையைக் கொண்டு இந்தியாவின் இராணுவ தலையீடுகளிலிருந்து இலங்கையைக் காப்போம்”

1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்னே கூறிய வாசகம் இது.

காரணம் தொடக்கம் முதலே இலங்கை ஆட்சியாளர்களுக்கு இந்தியாவின் மகா எரிச்சல். அதற்கான காரணத்தையும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். இந்தியா இலங்கையில் உருவாக்கியுள்ள தொழில் முதலீடுகளின் மூலம் அதிக லாபத்தை ஈட்டிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருப்பதே முக்கியக் காரணமாக இருந்தது.

2003 செப்டம்பர் மாதத்தில் ரணில் விக்ரமசிங்கே சீனா சென்றிருந்த போதிலும்

முழுமையான புரிந்துணர்வை உருவாக்க முடியவில்லை. ஆனால் இலங்கையைத் தாக்கிய ஆழிப்பேரலையின் தாக்கத்தால் 2004 டிசம்பருக்கு பிறகே சீனாவின் பார்வை சற்று மாறத் தொடங்கியது. இலங்கையின் மீது இப்போது சற்று மேம்பட்ட கரிசனம் உருவாகியிருந்தது. காரணம் சீனா தனது ஆயுதக்கிடங்கை உருவாக்கியிருந்த கல்லே என்ற கடற்கரை பகுதியில் ஆழிப்பேரலைகள் உருவாக்கியிருந்த சீரழிவை போக்க இலங்கைக்கு 14 லட்சம் டாலர் வழங்கியது.

இதன் தொடர்ச்சியாகச் சந்திரிகாவை சீனா தங்களது நாட்டுக்கு வரவழைத்து அடுத்தக் கட்டத்திற்கான செயல்பாடுகளைச் செய்யத் தொடங்கியது.

தென் இலங்கையில் இருந்த ஹம்பன்தோட்டா துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும், அங்கு ராட்சத எண்ணெய் கலன்களை அமைப்பதற்கும், மேற்கு இலங்கையில் புத்தளத்திற்கு அருகாமையில் அமர்ந்துள்ள நோரோச்சோலைக் கடற்கரை கிராமத்தில் 900 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் சீனாவின் உதவி தேவையென்று சந்திரிகா சீனா சென்றிருந்த போது அவர்களிடம் கோரிக்கை வைத்ததார்.

இலங்கை வைத்த கோரிக்கைகள் சீனாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஏன் எனில் ஹம்பன்தோட்டா சீனாவின் கீழ்வரும் பட்சத்தில் இந்துமகா சமுத்திரத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சீனாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் எரிபொருள் நிரம்பிய கப்பல்களைக் கண்காணிப்பது எளிதாகிவிடும்.

மேலும் நோரோச்சோலையின் மின் நிலையம் அமைக்கும்பட்சத்தில் 70 கீமீ வடமேற்கு அருகேயுள்ள சேதுசமுத்திர திட்டத்தினைத் தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்து விடமுடியும்.

2004 ஏபரல் முதல் 2006 ஜுலை வரைக்கும் இலங்கை இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் மீது இராணுவ ரீதியான தாக்குதல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தது. ரணிலும் ஆட்டத்தை விட்டு விலகி மாஜியாகிவிட் இப்போது மகிந்தாவுக்குப் பம்பர் லாட்டரி போல ஒவ்வொன்றும் பழமாக மாறத் தொடங்கியது.

இப்போது மகிந்தாவுக்குச் சீனாவை வெறும் ஆயுத வியாபாரியாகப் பார்ப்பதை விட இலங்கையின் முக்கியமான கூட்டளியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவஸ்யத்தை உணர்ந்து ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தார்.

இந்தியாவுடன் நட்பாக இருப்பதை விடச் சீனாவை மிக நெருங்கிய கூட்டாளியாக உள்ளே கொண்டு வந்து விட்டால் பாதிப் பிரச்சனைகள் முடிந்துவிடும் என்று ராஜபக்ஷே தீர்மானமாய் நம்பி அதற்கான காரணக் காரியங்களில் கவனம் செலுத்தினார். காரணம் சீனாவை உள்ளே கொண்டு வந்தால் சீனாவின் ஆதரவு நாடுகளிடமிருந்து ஏராளமான உதவிகளை, ஆயுதங்களைப் பெற வாய்ப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டார்.

அதுவரையிலும் புதுப்பிக்கப்படாமலிருந்த சீனாவின் நோரிங்க்கோ நிறுவனத்தின் ஒப்பந்தத்தைத் தூசி தட்டி மீண்டும் சீனாவை உள்ளே கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார்.

2006 ஆம் ஆண்டுக் கருப்பு ஜுலை கலவர நினைவு நாளுக்கு மூன்றாம் நாள் அதாவது ஜுலை 26 ஆம் தேதி இலங்கை விமானப்படையின் விமானங்கள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாவில் ஆறு அணையைச் சுற்றியிருந்த விடுதலைப்புலிகளின் முகாம் மேல் தொடர்ச்சியாகக் குண்டு போட்டுத் தாக்குதல்களைத் தொடங்கியது. விடுதலைப் புலிகள் மாவிலாறு அணையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள் என்ற காரணத்ததிற்காக இந்தத் தாக்குதல் என்று கூறியது.

இத்துடன் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இருந்த சமாதான உடன்படிக்கு முறிநது வெளிப்படையான தாக்குதல்கள் உருவாகத் தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *