10. வெந்து தணிந்தது தீவு

ஸ்பானீஷ், டச்சு, போர்த்துகீசியர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் வணிக நோக்கத்திற்காக ஒவ்வொரு நாட்டிற்குள் சென்றாலும் சூரியன் அஸ்தம்பிக்காத நாடு என்ற பெருமையைப் பெற்றுருந்த பிரிட்டன் மட்டும் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருந்ததை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.

மற்றவர்கள் வணிக நோக்கத்தையும் மீறி, சரியான விலை கொடுக்காமல் ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், எதிர்த்தவர்களை நடுக்கடலில் கொண்டு போய்த் தள்ளி அழிப்பது வரைக்கும் செய்தனர். இதனோடு தங்கள் மதம் சார்ந்த அத்தனையையும் வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணித்தனர்.

ஆனால் ஆங்கிலேயர்களுக்கு வணிகம் முக்கியம். அத்துடன் மதம் என்பது அதுவொரு கிளைநதி. உள்ளே அதுபாட்டுக்குத் தனியாக வேறொரு பாதையில் போய்க் கொண்டே இருக்கும். எதுவுமே வெளிப்படையாகத் தெரியாது.

உலகத்திற்கே இன்று வரை அவர்கள் மிகச் சிறந்த ராஜதந்திரிகளாக ஏன் இருக்கின்றார்கள்? என்பதற்கு இதை விட வேறு உதாரணம் நமக்குத் தேவையா?

தொடக்கத்தில் இலங்கையின் உள்ளே ஆங்கிலேயர்கள் நுழைந்த போது அப்போது பிரிட்டனுக்கு ஹாலந்துக்கும் போர் நடந்து கொண்டுருந்தது. இதன் (1782) எதிரொலியாக ஆங்கிலேயர்கள் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட படையின் மூலம் திருகோணமலையில் இறங்கி கைப்பற்றினாலும் மீண்டும் 1795 ஆம் ஆண்டுத் தான் உள்ளே நுழைந்தனர். இலங்கையில் இருந்த பொக்கிஷ புதையலை இறைவன் மற்றவர்களுக்காகவா படைத்தான்?

அது போக இயற்கை கொடையாகப் படைத்து இருக்கும் திருகோணமலை துறைமுகம். யோசித்தவர்கள் செயலில் இறங்கினர்.

1796 ஆம் ஆண்டுப் பிரிட்டிஷார் இலங்கையில் டச்சுக்காரர்கள் பிரித்து வைத்திருந்த மூன்று பகுதிகளையும் கைப்பற்றியதோடு, மற்றப் பகுதிகளையும் (கிபி 1776 பிப்ரவரி) முழுமையாகக் கைப்பற்றினார்கள்.

கைப்பற்றப்பட்ட பகுதிகளைக் கிழக்கிந்திய கம்பெனியின் சென்னையில் கவர்னராக இருந்த ஹோபர்ட் பிரபு என்பவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.. ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆளுமைக்குள் மொத்த இலங்கையையும் கொண்டு வந்தாலும் முறைப்படியான நிர்வாக அமைப்பை கொண்டு வருவதில் அவசரம் காட்டவில்லை.

அப்போது ஐரோப்பாவில் பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியன் படையெடுப்பென்பது அன்றைய சூழ்நிலையில் பீதியை கிளப்பிக் கொண்டுருந்து.

பெரிய நாடுகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பகீரப்பிரயத்தனத்தில் இருந்தன.

தங்களுடைய ஆளுமையில் இருந்த நெதர்லாந்தை பெற்றுக்கொண்டு இலங்கையைக் கொடுத்து விடலாம் என்ற எண்ணம் இருந்தது.

இது தொடர்பாக உருவாகும் செலவினங்களுக்காக முறைப்படி ஆட்சி அதிகாரம் ஆளுமையை உருவாக்காத ஆங்கிலேயர்கள், தேவைப்படும் நிதிக்காக இலங்கையின் உள்ளே ஒரு நிர்வாக அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஏதோ ஒரு வகையில் உள்ளே இருந்து நிதியை திரட்டுவது. பசுமைப்பூமியில் வேறு என்ன இருக்க முடியும்?

அன்றைய சூழ்நிலையில் தென்னை மரங்கள் தான் அதிகமாக இருந்தது.

தென்னை வைத்திருந்தவர்கள் மேல் மரத்திற்கு வரி (1796) என்று ஒரு புதிய கணக்கை தொடங்கி வைத்துக் கடைசியில் தோல்வியில் முடிந்து ஒரு வருடத்தில் அதைத் திரும்பப் பெற்றனர். இலங்கையின் மொத்த ஆளுமைப் பொறுப்பையும் இங்கிலாந்து மன்னர் வசம் (1798) ஓப்படைக்கப்பட்டது.

நிர்வாகமென்பது மன்னரின் பிரதிநிதிகள் வசம் ஒப்படைக்கப்பட்டாலும், வர்த்தகம் தொடர்பாகத் தேவைப்படும் அனுமதியென்பது சென்னையில் இருக்கும் கிழங்கிந்திய கம்பெனி மூலம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஹாலந்து நாட்டுடன் (1802) ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த உடன்படிக்கையின் படி டச்சு ஆதிக்கத்தில் இருந்த மற்ற அத்தனை பகுதிகளும் பிரிட்டன் குடியேற்றப்பகுதியாக அறிவிக்கப்பட்டு ஆங்கிலேயர்களின் ராஜபாட்டைத் தொடங்கியது.

தொடக்கத்தில் ஆங்கிலேயர்களால் (1803) உருவாக்கப்பட்ட வரைபடத்தின் படி அன்றே ஈழத் தமிழர்களின் தாயகம் என்பதை வடக்கில் சிலாவ், கிழக்கில் மடாவ்ச்சி, தெற்கில் படவில்குளத்தில் இருந்து திருகோணமலை மாவட்டம், மட்டக்கிளப்பு மாவட்டம் என்பது வரைக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுடன் புத்தளக் கரையோரப் பகுதியையும் உள்ளடக்கிய பகுதியாகும். இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 32 சதவிகிதம் ஆகும். மேலும் இலங்கையின் மொத்தக் கடற்பரப்பில் 60 சதவிகிதம் இந்தத் தமிழர் தாயகத்தில் அடங்கியிருந்தது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கும்புக்கன் ஆறு, வடமேற்கு மாகாணத்தின் மகா ஓயாவும், அதன் இரு எல்லைகளாக் காட்டப்பட்டு மகாவலி கங்கை, படிப்பனை ஆறு, கந்தளாய்க்குளம், ஜான் ஓயா, அருவி ஆறு போன்ற ஆற்றுப் படுகைகளும் அதன் எல்லைப் பிரதேசமாகக் காட்டப்பட்டுள்ளது.

இது தான் பின்னாளில் சிங்களர்கள் கையில் ஆங்கிலேயர்களால் ஓப்படைக்கப்பட்டது.

ஆனால் ஆங்கிலேயர்கள் ஆளுமைக்குள் மொத்த இலங்கையும் வந்துவிட்டாலும் கூட உள்ளே அப்போதும் கூட உள்ளே முடியாட்சி இருந்தது முதல் ஆச்சரியம் என்றால் சிங்கள மன்னராக இருந்த அவர் உண்மையிலேயே தமிழர் என்பது அடுத்த மகத்தான அதிசயம்

ஹாலந்து படைகளுடன் மோதி அவர்களை வென்று, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த போதும் அவர்களுக்குச் சிம்ம செப்பமனமாக இருந்த (1790) குலசேகர வைரமுத்து பண்டார வன்னியன் என்ற தமிழ் மன்னன் சிறப்புடன் இருப்பதும் மொத்தத்திலும் மறுக்கமுடியா வரலாற்றுத் தடங்கள்.

இவர் தான் பின்னால் வந்த கொரில்லா போர்த் தந்திரங்களின் பிதாமகன்.

தொடர்ந்து பயணிப்போம்…

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *