12. வழங்கிய முனிவர் வாங்கிய பிரபாகரன்

947 முதல் தொடங்கிய இந்திய ஜனநாயகப் பாதை இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் பெற்ற அவமானம் என்பது நினைத்தே பார்க்க முடியாதது. இந்திய அதிகாரவர்க்கத்தின் உள்கட்டமைப்பு எந்த அளவிற்கு இருந்தது என்று உலகம் முழுக்க முரசு அறிவிக்காத குறைதான்.

ஏன்?

முக்கியக் காரணம் உளவுத் துறையின் மோசமான செயல்பாடுகள். அதுவே தான் இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டுருக்கிறது. பிராந்திய நலன் முக்கியம் என்ற அளவிற்கு அதை மீட்டு எடுக்க உபயோகித்த முறைகள் தான் மொத்தத்திற்கு அவமானத்தைப் பரிசாகப் பெற்றுத் தந்தது.

உள்ளே நுழைந்து பூர்வாங்க ஏற்பாடுகளைக் கவனிக்காமல் இருக்க அதுவே தீலிபன் மரணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது.

அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பாளராகயிருந்த தீட்சித்க்கு அப்போது உளவுத்துறை கொடுத்த கேவலமான அறிக்கை, ” இதற்குப் பிறகு புலிகளின் அரசியல் தந்திரம் இருக்கிறது” என்பதாக இருந்தது.

மொத்த அமைதிக்கும் சட்ட ஒழுங்குமுறைகளுக்கு இந்திய அமைதிப்படை தான் இனி பொறுப்பு என்ற சூழ்நிலையில் படகில் இலங்கையை நோக்கி பயணித்து வந்த 17 விடுதலைப்புலிகளைக் கைது செய்தது முதல் தவறு என்றால், அவர்களை இலங்கையிடம் ஒப்படைத்தது முக்கியத் தவறாகவும் முடிந்து விட்டது.

அமைதிப்படை நினைத்து இருந்தால் அந்தக் கைது சம்பவம் வெளியே தெரியாமல் அப்போதே அதை முடித்து இருக்கலாம். மோப்பம் பிடித்த ஜெயவர்த்னே துள்ளிக் குதித்து வந்ததும், இதையே காரணம் காட்டி பாதுகாப்பு அமைச்சராக இருந்த அதுலத் முதலி ” அவர்களை விடுதலை செய்யக் காரணமாக நீங்கள் இருந்தால் நானும் என்னைச் சார்ந்தவர்களும் அமைச்சரவையில் இருந்து வெளியேறிவிடுவோம் ” என்று மிரட்டத் தொடங்க ஜெயவர்த்னே அமைதியாகி விடவேண்டிய சூழ்நிலை. உறுதியான முடிவு எடுக்க வேண்டிய தீட்சித் அப்போதும் அமைதி காக்க, கொழும்பு சென்றால் சித்ரவதைக்கு ஆளாக நேரிடும் என்று சயனைடு சுவைத்து பிடிபட்டுருந்த 17 பேர்களும் மரணமடைய பிரச்சனைகள் விஸ்ரூபம் எடுத்தது.

அப்போது தான் குமரப்பா, புலேந்திரனுக்குத் திருமணம் ஆகியிருந்தது. இவர்களுக்கு எப்படி இருந்து இருக்கும். இலங்கை ராணுவத்திற்குச் சிம்ம சொப்பனமாக இருந்த இவர்களின் மரணம் பிரபாகரனுக்கு எத்தனை பாதிப்புகளை உருவாக்கியிருக்கும்?

ஆனால் இதைத் தடுக்க முயற்சித்த இந்தியத் தூதுவர், தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங், போன்றவர்களின் மொத்த உழைப்பும் அதுலத் முதலியின் கடுமையான பிடிவாதத்தால் தோற்றுவிட்டது. அவர்கள் ஜெயித்தார்கள் என்பதை விட இவர்கள் அதற்குக் காரணமாக இருந்தார்கள் என்பது தான் இங்கு முக்கியம்.

இந்தக் குழப்பத்திற்கிடையே இந்திய அமைப்படைக்குத் தலைமையேற்று வந்த தளபதிக்கும் அரசாங்கம் சார்பாளரான தீட்சித்க்கும் சரியான புரிந்துணர்வு இல்லை. மறைமுகமாக இருவரின் பகைமையும் வளர்ந்து கொண்டேயிருந்தது.

தீட்சித்க்கு நான் சொல்வதை நீ கேள்? என்ற மனோபாவம். தளபதிக்கோ எனக்குக் கட்டளையிட நீ யார்? என்ற நியாயமான கோபம்,

அன்றைய சூழ்நிலையில் நேர்மையான வழியில் அமைதிப்படையின் செயல்பாடுகளைக் கொண்டு செல்ல அத்தனை முயற்சிகளை எடுத்தவர் என்றால் இந்தத் தளபதி தான். கைது செய்யப்பட்ட புலிகளை ஒப்படைத்தால் முற்றிலும் வேறு பாதைக்குப் பயணிக்க வேண்டியிருக்கும் என்று அவர் கதறியது எவருக்கும் அப்போது புரியவில்லை. புரிந்தபோது மொத்தமும் கைமீறியிருந்தது.

ஜெயவர்த்னே எதிர்பார்த்துக்கொண்டுருந்த கலவரம் வெடிக்க அதுவரைக்கும் புலிகளுக்குக் கொடுக்கப்பட்டுருந்த பொதுமன்னிப்பை விலக்க அது மேலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆயிற்று.

கலவரங்களை இந்தியாவிற்குத் தெரிவிக்க, நடந்த மந்திர ஆலோசனைகளுக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் கையில் உள்ள ஆயுதங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்க உத்தரவு வர பொங்கியிருந்த பானையைத் தரையில் போட்டு உடைத்தாகிவிட்டது.

பிறகென்ன? அவசரம். அலங்கோலம், இறுதியில் அவமானம்.

உச்சகட்டமாய் இனி இந்தியாவுடன் போரிட்டுத்தான் ஆக வேண்டும் என்று பிரபாகரன் தீர்மானமாய் நம்புவதற்கு முன் அவர் தரப்பு விசயங்களை, ராஜீவ் காந்திக்கு (12.10.1987 முதல் 13,01,1988) வரைக்கும் கடிதம் வாயிலாகத் தெரியப்படுத்த ஒவ்வொரு கடிதமும் ராஜீவ் கைக்குக் கிடைத்த போது அவருக்கு உளவுத்துறை கொடுத்த தகவல் ” அவர்கள் வலுவிழந்து கொண்டுருக்கிறார்கள் ” என்கிற அடிப்படையில் இருந்த காரணத்தால் ராஜீவ் அந்தக் கடிதங்களைப் பொருட்படுத்தாமல் இருக்க முற்றியது தீராப் பகை.

மக்களை மிரட்டுதல், தாக்குதல், எறிகணை வீச்சு, அப்பாவிகள் சாவு, என்று தொட்டுத் தொடரும் சொந்தங்கள் போல் மக்கள் மொத்த அமைதியையும் இழந்த போது பாரபட்சம் இல்லாமல் விடுதலைப்புலிகளின் பின்னால் அணிதிரளத் தொடங்கினர்.

காட்டுப்பாதை புதிது. மேலே இருந்து வரும் கட்டளைகளும் வினோதம்.

எவரை அடிப்பது? எவரை பிடிப்பது?

இந்திய வீரர்கள் மாண்டு போனார்கள்.

உளவுத்துறை கொடுத்துக்கொண்டுருக்கும் தகவல்களுக்கும், போரை தலைமையேற்று நடத்திக்கொண்டுருந்த தளபதி மூலம் அனுப்பப்பட்ட, உள்ளே நடந்து கொண்டுருக்கும் எதார்த்த சூழ்நிலை அறிக்கைக்கும் முரண்பாடுகளின் மொத்த வடிவமாய் இருந்தது. ஆட்சியாளர்கள் உளவுத்துறைக்குக் கொடுத்த மதிப்பு என்பதைக் கடைசி வரைக்கும் உண்மை நிலவரத்திற்கும் கொடுத்து இருந்தாலே புதிய பாதை அன்றே கிடைத்து இருக்கும்.

கொடுக்க எவருமே இல்லை என்பதை விட அந்த அறிக்கைகள் ராஜிவ் காந்திக்குச் சென்றுவிடக்கூடாது என்பதிலும் கடைசி வரைக்கும் உறுதியாய் இருந்தனர். தலைமைத் தளபதி திபேந்தர் சிங் பின்னாளில் இதை அவர் புத்தகத்தில் சொல்லி வருத்தப்பட்டுருக்கிறார்.

தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பொம்மை அரசு என்பதை இந்தியா மட்டும் எதிர்பார்க்கவில்லை. ஜெயவர்த்னேவும் அது போன்ற ஒரு பொம்மையைத் தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுருந்தார். வலுவானவர்கள் வந்தால் அதுவே எதிர்காலத்திற்கு விபரீதத்தை உருவாக்கிவிடும் அல்லவா?

சிங்கள தந்திரத்தில் அன்றைய இந்திய ஆட்சிப் பொம்மைகள் என்ன செய்வார்கள்? என்ன செய்ய முடியும் என்பதைக்கூட உளவுத்துறை உணரத் தயாராய் இல்லை என்பது மொத்ததிலும் சோகமான ஆச்சரியம்.

இந்தப் பொம்மை அரசு மூலம் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரதராஜப்பெருமாள் தங்களுடைய ஆட்சி அதிகார அலுவலகத்தைத் திருகோணமலையில் வைத்து ஆள விரும்பினர். இதில் விருப்பம் இல்லாத ஜெயவர்த்னே அங்கு அவர்களுக்குத் தேவைப்படும் கட்டிடங்கள் கொடுக்க மறுக்கத் தேர்ந்தெடுத்தவர்கள் நொந்தவர்களாக இருந்தனர். ஒப்பந்தப்படி அதிகாரப் பகிர்வும் கொடுக்கத் தயாராய் இல்லை.

ஜெயவர்த்னே அரசியல் ஓய்வு பெற்ற 1988 இறுதி வரைக்கும் இப்படித்தான் போய்க்கொண்டுந்தது. இவர்களை ஆட்சி என்ற பெயரில் உள்ளே அமர வைக்க வேண்டும் என்பதை விரும்பிய இந்தியா அவர்கள் வலுவானவர்களாக மாற்ற ஏன் முயற்சிக்க வில்லை என்பதை விடப் பிரேமதாசா உள்ளே வந்த போது கூட இதில் எவரும் அக்கறை செலுத்தவும் தயாராய் இல்லை.

இந்திய வரிப்பணத்தைக் கொண்டு போய்க் கொட்டி தீர்த்து ஆடி அலங்கோலப்படுத்தி அவமானப்பட்டு இறுதியில் இது போன்ற முறைப்படியான விசயங்களில் கூட ராஜீவ் காந்திக்கு தெளிவான முறையில் எவரும் புரிய வைக்கத் தயாராய் இல்லை.

இந்தியா என்ற இறையாண்மை மிக்க நாட்டின் கௌரவம் என்பதை சாக்கடையில் கொட்டி கவிழ்த்த அதிகார வர்க்கத்தினர் ராஜீவ் காந்திக்கு வாழ்நாள் முழுக்கப் போக்க முடியாத களங்கத்தை உருவாக்கியிருந்தனர்.

பின்னால் வந்த பிரேமதாசாவிடமும் முரண்பட்டு முட்டி மோதிக்கொண்டு இருந்தனர். பல விதங்களிலும் தன்னுடைய செல்வாக்கை இழந்து இருந்த ராஜீவ் காந்தி அப்போது இந்தியாவில் தொடங்கப் போகின்ற தேர்தல் அறிவிப்புக் காரணமாகத் தன்னுடைய தோல்வி மொத்தமும் வெளியே தெரிந்து விடுமோ என்று அமைதிப்படை இலங்கையில் இருந்து வெளியேறவேண்டிய விலகலை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தார்.

இந்தப் பிரச்சனைகளில் தொடக்கம் முதல் பாய்ந்தவர்கள் இந்திய உளவுத்துறையினர். இவர்களுக்கு மேலே வானளாவிய அதிகாரம் உள்ளவராகப் பாய்ச்சல் காட்டியவர் தீட்சித்.

இறுதியில் பலிகடா ஆகியதென்னவோஅமரர் ராஜீவ் காந்தி.

ஆனால் இத்தனை விசயங்களிலும் தோற்ற உளவுத்துறையினர் ஒரு வகையில் அன்றே சில அவர்கள் பாணியிலான நல்ல விசயங்களைச் செய்யத் தொடங்கினர். பிரபாகரனுக்குச் சமமாக இருந்த மாத்தையாவை வளைத்துப் போட்டதும், விடுதலைப்புலிகளின் உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மன் பயணித்த காரில் வெடிகுண்டு வைக்கும் அளவிற்கு அவரை மாற்றியதும், கிட்டு மேல் வெடிகுண்டு வீசி அவரின் காலைப் போக்கியதும் நடந்தது.

அதுவே இறுதி வரைக்கும் மாற்றம் பெறாமல் ஆயுதக்கொள்முதல் செய்துவிட்டு, கிட்டு பயணித்து வந்த கப்பலை மாத்தையா மூலம் கண்டு கொண்ட இந்திய கப்பற்படை சுற்றிவளைக்க ஆயுதக்கப்பலையும் தன்னையும் அழித்துக்கொண்டு விடுதலைப்புலிகளின் வரலாற்றில் கிட்டு வீரமரணம் எய்தினார்.

அன்று தான் இந்திய உளவுத்துறையிடம் விலை போயிருந்த மாத்தையாவின் துரோகத்தைக் கண்டு உணர காரணமாக அமைந்தது. இது போன்ற மூன்றாந்தரக் காரியங்களில் கெட்டியாக இருந்தவர்கள் ராஜீவ் காந்தி மரணத்திலும் இருந்து இருக்கலாமே?

ஆனால் இதை விட மொத்ததிலும் கொடுமை இந்திய அமைதிப்படையின் தொடக்கம் முதல் கதாநாயகன் போல் காட்சியளித்தவரும், பிரபாகரனை அழிக்காமல் விட்டு விடுவேனா என்று டெல்லி அசோகா உணவு விடுதி முதல் இறுதி படை விலக்கல் வரைக்கும் உறுமிக்கொண்டுருந்த தீட்சித், பின்னால் அவர் எழுதிய புத்தகத்தில் நடந்த நிகழ்வுகளைப்பற்றி, பிரபாகரனைப் பற்றி எப்படி எழுதியுள்ளார் தெரியுமா?

“நான் பார்த்தவரைக்கும் மற்றப் போராளிகுழுக்களின் தலைவரை விட எல்லாவிதங்களிலும் பிரபாகரன் மேம்பட்டவராகக் காணப்பட்டார். இவரைப் பற்றித் தப்பாகப் புரிந்து வைத்துருக்கின்றேன். இவரது ஆழமான லட்சியம், அரசியல் அறிவு, ராணுவ போர்த்தந்திரங்கள், போர்த்திறமைகளை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இவருடைய மதிநுட்பம் நிறைந்து பல சாதனைகளைப் போற்றத்தான் வேண்டும். அமைதிப்படைகளின் போருக்குத் தாக்குப் பிடித்துத் தொடர்ந்து போராட்டத்தை முன் நடத்திய காரணத்தால் இவர் மக்களின் ஆதர்ஷ்ண நாயகனாக மதிப்பைப் பெற்றார் “

” தமிழீழ லட்சியத்தில் பிரபாகரனிடமிருந்த தணியாத வேட்கை, தீராத வெறி, தொடர்ந்த போராட்டங்கள் அத்தனையிலும் இழக்காத மன உறுதி ஆகியவற்றை நாங்கள் குறைவாக மதிப்பீடு செய்தமையே இந்தியா செய்த மாபெரும் தவறாகும் “

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டம் போல?

காரணம் இவரும் முனி பிடித்தவர் போலத்தான் எப்போதும் கோபப்பார்வையாய் வாழ்ந்தவர். இவர் எளிதாகப் பாராட்டுரை வழங்கி விட்டுப் போய்விட்டார்.

இவர் உருவாக்கிய இவரால் உருவாக்கப்பட்ட உருக்குலைத்த அடிப்படை இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களின் எச்சமும் மிச்சமுமாய் உலகை ஸ்தம்பிக்க வைத்த காந்தி, இந்திரா மரணத்திற்குப்பிறகு ராஜிவ் காந்தி மரணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியது.

அவருக்கென்ன போய்விட்டார்? அகப்பட்டவர் ராஜிவ் காந்தி?

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *