1. தயாநிதி மாறன் — மலையாய் மாறிய (ஸ்பெக்ட்ரம்) அலை

மழைக்காலம், வெயில் காலம் என்பது போலவே இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது ஸ்பெக்ட்ரம் காலம். திமுகவின் ஆட்சியைக் காவு வாங்கிய காரணங்களில் ஒன்றாக இருந்த இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி நாளொரு மேனியும் புதுப்புது வண்ணத்துடன் செய்திகள் வந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு செய்திக்குள்ளும் ஓராயிரம் மர்ம முடிச்சுகள். முதலில் திஹாருக்குத் தனியாகப் போன ராசா துணைக்கு ஒரு கூட்டத்தையே சேர்த்து அழைத்துக் கொண்டார்.

இப்போது ‘ மெல்லிய மலர் வாடுகின்றது’ என்ற தத்துவத்தைக் கலைஞர் உதிர்க்கும் அளவிற்குக் கனிமொழி பேசும் மொழி திஹார் மொழியாக மாறி நிபந்தனை ஜாமீனில் வெளியே இருக்கின்றார். ஆனால் இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஜயின் வலையில் சிக்கியது அத்தனை கெண்டை கெளுவை மீன்கள் மட்டுமே. இன்னும் சுறா மீன்கள் சிக்கியபாடில்லை. ஆட்சியில் இருக்கும் வரைக்கும் சம்மந்தப்பட்ட காங்கிரஸ் தலைகளுக்கும் கவலையில்லை..

இதில் விட்டகுறை தொட்டகறை ஒன்று உள்ளது.

அவர் தான் திருவாளர் தயாநிதி மாறன்.

தொலைக்காட்சி துறையில் தொழில் தொடங்கிய குறுகிய காலத்திற்குள் மாறன் குடும்பம் பெற்ற வளர்ச்சி அசாதரணமானது.

15 வருடங்களுக்குள் உலகப் பணக்காரர் வரிசையில் கோலோச்சியவர்கள் செய்த உள்ளூர் தாதாதனங்கள் இப்போது தான் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. தயாநிதி சோனியாவை ஆண்டி என்றாலும் அம்மா தாயே என்றாலும் கூட உச்சநீதி மன்றத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஆப்பை கழட்ட முடியாது போலிருக்கு. அவரின் அதளபாதாளம் கண்ணுக்குத் தெரிவதால் அண்ணாத்தே நீ என்றைக்கு? என்பது போல் நிலவரம் சூடாய் போய்க் கொண்டிருக்கிறது.

நாம் இப்போது பார்க்கப் போவது காங்கிரஸ், திமுக, மாறன் வகையறாக்களைப் போல இதுவரைக்கும் வெளியே தெரியாத ஒரு நபரும் உண்டு. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது அலைக்கற்றை மூலம் இந்தியாவின் கஜானாவிற்கு முறைப்படி சேர வேண்டிய பணத்தைத் திருடியவர்களின் காவிய கதை. ஆனால் சன் குழுமமத்தால் தொழில் ஒப்பந்தம் போட்டிருக்கும் மலேசிய நிறுவனமென்பது (ASTROI) ஒருங்கிணைந்த இந்தியாவை எதிர்காலத்தில் துண்டாக்கி விடக்கூடிய சீன உளவு நிறுவனத்தின் கைப்பாவையாகும். அதன் முதலாளி வெகுஜன ஊடகம் எதுவும் இதுவரையிலும் சுட்டிக்காட்டப்படாத மலேசிய தொழில் அதிபர் தமிழர் ஆனந்தகிருஷ்ணன். இவருடன் சன் தொலைக்காட்சி போடப்பட்ட ஒப்பந்தங்களுக்காகப் பலிகிடா ஆக்கப்பட்டவர் தான் இப்போது பரபரப்பாய் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சிவசங்கரன்.

யாரிந்த ஆனந்தகிருஷ்ணன்? .

இவருக்கும் ஈழத்தில் நடந்த கடைசிக் கட்ட போராட்ட நிகழ்வுக்கும் சம்மந்தம் உண்டென்றால் நம்பமுடியுமா?

இவரின் கைங்கர்யம் வெறுமனே தமிழ்நாடு, இந்தியா என்றில்லாமல் தெற்காசியா முழுக்கப் பரவியுள்ளது. குறிப்பாக ஈழம் சார்ந்த அத்தனை பொருளாதார உடன்படிக்கைகளுக்கும் சீன அரசு இவரை முன்னிறுத்தியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேம்போக்கான பார்வையில் இவர் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி. மலேசியாவின் அசைக்க முடியாத ஆளுமை. மலேசியாவின் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவரின் தயவும் வேண்டும். ஆனால் இவர் அடிப்படையில் சீனாவின் பொருளாதார அடியாள்.

இன்று வரையிலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த விமர்சனத்திறகு பஞ்சமில்லை. ஏன் விடுதலைப்புலிகள் இயக்கம் போரில் தோற்றது? எப்படித் தோற்கடித்தார்கள்? ஏன் இத்தனை நாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து இலங்கைக்கு உதவி செய்தது? இந்தியாவுக்குப் பிரபாகரன் மட்டும் தான் பிரச்சனையா? போன்ற ஏராளமான கேள்விகளுக்கு நாம் பதில் தேடினால் அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பவர் இந்த மலேசிய தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன்.

மகிந்த ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு நாடும் இலங்கையின் மேல் வைத்திருந்த கண்ணும், எதிர்பார்த்துக் காத்திருந்த தருணங்கள் போன்ற அத்தனையும் அனந்த கிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்றை நாம் தோண்டும் போது கப்பு வாடை நம் மூக்கை துளைக்கும்.

மனித உரிமை மீறல், அனாதை ஆக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், முகாமில் உள்ளவர்கள் என்று தேய்ந்து போன வார்த்தைகளுக்குப் பின்னால் இருப்பது ஒவ்வொன்றும் சர்வதேச ஒப்பந்தங்களும் அதற்காக அடித்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளுமே ஆகும். 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈழத்திற்குள் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு சீன ஒப்பந்தங்களுக்குப் பின்னாலும் அனந்த கிருஷ்ணனின் பங்களிப்பும் உண்டு. இவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு துக்கடா வேடத்தில் துட்டுக்காக அடித்துக்கொண்டிருக்கும் இவர்களைப் பார்த்து விடலாம்.

தொழில் அதிபர் சிவசங்கரன் யார்?

திருவண்ணாமலை பகுதியில் பிறந்த 54 வயதான பி.ஈ பட்டதாரி. தொடர்ச்சியாக எம்.பி.ஏ பட்டத்தை அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பெற்றவர். உலகம் முழுக்கப் பரவியிருக்கும் இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 20 ஆயிரம் கோடி ரூபாய். இன்று உலகம் முழுக்க இரும்புத்தொழிலில் சக்ரவர்த்தியாகக் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இந்தியரான சுனில் மிட்டலின் தொழில் தத்துவத்தைப் போலவே சிவசங்கரனும் நலிந்த நிறுவனங்களை வாங்கி, அதனை வளர்த்து, சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்றுவிட்டு அடுத்தத் தொழிலை நோக்கி நகர்ந்து போய் விடுவது என்ற கொள்கையை வைத்திருப்பவர்.

இவர் வைக்காத துறையே இல்லை என்கிற அளவிற்குத் தொழில் மூளையைக் கொண்டவருக்குத் தேடிக் கொண்ட தொழில் ரீதியான எதிரிகளும் அதிகம். கணினி, காற்றாலை முதல் பாமாயில், மின் திட்டங்கள் வரைக்கும் அத்தனை துறைகளிலும் ஆட்சி செலுத்திக் கொண்டிருப்பவர். பின்லாந்து முதல் இந்தோனேசியா வரைக்கும் இவரின் வேர்கள் பரவாத நாடுகளே இல்லை என்கிற அளவிற்கு மல்டி பில்லியனர். இவரின் மற்றச் சுயதிறமைகளைப் பார்ப்பதை விட இவருக்கும் மாறன் சகோதர்களுக்கும் உருவான மோதலின் ஆணி வேரை பார்த்துவிடலாம். இவருக்கு வேறெங்கும் உருவாகத பிரச்சனைகள் இவருக்கு இந்தியாவில் மட்டும் உருவாகக் காரணம் என்ன?

சன் தொலைக்காட்சி சேட்டிலைட் துறையில் காலடி வைப்பதற்கு முன்பே இந்தத் துறையில் இருப்பவர்கள் ஜீ ( ZEE ) குழுமம். இந்தக் குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா. இவர்கள் தான் மாறன் சகோதரர்களுக்கு நேரிடையான போட்டியாளர்கள். ஆனால் இன்று வரைக்கும் தமிழ்நாட்டில் ஜீ தொலைக்காட்சி அரசாங்கம் நடத்தும் பொதிகை போலவே பெயருக்கென்று தான் ஓடிக் கொண்டிருக்கிறது. . காரணம் சன் நிறுவனத்தின் ஆதிக்கத்தை .தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நன்றாகவே தெரியும்.

மாறன் சிவசங்கரனை துரத்தி துரத்தி பழிவாங்கி நாட்டைவிட்டே ஓட வைத்த சம்பவங்கள் எதற்காக? .

ஜனவரி 5 2005 முதல் சிவசங்கரன் சுபாஷ் சந்திராவுடன் கைகோர்த்து டிஷ்நெட் நிறுவனத்தை நடத்த தங்களின் தொழில் எதிரியுடன் சேர்ந்த சிவசங்கரன் சன் நிறுவனத்திற்கு நிரந்தர எதிரியாக மாறிப்போனார். முரசொலி மாறனுக்கு நண்பராக இருந்த சிவசங்கரன் மகன்களுக்கு நிரந்தர எதிரியாக மாற மாறன் சகோதர்களின் அரசியல் செல்வாக்குச் சிவசங்கரனை நாடு விட்டு ஓடும் அளவிற்கு உருவாக்கத் தொடங்கியது. சிவசங்கரன் இந்தியாவில் நடத்திக் கொண்டிருந்த தொழில்களுக்கு உண்டான பாதிப்புகள் ஒரு பக்கம். ஜீ குழுமத்துடன் தான் நடத்தி வந்த டிஷ்நெட் தொழிலுக்கு உருவான இடைஞ்சல்கள் என்று சன் குழுமத்தால் உருவாகத் தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறத் தொடங்கினர். இதைத்தான் சிபிஜ வசம் சிவசங்கரன் வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார் என்று நம்பப்படுகின்றது.

தயாநிதி மாறன் மிரட்டலின் மூலம் சிவசங்கரனின் ஏர்டெல் நிறுவனத்தின பங்குகளைப் பெற்ற அஸ்ட்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்தகிருஷணன் பற்றியும், ஈழத்தில் ராஜபக்ஷே ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, வந்த பிறகு நடந்த சர்வதேச ஒப்பந்தங்களைப்பற்றியும் இனி பார்க்கலாம்.

இதன் தாக்கம் எதிர்கால இந்தியாவிற்கு எவ்விதமான அச்சுறுத்தல்களை உருவாக்கும்??? அதுவே நமக்கு இந்திய உளவுத்துறையின் “சிறப்பு” அம்சங்களையும் நமக்குப் புரியவைக்கும்.

தோழர் பாமரன் அவர்கள் முருகன் என்பவர் எழுதிய அழிவின் விளிம்பில் தமிழினம் (முற்றுகைக்குள் இந்தியா) என்ற கோப்பை எனக்கு அனுப்பியிருந்தார்.

அச்சுக்காகத் தயாராக இருந்த அந்தப் பிடிஎப் கோப்பு ஏராளமான அதிர்ச்சிகளைத் தந்தது. இலங்கையை முன்னிறுத்தி சீன செய்து வரும் அத்தனை தில்லாலங்கடி வேலைகளையும் ஆதாரப்பூர்வமாகப் பல்வேறு தகவல்களுடன், இணையதளங்கள் உதவியுடன் எழுதியிருந்தார்.

ஒரு வருடத்திற்கு மேலான போதும் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளதா என்பது குறித்துத் தகவல் இல்லை. இனி வரும் பெரும்பான்மையான தகவல்கள் அவரின் கோப்பிலிருந்து எடுத்தாளப்படுகின்றது.

License

ஈழம் - வந்தார்கள் வென்றார்கள் Copyright © 2013 by ஜோதிஜி. திருப்பூர். All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *