1. தூங்காத ரா (RAW) வுகள்

ஈழம் இந்திய அமைதிப்படை

இந்தியா உருவாக்கிய ஒப்பந்தத்தின்படி இலங்கையில் அமைதியை நிலைநாட்ட என்ற கொள்கையின் படி அமைதிப்படை வீரர்கள் உள்ளே நுழையப் போகிறார்கள். இது இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வு. சமகாலத்தில் வெளி வந்த மொத்த பிரபாகரன் குறித்த புத்தகங்கள், விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு விருப்பம் சார்ந்த அத்தனை புத்தகங்களிலும் இந்த நிகழ்வுகளையும் மேம்போக்காகவே எழுதப்ப்பட்டு இருக்கிறது.

சொல்லப்போனால் சென்றார்கள் தோற்றார்கள் என்கிற அளவில். இந்த IPKF (INDIAN PEACE KEEPING FORCE) குறித்து எழுதி உள்ளனர். அமைதிப்படை இலங்கையில் நுழைந்தது முதல் வெளியேறியது வரைக்கும் முழுமையான புரிதல்களை நாம் கண்டுணர வேண்டும்.

காரணம் தொடங்கப்போகும் அடுத்த அத்தியாயம் என்பது ஐபிகேஎப் முதல் ராஜீவ் காந்தி இறப்பு மற்றும் அதன் புலனாய்வு பக்கங்கள் வரைக்கும் உள்வாங்க வேண்டுமென்றால் முதலில் இந்தச் சுவடுகளையும் நாம் கடந்து செல்ல வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் வேறு சிலவற்றையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள்.

விடுதலைப்புலிகள் ஏன் சிறப்பானவர்கள்? மற்றவர்களுக்கும் அவர்களும் என்ன பெரிதான வேறுபாடுகள் என்ன? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்தியாவின் தத்துப்பிள்ளையும், ரா சிறப்புக் கவனம் செலுத்திய டெலோ இயக்கத்தைப்பற்றி அப்போது டைம் இதழ் (ஏப்ரல் 3 1989) கூறிய வாசகம் நினைவு கூறத்தக்கது.

” உளவு மற்றும் சீர்குலைவு வேலைகளில் பயிற்சி அளிப்பதற்காகக் கொண்டு வந்த டெலோ இயக்கத்தில் தெளிவற்ற நபர்களும் என்ன கொள்கை என்ன சித்தாந்தம் என்பதைப் பற்றிய புரிதல்கள் இல்லாமல் நிறைந்துருந்தனர். சிறீசபாரெத்தினம் தலைமைப்பொறுப்பில் செயல்பட்டு இருந்தாலும் அப்போதை டெலோ இயக்கம் என்பது ஐந்தாறு சிறு குழுக்கள் போல் தான் ஒழுங்கற்ற இயக்கமாய் இயங்கிக்கொண்டுருந்தனர். எந்தவித இலக்கும், நோக்கமும் இல்லாத ரா வுக்கு ஏற்ற, ரா விரும்பிய சிறப்பான கூலிப்படையாகச் செயல்பட்டுக் கொண்டுருக்கிறது.

இது எங்கள் தனிப்பட்ட கருத்து அல்ல. பயிற்சி கொடுத்துக்கொண்டுருக்கும் இந்திய அதிகாரி கொடுத்த தகவலின் அடிப்படையிலானது”

ஓரே காரணம் அப்போது தமிழ்நாட்டு ரா அலுவலகப் பொறுப்பாளராக இருந்த அதிகாரிகள் தமிழர் ரவி என்பவரும் மற்ற அவருக்குத் துணையான மேனன் என்பவரும் இருந்தனர்.

இவர்களுடன் சந்திரஹாசன் மிகுந்த நெருக்கமும் செல்வாக்கு உள்ளவராகவும் இருந்த இந்த ஒரே காரணமே டெலோ மட்டும் தத்துப்பிள்ளையாக ரா சுவீகரித்துக்கொண்டது.

தொடக்கத்தில் ரா நேரிடைப்பார்வையில் இவர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்ட இடங்கள் மண்டபம், கும்பகோணம், மசூலிப்பட்டிணம்.

இது போகச் சென்னை சர்வதேச விமான நிலையம் அருகிலும், அண்ணா நகரிலும் சிறிய முகாம் போன்ற அலுவலகம் வாயிலாக அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடக்கப் பயிற்சிகளில் சிறப்பாய் முன்னேறியவர்களை உயர்தர ராணுவப் பயிற்சிக்காக வட நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இமயமலை அடிவாரத்தில் உள்ள முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இங்குள்ள “நிறுவனம் 22” மூலம் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இது பக்கத்தில் உள்ள திபெத் ஆட்சி கவிழ்ப்பு, உள் நாட்டுக் கலவரங்கள் போன்றவற்றுக்கு என்றே உருவாக்கப்பட்ட அமைப்பு. மேலும் துணை ராணுவ பயிற்சிக்கூடங்கள் மூலமாகக் காலாட்படை பயிற்சி, பீரங்கி தாக்குதல்கள், எறிகணை, ராக்கெட், கண்ணிவெடிகள்,தகவல் தொடர்பு, வரைபடம் போன்றவற்றுடன் கொரில்லா தாக்குதல்கள் போன்ற போர் தந்திரங்களைப் பயிற்றுவிக்கப்பட்டன.

பயிற்சி பெற்றவர்களில் 600 பேர்கள் டெலோ இயக்கத்தினர். மற்றப் போராளிக்குழுவினர் 50 முதல் 100 பேர்கள் என்ற அளவில் இருந்தனர்.

பின்னால் நுழைந்த விடுதலைப்புலிகளில் இரண்டு தலைவர்களும் பயிற்சி பெற்றனர்.

ஒருவர் மாத்தையா மற்றொருவர் கிட்டு.

ரா பிரிவில் இருந்த அதிகாரி உன்னிகிருஷ்ணன் மூலம் ஒவ்வொரு நிகழ்வுகளும் இலங்கைக்குத் தகவல்கள் போய்க்கொண்டுருந்ததை இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும். புள்ளிவிபரங்கள், பெயர்ப்பட்டியல்கள் போன்ற அத்தனை விபரங்களும் கனஜோராய் சென்று கொண்டுருந்தது.. இந்த அதிகாரி சி.ஐ.ஏ எஜெண்ட் என்று கண்டுபிடிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. இவருடைய இந்தச் சிங்கள பாசத்தை இவரிடம் பணிபுரிந்த டிரைவர் சொன்ன போது மொத்தமாய்ச் சுதாரித்துக்கொண்டு இவரை உளவு பார்க்க ஆரம்பித்தனர்.

காரணம் ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்தபிறகு சமீபகாலத்தில் தூதுக்குழுவாகச் சென்றவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அழகிரி சொன்ன ஒரு விசயத்தைக் கேட்டு ஆச்சரியப்படாதீர்கள்.

” இந்தியாவிடம் இருக்கும் விபரங்களை விட இலங்கையில் அவர்களிடம் இருக்கும் மொத்த விடுதலைப்புலிகள் குறித்த தகவல்கள் மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாக இருக்கின்றது. காரணம் தமிழ்நாட்டில் உள்ள ஊர்முதல், சந்து பொந்து வரைக்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் பெயர் பட்டியல் முதல் அவர்கள் சார்ந்த அத்தனை விபரங்களும் விரல் நுனியில் வைத்து இருக்கிறார்கள்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் இந்தியாவைச் சார்ந்து இராமல் தனித்தன்மையாக வளர்ந்தது ஒரே நாளில் நடந்து விடவில்லை. எந்தந்த இயக்கங்களுக்கு வெளிநாட்டில் உள்ளவர்களின் ஆதரவு கிடைத்துக்கொண்டுருந்ததோ அவர்களைக் கண்டு உணர்ந்தது அவர்களைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்து மொத்த நிதி ஆதாரங்களையும் தங்கள் பாதைக்கு வரும் வரைக்கும் ஒவ்வொருவரையும் அங்கங்கே இருப்பவர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் கருணாநிதியின் செல்லப்பிள்ளையான டெலோ போல எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் போல் பிரபாகரன் இருந்த மற்றொரு காரணமும் அவர்களின் விரைவான வளர்ச்சிக்கு உதவியது.

அப்போது விடுதலைப்புலிகளுக்கு உதவ என்று செயல்பட்ட பல பேர்கள் எம்.ஜி.ஆருக்கு பின்னால் இருந்தார்கள். அதிலும் குறிப்பாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மகாதேவன் என்ற அதிகாரி அதிகாரப் பூர்வ ராணுவ ஆலோசனை நபராக முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டுருந்தார். டெலோ இயக்கம் பெற்ற பயிற்சி போல விடுதலைப்புலிகள் செய்த மற்றொரு காரியம் அப்போதைய பிரிக்கப்படாத தென்னாற்காடு, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், வீரர்கள் என்று தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சம்பளம் என்ற அடிப்படையில் நியமித்து விடுதலைப்புலிகள் தங்களது வீரர்களை அனுப்பி அவர்கள் மூலமும் பயிற்சி எடுக்க வைத்தனர்.

1985 ஆண்டில் சென்னையில் வீழ்ச்சி அடைந்த மின்ணணு சாதனங்கள் விலை என்பது இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட கடத்தல்களின் அடிப்படையில் நடந்த நிகழ்ச்சி. அது போக அப்போது போதைப் பொருட்களின் கூடாரமாகச் சென்னை விளங்க பிளாட் இயக்கத்தில் இருந்தவர்கள் புகுந்து விளையாடினர். ஒவ்வொன்றும் கோர்த்து மாலையாக மாற்றம் பெற க்யூ பிராஞ்ச் மொத்த விடுதலைப்புலி போராளிகளையும் சென்னையை விட்டு 1986ல் வெளியேற்றவதில் முழுக்கவனம் செலுத்தினர்.

மற்றொரு கொடுமையும் உண்டு.

போராளிக்குழுக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பிரித்து, ஒருவருக்கொருவர் பார்க்காத வரையிலும் பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபிடித்தனர். புத்திசாலித் தனமாகச் செயல்பட்ட ரா உளவுத்துறை இவர்களைப் பற்றி மொத்த ஆவணக்கோப்பாக மாற்ற காலதாமதம் செய்த காரணத்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதிகார வர்க்கத்தினருக்கே குழப்பம் உருவாகி வேறு சில வேண்டாத நிகழ்வுகளும் நடந்தது.

ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறைக்கும் எதிர் உளவு ( CounterIntelligence) ரொம்ப முக்கியம். தங்களுடைய ஆட்களைச் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் ஒற்றறிதல். ஆனால் இதிலும் கொடுமை.

இவர்களால் அனுப்பப்பட்டவர்கள் யாழ்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலையில் எவர் ஆதிக்கம் பெற்று இருந்தார்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் கொடுக்கும் “பரிசு” களில் மனம் மயங்கி மொத்தத்தையும் கோட்டை விட்டதும் நடந்தது.

ரா உளவுத்துறையினர் நினைத்தவாறு இவர்களால் செயல்பட முடியவில்லை. இதன் காரணமாக ரா அமைப்பினர் இவர்கள் மூலம் திரட்ட முடியாத சமாச்சாரங்களையும் பத்திரிக்கையாளர்கள் மூலம் பெற்று கோப்புகளை நிரப்பினர்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேறப்போகும் இந்தக் காலகட்டம் வரைக்கும் அலட்சிய மனப்பான்மை உள்ள இந்திய ஆதிக்க வர்க்கத்தின் செயல்பாடுகள் இந்த அளவில் தான் இருந்தது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்? போராளிகளை வளரவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் இவர்களே வளர்க்கும் சூழ்நிலையும் உருவானது. ஆனாலும் ஒவ்வொரு சமயத்தில் போராளிகளை அழித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

ஆனால் ஒருவரை அழிக்க என்று அனுப்பப்பட்டவர்களே “ஆசைப்பட்டு”க் கட்சி மாறியதும் நடந்தது.

ஒவ்வொரு நாட்டின் தூதுக்குழு, வர்த்தகப் பிரதிநிதிகள் என்று இந்தியாவிற்குள் வந்த செய்திகளை நாம் அன்றாடம் படிக்கும் செய்திகளுக்கு முன்னால் பல விசயங்கள் இங்கே தீர்மானமாய் செயல்படுத்தப்பட்டு இருக்கும்.

ஒப்பந்த காட்சிகள் என்பது வெளிப்பார்வைக்கு மட்டுமே. சொல்லப்போனால் அன்று கையெழுத்து போடும் வைபவம் மட்டும் தான் நடந்தேறும். இது போலத்தான் இந்த இலங்கையில் நடந்தேறிய ஜெயவர்த்னே ராஜீவ் காந்தி ஒப்பந்தமும். இந்த ஒப்பந்தம் என்பது பிரபாகரன் மூலம் நடத்தப்பட்ட பேரங்கள், ஜெயவர்த்னே மூலம் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் என்பதையும் தாண்டி பல நிகழ்வுகள் கண்ணுக்குத் தெரியாமல் நடந்தேறியது.

1987 ஆம் ஆண்டுத் தொடக்கத்திலேயே இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத் தொடக்கப் பெற்ற பேச்சுவார்த்தைக்கென்று உள்ள குழுவில் இருந்தவர்களை தேர்ந்தெடுத்தவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

அதிபராக இருந்த ஜெயவர்த்னே அமைச்சரவையில் இருந்த காமினி திசநாயகா, கொழும்பில் இருந்த தொழில் அதிபர் சி.டி.ஏ.ஸ்காப்டெர் கடைசியாக இந்தியாவின் சார்பாகத் தி ஹிண்டுவில் அப்போது துணை ஆசிரியராக இருந்த என்.ராம்.

இது எப்படித் தொடங்கியது?

அப்போது காமினி திச நாயகா இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவராகவும் இருக்கப் புரிந்துணர்வின் அடிப்படையில் இந்திய (அப்போதைய) கிரிக்கெட் வாரிய தலைவர் என்.கே.பி. சால்வே மூலம் இந்திய அரசாங்கத்திடம் செய்திகள் கடத்தப்பட்டது.

இந்த இடத்தில் மற்றொரு விசயம்.

இந்திய இலங்கை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக ஒன்று சேர்ந்து பேசிய ஆண்டு ஜுலை 12 1987. ஆனால் அதற்கு முன்னால் பல இந்திய ஜவான்களை (ஜுன் 25) ஐலேண்டு பிரைடு கப்பலில் ஏற்றப்பட்ட நிவாரணப்பொருட்களுடன் ஒன்றாகக் கலந்து வந்து மறைவிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மற்றொரு கொடுமை வந்தவர்கள் தங்கியிருந்த இடங்களில் செய்த கொடுமைகளும், போட்ட பார்ட்டி கூத்துகளும் அவர்களை வெளிப்படையாகக் காட்டிகொடுத்து விட்டது.

அன்று முதல் இன்று வரைக்கும் இந்தியாவில் உள்ள அதிகாரவர்க்கத்தினருக்கு இருக்கும் ஆசைகளும், செய்து கொண்டுருக்கும் செயல்பாடுகளுக்குச் சம்மந்தம் என்பதே நீங்கள் காணமுடியாது. தீர்க்கமான பார்வையோ, தீர்மானமான கொள்கையோ ஏதும் இல்லை. நோக்கம் தவறாக இருக்கலாம். ஆனால் பாதைகள் தெளிவாக இருந்தால் தானே கொடுத்த பொறுப்பை நிறைவேற்ற முடியும்?

இந்தக் கொடுமை தான் இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படையிலும் தொடர்ந்தது.

தோற்றுப் போய் திரும்பி அழைத்துக்கொண்ட போதும் இறுதியில் ராஜீவ் மரணம் வரைக்கும் விடாது கருப்பு போல் தொடர்ந்து கொண்டுருந்தது. அப்படி என்றால் இப்போது? இவர்களை முழுமையாக நம்பியிருந்தால் ஏன் சோனியா காந்தி தன் மகளை விட்டுச் சிறைச்சாலையில் நளினியை சந்திக்க ஏற்பாடு செய்துருப்பாரா?

ராஜீவ் காந்தி புலனாய்வில் ஈடுபட்ட ஒரு அதிகாரியை எக்காரணம் கொண்டு இனி என்வீட்டுப் பக்கம் வராதீர்கள் என்று சொல்லி விரட்டி அடித்து இருப்பாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *